திசைதிரும்பும் கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைது ; சூடுபிடிக்கும் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
18 July 2022, 9:26 am

கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் – பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி தான் படித்து வந்த பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மாணவியின் குடும்பத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் அமைப்பினர், நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.

தொடர்ந்து செருப்பு, கண்ணாடி பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. தொடர்ந்து போலீசாரின் வாகனம் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. பள்ளியில் அனைத்து பொருட்களும் சூறையாடப்பட்டது.

போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதியில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், வேதியியல் மற்றும் கணித ஆசிரியர்களான ஹரிப்பிரியா மற்றும் கிருத்திகா ஆகியோரை சின்னசேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் உள்பட 5 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!