தரமான பொங்கல் பரிசோடு ரூ.1,000 வழங்கியிருந்தால் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சிருக்கலாம் : புலம்பும் திமுக எம்எல்ஏ!!
Author: Udayachandran RadhaKrishnan22 ஜனவரி 2022, 4:18 மணி
மயிலாடுதுறை : பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தால் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கலாம் என திமுக எம்எல்ஏ பேசியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நகர்ப்புற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் முனைப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது . அதில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் முடக்கியுள்ளனர். வேட்பாளர் நேர்காணல், கூட்டணி வியூகம் என அடுத்தடுத்து தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக செயற்குழு உறுப்பினரும், சீர்காழி சட்டமன்ற எம்எல்ஏவிமான பன்னீர் செல்வம், சீர்காழி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கட்சி தலைமை முடிவு எடுத்து அறிவிக்கும் வேட்பாளருக்கு போட்டியாக திமுகவை சேர்ந்தவர்கள் சுயேட்சையாகவோ வேறு எந்தவகையிலும் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு எதிராக செயல்படக்கூடாது என்றும், போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரவுள்ள கூட்டுறவு சங்க பொறுப்புகள் வழங்கிட பரிசீலிக்கப்படும் என்றார்.
மேலும் பேசிய அவர், மக்கள் எதிர்பார்த்ததை போல பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்திருந்தால் நமக்கு 100 சதவீதம் வெற்ற கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்திருக்கலாம். தற்போது முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால் மட்டும் 100 சதவீத வெற்றியை கண்டிப்பாக அடைய முடியும் என பேசினார்.
0
0