பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? தீயணைப்புத் துறையினரின் அறிவுரை..!!!

13 November 2020, 1:50 pm
diwali celebration - updatenews360
Quick Share

தூத்துக்குடி : நாடு முழுவதும் நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பாக இந்தப் பண்டிகை கொண்டாடுவது குறித்து தீயணைப்புத்துறையினர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது : தீபாவளி பண்டிகையொட்டி, பட்டாசுகளை வெடிப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். எப்போதும், பட்டாசு வெடிக்கும் போது, ஒரு பக்கெட் தண்ணீரை அருகாமையில் வைத்துக் கொள்ள வேண்டும். வெடிக்காத பட்டாசுகள், பயன்படுத்தப்பட்ட கம்பி மத்தாப்புகளின் மீது தண்ணீரை தெளிக்க வேண்டும். திறந்த வெளியில் நீண்ட பத்திக்குச்சியின் மூலம் நின்றவாறே பட்டாசுகளை கொளுத்த வேண்டும்.

பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கண்காணிப்பு இல்லாமல் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பட்டாசுகளை சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் போடுவதை தவிர்க்கவும். பட்டாசுகளை வெடிக்கும் போது காலணிகளை அணிவதுடன், உடலோடு ஒட்டிய பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம். வெடிக்காத பட்டாசுகளை கைகளில் எடுப்பதை தவிர்க்கவும். வீட்டுக்குள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை குவியல் குவியலாக வைத்தோ அல்லது ஒரு பட்டாசை மற்றொரு பட்டாசுடன் இணைத்து வைத்தோ வெடிக்கக் கூடாது.

விளம்பரத்திற்காக பட்டாசுகளை கைகளில் பிடித்தோ, தூக்கி வீசியோ, பாட்டில்கள், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட பொருட்களை குப்புறப்படுக்க வைத்தோ வெடிக்கக் கூடாது. குறிப்பாக, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது காயம் ஏதேனும் ஏற்பட்டால், அந்தப் பகுதியை உடனடியாக குழாய் நீரில் படுமாறு காண்பிக்க வேண்டும். ஒருபோதும் தேய்க்கக் கூடாது. தீக்காயத்தின் மீது இங்க் மற்றும் மை போன்றவற்றை தடவக் கூடாது. காயத்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக, ஒவ்வொரு முறை பட்டாசுகளை வெடித்து விட்டு பிற பொருட்களை தொடுவதற்கு முன்பாகவே, ஏதேனும் உணவுகளை உட்கொள்வதற்கு முன்னதாகவோ கைகளை சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 39

0

0

1 thought on “பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? தீயணைப்புத் துறையினரின் அறிவுரை..!!!

Comments are closed.