ஈஷா யோகா மையம் வனப்பகுதியை வளைத்துப் போட்டதா…? ஜக்கி விவகாரத்தில் உண்மைகள் அம்பலம்!!
Author: Babu Lakshmanan13 December 2021, 4:05 pm
கோவையில் பிரமாண்டம்
கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள
ஈஷா யோகா மையம் உலக அளவில் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக இன்று உருவெடுத்துள்ளது. 150 ஏக்கர் பரப்பில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட பகுதியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த மையத்தை 1992-ம் ஆண்டு நிறுவினார்.
2017ல் இங்கு112 அடி உயரமும், 500 டன் எடையும் கொண்ட ஆதியோகி சிலை நிறுவப்பட்டது. இந்துக்களின் கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மையமாகத் திகழும் இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து ஏராளமானோர் தங்கி பயிற்சியும் பெறுகின்றனர்.
வன அபகரிப்பு
இந்த மையம் தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவுக்கு எந்தவொரு எதிர்ப்பும் இல்லை. 2010-க்கு பிறகு, உலக அளவில் ஈசா யோகா மையம் புகழ் பெறத் தொடங்கிய பின்னரே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு அவர் உள்ளானார்.
யானைகளின் வழித்தடத்தை மறித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது, வனப்பகுதி நிலத்தையும் அரசுக்குத் தெரியாமல் ஜக்கி வாசுதேவ் வளைத்துப் போட்டு இருக்கிறார் என்பது இவற்றில் மிக முக்கியமான குற்றச்சாட்டுகள்.
கார்ப்பரேட் சாமியார்
மேலும் பழங்குடி மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலத்தையும் அபகரித்து விட்டார், பிரமாண்ட சிவன் சிலையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ஈசா யோகா மையத்தின் மீது வைக்கப்பட்டன. இது தொடர்பாக சிலர் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.
ஜக்கி வாசுதேவுக்கு அவருடைய சமூக சேவையை பாராட்டி 2017-ல் மத்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியபோது கூட அவரை விடவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அவருக்கு விருது வழங்கக் கூடாது என்றும், ஈஷா யோகா மையத்திற்கு 24 மணி நேரமும் தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்க கூடாது என்றும் ஒரு அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் ஒரு டஜன் வழக்குகள் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள், மலைவாழ் மக்களின் சேவகர்கள், பூமியின் காவலர்கள் என்று பல்வேறு ரூபங்களில் வழக்குகளை தொடர்ந்தவர்களும் உண்டு. காமராஜரின் கனவை சிதைக்க நினைக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கிவாசுதேவ் என்றும் அவர் கேலியாக பேசப்பட்டார்.
காட்டுப் பகுதிகளையும், யானை வழித்தடங்களையும் ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளதாகப் பல ஆண்டுகளாகவே பரவலாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், இதனை அந்த மையம் தொடர்ந்து மறுத்தே வருகிறது.
அமைச்சர் சூளுரை
கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஈஷா யோகா மையம் பற்றி தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் ஒரு கருத்தை தெரிவித்தார். அவர் கூறும்போது, “இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈஷா யோகா மையத்தில் என்ன முறைகேடுகள் நடந்துள்ளன என்பது பற்றி விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் சிஏஜி அறிக்கையில் சில முக்கிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதை நானும் கவனித்துள்ளேன். சிஏஜி அறிக்கையிலுள்ள அம்சங்களை நானும் பரிசீலிக்க உள்ளேன்” என்று குறிப்பிட்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
“இன்னொரு அமைச்சரின் இலாகாவிற்குள் நிதியமைச்சர் எப்படி தலையிட முடியும் என்ற கேள்விகள் எழுந்தவுடன், இனி நான் ஜக்கி வாசுதேவ் பற்றி பேசப்போவதில்லை” என்று அமைச்சர் தியாகராஜன் சில நாட்களிலேயே ஜகா வாங்கிவிட்டார்.
யானைகள் வழித்தடமா..?
இந்த நிலையில்தான் “ஈஷா யோகா மையம் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதா?… யானைகளின் வழித்தடத்தை வழிமறித்து ஈசா யோகா மையம் அமைக்கப்பட்டுள்ளதா?” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, “ஈஷா யோகா மைய கட்டுமானத்திற்காக வனப் பகுதியில் நிலங்கள் எதுவும் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. மேலும், இந்த மையம் அமைந்துள்ள இடத்தில் யானைகள் வழித்தடம் எதுவுமே கிடையாது” என்று தெளிவாக கூறியுள்ளது.
எதிர்ப்பாளர்களுக்கு பேரிடி
தமிழக அரசு தெரிவித்துள்ள இந்த பதிலை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள சமூக ஆர்வலரும், பிரபல மருத்துவ நிபுணருமான சுமந்த் சி ராமன், “சமூக போராளிகளின் கவனத்திற்கு… ஈஷா யோகா மையம் யானைகள் வழித்தடத்தையோ அல்லது வன நிலத்தையோ ஆக்கிரமிக்கவில்லை என்று ஆர்டிஐ பதிலில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை அமைச்சர் பிடிஆர் தியாகராஜனுக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அந்த பதிவுடன் ஆர்டிஐயில் பெறப்பட்ட தகவல் பக்கத்தையும் அவர் இணைத்துள்ளார்.
அதாவது ஈஷா யோகா மையத்தின் மீது யார் யாரெல்லாம் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தனரோ அவர்களுக்கெல்லாம் தமிழக அரசின் வன இலாகா கொடுத்துள்ள விளக்கம் பேரிடியாக அமைந்துள்ளது.
வழக்குகள் தொடரவேண்டும்
இதுகுறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “போலி சமூகப் போராளிகள் உண்மை நிலையை அறியாமல், 10 வருடங்களுக்கும் மேலாக ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின் மீது சேற்றை வாரி இறைத்தனர்.
இந்துமத கலாச்சாரத்தையும் கலைகளையும் அவர் உலகம் முழுவதும் பரப்புவதை சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் சமூகப் போராளிகள் என்ற பெயரில் பலர் ஈஷா யோகா மையத்தின் மீது வழக்கும் தொடுத்தனர். அவர்கள் முகத்தில் தற்போது கரி பூசப்பட்டுள்ளது. இன்று அந்த சமூக போராளிகள் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை.
சென்னையில் ஒரு பிரபல கல்லூரி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இடத்தை
99 வருட குத்தகை என்ற பெயரில் எடுத்து ஒரு விளையாட்டு மைதானத்தையும் 150 மீட்டர் சுற்றளவு கொண்ட நீர் நிலையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் வரி பாக்கியை அந்த கல்லூரி நிலுவையில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோவையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் மக்களை பொதுப் பாதையில் நடமாட முடியாதபடி பாதையை அடைத்ததுடன் அரசின் வனப்பகுதிக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தையும் அபகரித்து இருப்பதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
ஈஷா யோகா மையத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பல்பு வாங்கிய சமூகப் போராளிகள் தாங்கள் உண்மையிலேயே சமூக அக்கறை கொண்ட போராளிகள் என்றால் அதை நிரூபிக்க இந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவேண்டும், போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். வழக்குகள் தொடரவேண்டும்” என்று வலியுறுத்தினர்.
1
0