”நானும் டெல்டா மாவட்டத்துக்காரன்” என அடிக்கடி சுய தம்பட்டம்… விவசாயிகளை காக்க மாபெரும் போராட்டம் ;இபிஎஸ் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
26 August 2023, 1:24 pm
Quick Share

தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும். எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ந்தேதி வரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி. தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப் பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 110 அடிக்கு மேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விபரங்களைப் பெறாமல், இந்த நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசின் முதலமைச்சர் ஜூன் 12 அன்று மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு, ஜூலை மாதத்தில் படிப்படியாக 16000 கனஅடியாக உயர்த்தி ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்து விடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம்-54.91 அடி (120 அடி), நீர் இருப்பு 20.55 டி.எம்.சி. (மொத்த இருப்பு 93.47 டி.எம்.சி.). நீர் வரத்து சுமார் 12,000 கன அடி. தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடி. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் பற்றாத நிலையில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை தி.மு.க. அரசு வாயையே திறக்கவில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த தி.மு.க. அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நிவாரணம் பெற இயலாது. எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

மேலும், இன்றுவரை சம்பா சாகுபடி குறித்தும், போதிய விதை நெல் மற்றும் உரங்கள் விநியோகம் குறித்தும் எந்தவிதமான அறிவிப்பையும் இந்த தி.மு.க. அரசு வெளியிடவில்லை. எனவே, எனது தலைமையிலான அம்மாவின் அரசு வறட்சிக் காலத்தில் செய்ததுபோல், சம்பா சாகுபடி மேற்கொள்ளும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சம்பா மற்றும் தாளடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்து தேவையான உதவிகளைச் செய்திட வேண்டும் என்று, ”நானும் டெல்டா மாவட்டத்துக்காரன்” என்று அடிக்கடி சுய தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

டெல்டா விவசாயிகள் படும் வேதனையை கவனத்தில் கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறோம் என்று பசப்புவார்த்தை பேசி பிரச்சனையை திசை திருப்ப, முதலைக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தான்தோன்றித்தனமான செயல்பாட்டை அ.தி.மு.க.வின் சார்பிலும், அல்லலுறும் வேளாண் பெருமக்கள் சார்பிலும் வன்மையாக கண்டிக்கிறேன். தொடர்ந்து தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 342

0

2