அரசு ஒதுக்கும் ஒரு ரூபாயில் 85 பைசா முறைகேடு…. ஊழலை தடுக்க ‘டிஜிட்டல் இந்தியா’ தான் தீர்வு ; ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 1:51 pm
Quick Share

திருச்சி ; முறைகேடான ஊழலுக்கு தீர்வாக ‘டிஜிட்டல் இந்தியா’ இருப்பதாக திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள, இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்), நடைபெற்ற ‘தக்‌ஷா 2.O’ என்ற தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ரவி பங்கேற்றார். ஐஐஎம் இயக்குனர் பவன்குமார் சிங், டீன் சரவணன், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்வில் ஆளுநர் ரவி பேசியதாவது:- மத்திய அரசு தொலைநோக்கு பார்வையுடன், ஐந்தாண்டு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. அதனால் தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, நாடு மேம்பட்டு வருகிறது. சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி படிக்கும் கிராமப்புறத்தை சேர்ந்த ஒரு மாணவன், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். இதனால், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அதனால் நான் அந்த மாணவரை அழைத்து பாராட்டினேன். உலகில் சூரிய ஒளி ஒன்றுதான் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக உள்ளது. அதை நாம் பரவலாக பயன்படுத்த துவங்கி விட்டோம்.

இந்தியாவில் ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு, 15 பைசா தான் சென்றடைகிறது. மீதமுள்ள 85 பைசா முறைகேடாக ஊழலுக்கு இரையாகிறது. இதற்கான தீர்வாக, ‘டிஜிட்டல் இந்தியா’ இருக்கிறது. இந்தியாவில், 5 மில்லியன் ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன. இவர்களில், 56சதவீதம் பெண்கள். இதன்மூலம், இவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால் இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை.

நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய் முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் சிறுதொழில் தொடங்க வழிவகை செய்யட்டுள்ளது. உலகில் பொருளாதார சக்திமிக்க நாடுகளில், ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியா தனது நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது (2047ம் ஆண்டு), சுயசார்புள்ள, உலகத்தின் முதன்மை நாடாக (வல்லரசு நாடாக) இந்தியா விளங்கும், என தெரிவித்தார்.

Views: - 961

5

5