நீட் தேர்வு விவகாரத்தில் நாடகமாடும் திமுக அரசு .. ஆளுநரின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உண்டு : முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
Author: Babu Lakshmanan8 February 2022, 4:17 pm
கரூர் : ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையா என்று தமிழக கவர்னரை கண்டபடி திட்டுகின்றீர்களே? 530 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது எம்.பி.பி.எஸ் படிக்கின்றதற்கு காரணம் யார்? முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி பகுதியில் 24 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் இன்று பிரச்சாரம் செய்தார். புகலூர் நால்ரோடு, செம்படபாளையம், அண்ணாநகர், பைபாஸ் பாலம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா உள்ளிட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- தற்போதைய ஆட்சியில் இருக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, புஞ்சை புகலூர் புதிய தாலுகாவாக அறிவிக்கப்படும், புகலூர் பகுதியிலே புதிய கதவணை அமைக்கப்படும் என மக்களை ஏமாற்றி இதுவரை ஏமாற்றிக் கொண்டு இருந்தார்கள். 3 முறை கதவணை அமைக்கப்படும் பூமி பூஜை போட்டு மக்களை முட்டாளாக்கியவர்கள் தன் இன்று அமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு ஆட்சி செய்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், புஞ்சை புகழூர் பகுதியில் புதிய தாலுகா அமைக்கப்பட்டு, புகலூர் பகுதியிலேயே கதவணை அமைப்பதற்காக 450 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, ஒரு டிஎம்சி நீரே கேட்கக்கூடிய கதவணை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார். ஊரை ஏமாற்றி ஓட்டு வாங்கிய தற்பொழுது இருக்கும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் இந்த உள்ளாட்சித் தேர்தல்.
ஆட்சி அதிகாரம் இருக்கிறது என தோல்வி பயத்தால் அதிமுகவினரை மிரட்டும் திமுகவினர், அதிமுக அணியினர் மீது பொய்யான வழக்குகளை தொடர்ந்தும் மிரட்டும் திமுகவினர், இதற்கு எதற்கும் அஞ்சமாட்டோம். இந்த பகுதிக்கு இரு பெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீட் தேர்வு குறித்து பேட்டி அளித்திருக்கிறார். தொலைக்காட்சியில் அதை பொதுமக்கள் முழுமையாக கேளுங்கள். நீட் தேர்வில் யார் துரோகம் செய்தது. அதற்கு காரணமான அப்போது இருந்த மத்திய அரசு காங்கிரசும், கூட்டணியில் இருந்த திமுகவினர் மட்டுமே காரணம். இன்றைக்கு நாடகம் ஆடுகின்றனர். ஆளுநர் நியாயமான கேள்விகளை தான் கேட்கிறார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தார். கிராமப்புற பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் உள்ஒதுக்கீடு கொடுத்த காரணத்தினால் இன்று 537 ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்னார்கள் திமுகவினர். நீட் தேர்வு இல்லா காலத்தில் 60 மாணவர்கள் தான் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு சென்றிருக்கின்றனர். அப்படி என்றால் அதிக மாணவர்கள் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். அதனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டுமென்றால், அதற்கு என்ன பதில் வேண்டும் என்று சொல்லி ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். இதற்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை இல்லையா..? நாட்டுக்கு கவர்னரும் ஆட்டுக்கு தாடியும் இல்லை என்று கூறி வருகின்றனர்.
537 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு உதாரணமாக ஐஸ் விற்கும் தொழிலாளியின் மகன் ஒருவர் மருத்துவ படிப்பை படிக்கிறார். அதற்கு காரணம் முன்னாள் முதல்வர் எடப்பாடியார். மேலும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியவர் எடப்பாடியார். பொய்யைச் சொல்லி ஏமாற்றியவர்கள் திமுக. யார் நன்மை செய்தார்கள் என மாணவர்களுக்கு தெரியும். சிந்தித்துப் பார்த்து பொதுமக்கள் ஓட்டளிக்க வேண்டும், என்று அப்போது அவர் தெரிவித்தார்
0
0