காங்கிரசுக்கு குட்-பை; பாஜகவில் விஜயதாரணி! செல்வப்பெருந்தகைக்கு சிக்கல்!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 9:15 pm
selva
Quick Share

தமிழக காங்கிரஸ் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட செல்வப் பெருந்தகை பதவி ஏற்றுக் கொண்டது முதலே அடுத்தடுத்து அவருக்கு சோதனைகள் வருவதை காண முடிகிறது. அவை மாநில காங்கிரசுக்கு மட்டுமின்றி டெல்லி தலைமைக்கும் பெருத்த சவாலாக அமைந்து இருக்கிறது.

குறிப்பாக விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான விஜயதாரணி பாஜகவில் இணைவதற்காக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் என்று தகவல் வெளியானபோது அதை செல்வப் பெருந்தகை அடியோடு மறுத்தார்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக விஜயதாரணி டெல்லி சென்று இருக்கிறார். அந்த வேலை முடிந்ததும் அவர் சென்னை திரும்பி விடுவார். பிப்ரவரி 19ம் தேதி நடக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்வார். விஜயதாரணியை வலை வீசி பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. அதில் அவர் சிக்கிக்கொள்ள மாட்டார். அந்த முயற்சி ஒரு போதும் நடக்காது என்று செல்வப் பெருந்தகை மிகுந்த நம்பிக்கையோடு கூறினார்.

ஆனால் அவர் சொன்னபடி அப்படி எதுவும் நடக்கவில்லை. பிப்ரவரி 22ம் தேதி முடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்தது. அதில் ஒரு நாள் கூட விஜயதாரணி கலந்து கொள்ளவே இல்லை.

இந்த நிலையில்தான் தமிழக காங்கிரஸ் மட்டும் அல்லாமல் சோனியா, ராகுல், கார்கே மூவரும் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி பிப்ரவரி 24ம் தேதியான இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு விட்டார்.

விஜயதாரணி பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். மூன்று தலைமுறைகளாக அவருடைய குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளனர். தவிர விஜயதாரணி தமிழக சட்டப்பேரவையில் கட்சியின் முதன்மை கொறாடாகவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளராகவும் பதவி வகித்தவர். அப்படிப்பட்டவரையே பாஜக தன் பக்கம் இழுத்து விட்டது.

இது அகில இந்திய காங்கிரசுக்கு வேண்டுமானால் மிகச் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் மாநில காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட பின்பு செல்வப் பெருந்தகைக்கு விழுந்த முதல் பலத்த அடியாக அரசியல் வட்டாரத்தில் இது பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் போனில் தொடர்பு கொண்டு பேசிய பிறகும் கூட விஜயதாரணி எந்தப் பிடியும் கொடுக்கவில்லை.

அதைவிட மிகுந்த ஆச்சரியம் விஜயதாரணி டெல்லியில் முகாமிட்டிருந்த இந்த ஒரு வார காலத்தில் தனக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் யார் போன் செய்தாலும் அதை அவர் எடுக்கவில்லை என்பதுதான்.

இந்த நிலையில்தான் விஜயதாரணி ஒருபோதும் பாஜகவில் இணையவே மாட்டார் என்று அழுத்தம், திருத்தமாக சொன்ன செல்வப் பெருந்தகையின் முகத்தில் நன்றாக கரி பூசப்பட்டிருக்கிறது.

பாஜகவில் சேர்ந்த பின்பு விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசும்போது, “காங்கிரசில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன். அண்ணாமலை பாத யாத்திரையால் தமிழக பாஜகவில் புத்துணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன்”என்று அதிரடி காட்டினார்.

விஜயதாரணியால் தமிழக காங்கிரசுக்கு சில இடியாப்ப சிக்கல்களும் முளைத்துள்ளன. அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அங்கு காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். அத்துடன் விஜயதாரணியின் எம்எல்ஏ பதவியை பறித்தால் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு உருவாகும். அந்தத் தொகுதியில் திமுக தனது வேட்பாளரை நிறுத்த விரும்பினால் அதை தடுப்பதும் கடினம்.

அடுத்ததாக செல்வப் பெருந்தகை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அன்றே விசிகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வன்னி அரசு தனது X சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார்.

“இனி காங்கிரசுக்கு தேர்தலில் வைப்புத் தொகை கிடைக்குமா? என்பதே சந்தேகம்தான். கழுதை தேய்ந்து சித்தெறும்பான கதையாக இருக்கிறது” என்று அதில் மிகக் கடுமையாக சாடி இருந்தார்.

இதற்கு முக்கிய காரணம் 2006ல் செல்வப் பெருந்தகை விசிக சார்பில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதுதான். 2008ம் ஆண்டு திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு மாயாவாதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து தமிழக தலைவர் ஆனார். பிறகு 2010ல் தன்னைக் காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

இதனால்தான் என்னவோ வன்னி அரசு தனது X பதிவில் மறைமுகமாக செல்வப் பெருந்தகையை போட்டு தாக்கி இருந்தார். ஆனால் ஒரு கூட்டணியில் இருந்து கொண்டே அதே கூட்டணியில் உள்ள இன்னொரு பிரதான கட்சியின் தலைவரை திட்டியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்த அரை மணி நேரத்திற்குள் அந்தப் பதிவை வன்னி அரசு நீக்கி விட்டார்.

ஆனாலும் கூட இதற்கு செல்வப் பெருந்தகை பதிலடி கொடுக்கத் தயங்கவில்லை. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும்
ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்று தனது பதவி ஏற்பு விழாவில் ஒரு போடு போட்டார். அதாவது விசிக அரசியலுக்கு வந்து 25 ஆண்டுகள்தான் ஆகிறது. காங்கிரசோ 135 ஆண்டுகளுக்கும் மேலாக மாபெரும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பது
அதில் பூடகமாக கூறப்பட்டிருந்தது.

இரு கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்தாலும், இந்த விவகாரம் மட்டும் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது. இதுவும் செல்வப் பெருந்தகைக்கு சவாலான ஒன்றுதான்.

மூன்றாவதாக, திமுக தலைமையிடம் தமிழக காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகளை செல்வப் பெருந்தகை பெற்றுக் கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக எம்எல்ஏக்கள் யாராவது அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினால், அவர்கள் பதில் கூறுவதற்கு முன்பாக செல்வப் பெருந்தகை எல்லோரையும் முந்திக்கொண்டு எழுந்து திமுக தலைவர்கள் போல கிண்டலாக பேசி பதிலளிப்பது உண்டு.

இதன் மூலம் தமிழக காங்கிரசில் என்னை விட்டால் திமுகவுக்கு ஆதரவாக பேச ஆளே இல்லை என்பதைப் போல அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். அப்படிப்பட்ட செல்வப்பெருந்தகைக்குத்தான் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைமையுடன் நேரடியாக பேச வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்து அல்லது ஆறு தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்கு திமுக ஒதுக்க விரும்புகிறது என்று கூறப்படும் நிலையில் 2019 தேர்தல் போல ஒன்பது தொகுதிகளை வாங்கிவிட்டாலே அது இமாலய சாதனையாக அமையும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த மூன்று பெரும் சுமைகளையும், அதனால் ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் செல்வப் பெருந்தகை சமாளிப்பதோடு மட்டுமின்றி, தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருக்கு அதிகரித்து இருக்கிறது.

செல்வப் பெருந்தகையின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது!

Views: - 142

0

0