100 ஆண்டுகளுக்கு முன் இருந்த இரட்டை முறை ஆட்சியை கொண்டு வர ஆளுநர் முயற்சி : அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2023, 9:44 am
EVVelu -Updatenews360
Quick Share

திமுக அரசின் இரண்டு ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூர் வடக்கு மாநகர திமுக சார்பில் அண்ணா காலனி பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் தமிழக அரசு இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக திமுக ஆட்சியில் செய்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆளுநர் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த இரட்டை ஆட்சி முறையை தற்போது மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறார். திமுக மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டோம்.

தாய் மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் ஆளுநர் முயற்சிக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருகிறார். தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் கருத்து, பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருகிறார்.

இதன் காரணமாகவே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை. பெரியார் முதல் தற்போது உள்ள திமுக அரசு வரை அனைவரும் விரும்புவது சமூகநீதியை தான்.

ஆனால் ஆளுநர் கொண்டு வர முயல்வது மனுதர்மம் என குற்றம் சாட்டினார். இந்த பொதுக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 307

0

0