‘எனது மாணவ குடும்பமே’… பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழா… மாணவர்களை கவர்ந்த பிரதமர் மோடியின் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 12:14 pm
Quick Share

இந்திய இளைஞர்கள் புதிய உலகத்தை உருவாக்கி வருவதாகவும், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு இளைஞரின் பங்களிப்பும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி இல்லாத சூழலில், முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு பாரதிதாசனின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், பட்டம் பெறும் மாணவர்களுடனும், பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் தனித்தனியே பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் மற்றும் சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார்.

தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ‘எனது மாணவ குடும்பமே’ வணக்கம், என்று தமிழில் உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது எனக்கு பெருமை அளிப்பதாகவும், 2024 புத்தாண்டில் நான் பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சி இது என்று கூறினார். திருச்சி பாரதிதாசன் பல்கலை. சிறப்புகளை கொண்டதாகவும், அறிவுசார் பாரம்பரியத்தின் தொடர்ச்சியே இன்றைய மாணவர்கள் என்று கூறிய அவர், புதியதோர் உலகம் செய்வோம் என்றார் பாரதிதாசன் எனக் கூறினார்.

அவர் சொன்னதை போல இந்திய இளைஞர்கள் புதிய உலகத்தை உருவாக்கி வருவதாகவும், 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு இளைஞரின் பங்களிப்பும் அவசியம் என்றார். இந்தியாவை உலக நாடுகள் அனைத்தும் நம்பிக்கையோடு உற்று நோக்குவதாகவும், விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக இளைஞர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடி உரை நிகழ்த்திய போது, ‘எனது மாணவ குடும்பமே’ என்று அடிக்கடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 302

0

0