ஒரே நாளில் 155 முறை குலுங்கிய கட்டிடங்கள்… படிப்படியாக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. ஜப்பானை விட்டு விலகிய சுனாமி..!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 11:28 am
Quick Share

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட அடுத்த நிலநடுக்கங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். ஜப்பானின் வட மத்திய பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 5.5 முதல் 7.4, 7.5 மற்றும் 7.6 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 155 முறை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஜப்பான் மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக, இஷிகாவா, நைகட்டா மற்றும் டொயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சில நகரங்களில் மழைநீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதனிடையே, நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்ப பணிகள் தொடர்ந்து நடப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது. மேலும், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும், இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 221

0

0