‘அவர் ஏக்நாத் ஷிண்டே அல்ல.. அதிமுகவின் வருங்காலம்’..! எஸ்பி வேலுமணிக்கு ஜெயலலிதாவின் உதவியாளர் புகழாரம்…!!!

Author: Babu Lakshmanan
10 October 2023, 2:44 pm
sp-velumani--updatenews360
Quick Share

அதிமுக ஒற்றை தலைமைக்குள் வருபவதற்கு மூளையாக செயல்பட்டவர் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- விசுவாசம்..! யாரிடம் இருக்கிறது? தகப்பன், பாட்டன் காலத்திலிருந்து வேலை செய்யும் ஊழியனிடம் தான் அதிக விசுவாசத்தை எதிர்பார்க்கலாம் என்கிறது மகாபாரதம். அப்படி தன்னுடைய தந்தையின் கட்சிப் பணியை பார்த்து வளர்ந்த மகன் ரத்தத்தில் விசுவாசம் ஊறிக்கொண்டிருக்கிறது. எந்த அணியில் வேண்டுமானால் அவன் இருக்கலாம்; அவன் முடிவு தவறாக கூட இருக்கலாம்; ஆனால் அவன் எங்கிருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவன் மூச்சில் ஓடிக் கொண்டிருக்கும்.

அப்படி தன்னுடைய தந்தையினுடைய கட்சிப் பணியை பார்த்து அரசியலுக்கு வந்தவர்தான் ரத்தத்தின் ரத்தம் எஸ்பி வேலுமணி அவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது நான்கு ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியது என்றாலும், கட்சி ஒரு தலைமைக்குள் வந்திருக்கிறது என்றாலும், அதற்கு மூளையாக செயல்பட்டவர், செயல்படுபவர் வேலுமணி அவர்கள்.

வேண்டிய இடத்தில் சமரசமும், வேண்டாத இடத்தில் எதிர்ப்பும், குனிய வேண்டிய இடத்தில் குனிந்தும்; நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்ந்தும், இந்த கட்சியை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கவசமே எஸ்பி வேலுமணி அவர்கள்தான். நான்கு ஆண்டுகால ஆட்சியை வெற்றிகரமாக நடத்தியதற்கு இவர் செய்த சமரசம் தான் காரணம் என்பது அரசியல் தெரிந்தவர்களுக்கு விளங்கும்.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் பொதுத் தேர்தலில், அதிக வாக்குகள் அதாவது சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எஸ்பி வேலுமணி அவர்கள். நேற்று தொகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்; இன்று கோவையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு அவர் கழகத்திற்கு விசுவாசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

கழகத்தில் வேறு ஒரு இளைஞர் தான் சார்ந்த மாவட்டத்தை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்று உங்களால் காட்ட முடியுமா? புதிதாக வருபவர்களுக்கும், துதிபாடிகளுக்கும் வேண்டுமென்றால் இந்த கட்சி தங்கிவிட்டுப் போகும் ஒரு சத்திரமாக இருக்கலாம். ஆனால், தந்தைக்கு அடுத்து தமயனாக வளர்ந்தவனுக்கு இந்த கட்சி உயிர் போன்றது. அந்த உணர்வில் தான் பல பேர் இன்னும் அமைதியாக காத்திருக்கிறார்கள்.

2011ம் ஆண்டு அரசியலுக்குப் பிறகு தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கட்சிக்காரர்களுக்கு உதவி செய்து, அவர்களுக்கு பதவி கிடைக்க சிபாரிசு செய்து, பதவி கிடைக்காமல் வருபவர்களை கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தை கூறி அரவணைத்து செல்பவர் இவர் மட்டுமே..! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று தமிழகம் முழுவதும் செல்வாக்கு பெற்ற ஓர் இளைஞர் இருக்கிறார் என்றால், அது சகோதரர் எஸ்பி வேலுமணி அவர்கள் மட்டுமே..! வேறு யாரும் இல்லை என்பது நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியதில்லை.

வேலுமணி அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும், அது கட்சியின் வளர்ச்சிக்காகத்தான் இருக்கும் என்பது பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும். தனக்கு நல்லது நடக்காவிட்டாலும், தன் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று எதற்கும் விட்டுக் கொடுத்துப் போகும் குணம் படைத்தவர் எஸ்பி வேலுமணி அவர்கள். அவர் ஏக்நாத் ஷிண்டே அல்ல.. கழகத்தின் வருங்காலம்..! அன்புச் சகோதரர் மேலும் வலிமை பெற்று வளம் பெற வேண்டும் என்று பிறந்தநாளில் மனமாற வாழ்த்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 292

0

0