கள்ளக்குறிச்சியில் வெடித்த வன்முறை… செஸ் விளம்பரப்படத்தில் நடிப்பதில் முதலமைச்சர் ஸ்டாலின் பிஸி… அண்ணாமலை விமர்சனம்!

Author: Babu Lakshmanan
18 July 2022, 12:06 pm
Quick Share

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை 5 நாட்களாக வாங்காமல் ஒரு தாய் உள்ள நிலையில், முதல்வரோ செஸ் விளம்பரத்தில் நடிப்பதில் குறுக்கும் மறுக்குமாக உள்ளார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பாஜ.க சார்பில் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது :- மத்திய அரசின் சாதனையாக தற்போது வரை 200 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள் குடிசை வீட்டில் வாழ வேண்டும். முதல்வர் குணிந்து உள்ளே செல்ல வேண்டும். இவர்களே கொண்டு போகும் வெள்ளி தட்டில் சாப்பிட்டு போட்டோ எடுக்க வேண்டும். இது தான் இவர்களின் திராவிட மாடல் ஆட்சி. ஆனால் மத்திய அரசு சார்பில் தமிழகத்தில் 15 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 67 ஆண்டுக்ளில் 5 கோடியே 50 லட்சம் கழிப்பிடங்களை தான் கட்டினார்கள். ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்களை கட்டியுள்ளோம். பிரதமர் மோடி சொல்வது மேக் இன் இந்தியா. ஆனால், திமுகவினர் ப்ரேக் இன் இந்தியா என்கின்றனர். சமீபத்தில் முதல்வரை மேடையில் வைத்து கொண்டே ஒருவர் தனி மாநிலம் பற்றி பேசுகிறார். மோடி ஐநா சபைக்கு சென்றாலும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற அடிப்படையில் தமிழில் தான் பேசுவார்.

அதே நேரம் உள்ளூர் விற்பனையில் 5 கோடி ருபாய் அளவில் இருந்து 50 ஆயிரம் கோடி அளவிற்கு திருப்பூர் வளர்ந்துள்ளது. மத்திய அரசு செய்ய வேண்டும் என இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியர்கள் செய்யக் கூடாது என நினைக்கிறார்கள். திருப்பூரில் 2024 ஆம் ஆண்டிற்கு முன்பாக இ.எஸ்.ஐ மருத்துவனை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

கறிக்கோழி பிரச்சனையில் கோழி வளர்ப்பவர்கள் , முகவர்கள் இடையே தமிழக அரசு 15 நாட்களில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையெனில் பா.ஜ.க. களத்தில் இறங்கி கோட்டையை நோக்கி வரவும் தயங்காது. உக்ரைன் போரின் போது மாணவ, மாணவிகளை அழைத்து வந்தது மத்திய அரசு. ஆனால், திமுக தான் செய்தது என பெருமை பீத்தி கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்தது பிரதமர் மோடி. ஆனால் அதன் விளம்பர படத்தில் நடித்து கொண்டு, மாப்பிள்ளை அவர் தான், ஆனால் சட்டை என்னோடது போல முதல்வர் செய்கிறார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் இடம் வீடு கட்டி கொடுக்க சொல்லி ஒரு தாய் கேட்ட போது, அமைச்சர் அந்த பெண்மணியை அடிக்கிறார். அதை பா.ஜ.க கேட்டால் செல்லமாக அடித்ததாக கூறுகிறார். அதே போல் பல அமைச்சர்களுக்கு மக்களை அடிக்கும் பழக்கம் உள்ளது. சாதாரண பொது மக்களை அடிப்பது தான் திராவிட மாடல்.

பெரியார் பல்கலைகழக வினாத்தாள் சர்ச்சை – திராவிட மாடல் மாநிலத்தில் கீழ்சாதி எது என கேட்கிறார்கள். இதுதான் திராவிட மாடல். அதே போல் சில இடத்தில் பெருச்சாளி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும். பூமி தாய்க்கு பூஜை செய்வது 2 ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. திமுக எம்.பி திராவிடல் மாடல் ஆட்சியில் எப்படி பூஜை செய்யலாம் என கேட்கிறார்.

நாம் இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டும். இப்படியே போனால் இன்னும் 50 வருடத்தில் பொட்டு வைக்க கூடாது , கோவிலுக்கு போக கூடாது என்ற நிலையை திமுக கொண்டு வரும். 2024ஆம் தேர்தலின் போது மதத்தை, சம்பிரதயாத்தை கொச்சைப்படுத்தியவர்களின் சீட்டை கிழிக்க வேண்டும்.

திமுகவின் பட்டத்து இளவரசருக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதே இப்போது அமைச்சர்களுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். டிஜிபி சைக்கிள் ஓட்டுகிறார். அரசு நேரடியாக வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்ல வேண்டும் என தான் மக்கள் கேட்டனர்.

5 நாட்களாக உடலை வாங்காமல் ஒரு தாய் இருக்கிறார். ஆனால் முதல்வரோ செஸ் விளம்பரத்தில் நடிப்பதில் குறுக்கும் மறுக்குமாக உள்ளார். திமுக ஆட்சி 4 வருடம் நிச்சயம் வண்டி ஓடும். 4 வருடம் முடிந்ததும் பொங்கல் தொகுப்பு ஊழலில் மட்டும் எத்தனை பேர் உள்ளே செல்ல போகிறார்கள் என தெரியவில்லை.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தேசவிரோதிகளுக்கு முதல்வரின் நெருக்கமான அதிகாரி ஒருவர் தொடர்புள்ளார். அவர் நிச்சயம் ஜெயிலுக்கு போவார். போகிற இடத்தில் எல்லாம் சேகர்பாபுவை மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்ததால் கடந்த 15 நாட்களாக ஆளையே காணவில்லை. கோவில் நகைகளை உருக்குவோம் என சொன்னார்கள். கோபாலபுர நகையை உருக்கினால் ஒரு பட்ஜெட்டையே போடலாம்.

2024ஆம் ஆண்டில் 400 எம்.பி களுடன் மோடி ஆட்சியில் அமர வேண்டும். அப்படி வந்தால் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளை நாம் மிரட்டலாம். உலக நாடுகள் நம் நாட்டை உற்று நோக்கி வருகிறார்கள். 303 எம்.பி என்ற போதே சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் வாலை சுறுட்டி கொண்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஒருவன் வந்து குண்டு வைத்தால், அந்த நாடே இருக்காது என்ற நிலை இப்போது உள்ளது. ஆக.15ல் 75ஆம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும், என்றும் வேண்டுகோள் விடுத்தார்

Views: - 1071

0

0