சென்னையில் ஐபிஎல் போட்டி பாக்க போறீங்களா? மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. ஆனா ஒரு கண்டிஷன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2024, 9:19 am
chennai
Quick Share

சென்னையில் ஐபிஎல் போட்டி பாக்க போறீங்களா? மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. ஆனா ஒரு கண்டிஷன்..!!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

இதனையொட்டி இன்று இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு அரசினர் தோட்டம் அல்லது சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் காரணமாக பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆன்லைனில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன ஆப், பேடிஎம் ஆப், போன்பே ஆப், வாடஸ் அப் போன்றவை மூலம் பயணச்சீட்டை பெறலாம். மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம்.

பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் பயணிக்கலாம்.

இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரெயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 91

0

0