கொங்கு நாடு ‘பொறி’யில் சிக்கித் தவிக்கும் ஈஸ்வரன்… உச்சகட்ட கடுப்பில் திமுக!!

17 July 2021, 5:57 pm
Kongunadu eshwaran - updatenews360
Quick Share

2021 தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஈஸ்வரன்.

கொங்குநாடு பிள்ளையார் சுழி

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சில சிறு சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டிருந்தது.
அந்த நிபந்தனையை ஏற்று திமுக சின்னத்தில் போட்டியிட்டு, வென்றவர்தான், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், ஈஸ்வரன்.

eshwaran - updatenews360

தற்போது தமிழக அரசியலில் வீசிவரும் கொங்கு நாடு சூறாவளிக்கு, இவர்தான் மூல காரணம் என்றும் சொல்லலாம்.

என்ஜினீயரான 60 வயது ஈஸ்வரன் அரசியலுக்கு புதியவர் அல்ல. கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக 2009-ல் பெஸ்ட் ராமசாமி தொடங்கிய கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தில் நான்காண்டுகள் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

அதே வருடம், நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 28 ஆயிரம் ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தார். அதே ஆண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

கொங்கில் முயற்சி

பின்னர் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனியாகப் பிரிந்து 2013-ல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை தொடங்கினார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த கூட்டணியில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஈஸ்வரன் 2 லட்சத்து 76 ஆயிரம் ஓட்டுகளை பெற்றார்.
இங்கு திமுக வேட்பாளர் 2 லட்சத்து 51 ஆயிரம் ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 72 தொகுதிகளில் அவருடைய கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.

eshwaran 1- updatenews360

ஓவர் கூவல்

பாஜக கூட்டணியில் இருந்த போதும் வெற்றி பெற முடியவில்லை, தனித்து வேட்பாளர்களை நிறுத்தியும் டெபாசிட் இழந்ததுதான் மிச்சம் என்ற நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் ஈஸ்வரன் இணைந்து கொண்டார். அவருடைய கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவரது கட்சி வேட்பாளர் சின்ராஜ் வெற்றி பெற்றார்.

அதன் பிறகு திமுக கூட்டணியில் பசை போட்டு ஒட்டியதுபோல் ஈஸ்வரன் ஒட்டிக் கொண்டுவிட்டார். இந்த கூட்டணி பக்கம் வந்த பின்பே, தனது அரசியல் வாழ்க்கை எழுச்சி கண்டிருப்பதாக கருதும் ஈஸ்வரன், அதன் காரணமாகவே திமுக தலைமையை புகழ்வதில் மற்ற கட்சி தலைவர்களை விட ஒருபடி முன்னே இருக்கிறார் என்று சொல்லலாம்.

ஜெய்ஹிந்த் சர்ச்சை

இப்படி திமுகவை அடிக்கடி பாராட்ட போய், அண்மையில் தேசிய அளவில் ஒரு சர்ச்சையையும் அவர் ஏற்படுத்தினார். தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் நிறைவு நாளன்று ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவித்துப் பேசிய ஈஸ்வரன் எம்எல்ஏ, “கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் முடிவில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த சொல் நீக்கப்பட்டுவிட்டது. நன்றி, வணக்கம்! மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது” என்று உற்சாகம் பொங்க குறிப்பிட்டார்.

Jaihindh - Updatenews360

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஈஸ்வரன் இதுபற்றி பேசுவதற்கு முன்பாக யாருக்குமே ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற சொல் நீக்கப்பட்டது பற்றி தெரியவில்லை.
ஈஸ்வரன் இதை சுட்டிக்காட்டிப்பேசிய பின்புதான், அது பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்தது. பாஜகவின் டெல்லி தலைமையும் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டது. இனி சட்டப்பேரவையில் நீங்கள் பேசி முடிக்கும் போதெல்லாம், ஜெய்ஹிந்த் என முழங்கவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கியதும், குறிப்பிடத்தக்கது.

கொங்குநாட்டு முதல்வரே’

இந்த நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற தமிழக பாஜக தலைவர், எல்.முருகன் தன்னைப் பற்றிய சுய விவரக் குறிப்பில் தமிழ்நாட்டின் கொங்குநாடு என்று குறிப்பிட்டிருந்தது, தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழக ஊடகங்களில் கொங்கு நாடு, வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என தமிழகம் மூன்றாகப் பிரிக்கப்பட இருப்பதாக செய்திகளும் வெளியாகின. இதனால் கொங்கு நாடு பற்றிய சூடான விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டு, அனைவராலும் பரபரப்புடன் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் கோவை நகர் முழுவதும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரான ஈஸ்வரன் எம்எல்ஏவை வரவேற்கும் விதமாக ‘கொங்கு நாட்டு முதல்வரே!’ என்று வண்ண நிற சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளது. இதுதவிர நகரின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகளும், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது திமுகவின் தலைமையை மிகவும் எரிச்சலடைய வைத்துள்ளது.

அதாவது ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் நீக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டதன் எதிர் விளைவாகத்தான், கொங்கு நாட்டை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என்ற விவாதமே எழுந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரியவித்து பேசிய ஈஸ்வரன் எம்எல்ஏ இதை குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினையும், திமுகவையும் புகழ்ந்து பேசப்போய், அதன் எதிர்வினையாக ஜெய்ஹிந்த் விவகாரம் வெடித்துவிட்டது.

இது,சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதைபோல் ஆகிவிட்டது. தற்போது கொங்குநாட்டு முதல்வரே என்று ஈஸ்வரன் எம்எல்ஏவுக்கு சிறப்பு அடைமொழி கொடுத்து அவருடைய கட்சியினர் கொங்கு மண்டலப் பகுதிகளில் சுவர் விளம்பரம் எழுதுவது, போஸ்டர்கள் ஒட்டுவது என கிளம்பி இருப்பது கொங்கு நாடு தனி மாநிலம் தொடர்பான விவாதத்துக்கு கூடுதல் பலம் சேர்ப்பதுபோல் அமைந்துள்ளது.

கொமதேக பெயர் மாற்றம்?

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, “ஈஸ்வரன் எம்எல்ஏவால் அடுத்தடுத்து ஏதாவது ஒரு தலைவலி திமுகவுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஜெய்ஹிந்த் விவாகாரத்தை அவர்தான் தேவையின்றி பேசி மத்திய பாஜக அரசை, திமுக மீது கடும் கோபம் கொள்ளச் செய்து விட்டார். மேலும் இது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான உறவை கசப்பான நிலைக்கும் கொண்டு சென்றுவிட்டது.

இப்போது அவருடைய கட்சியினரே, கொங்கு நாட்டை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பதுபோல கொங்கு நாட்டு முதல்வர! என்று ஈஸ்வரனை பொதுவெளியில் அழைக்கத் தொடங்கியிருப்பது ஈஸ்வரனுக்குதான் நெருக்கடியை ஏற்படுத்தும். ஏனென்றால் அவர் திமுக கூட்டணி எம்எல்ஏ என்றாலும் கூட திமுகவின் சின்னமான உதயசூரியனில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அவர் திமுக எம்எல்ஏவாகத்தான் கருதப் படுவார்.

இதனால் திமுக கோபத்தின் உச்சத்தில் உள்ளது. எனவே அவருடைய கட்சியின் பெயர் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்று இருப்பதை கொங்கு மக்கள் தேசிய கட்சி என மாற்றும்படி திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நெருக்கடி அளிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது இதில் நாட்டை தூக்கி விடும்படி கூறலாம்.

தற்போது திமுக இந்த விஷயத்தில் மிகவும் மவுனம் காத்து வருகிறது.
அது ஈஸ்வரனுக்கும் தெரிகிறது. பாஜகவுக்கு ஆப்பு வைப்பதாக நினைத்து ஈஸ்வரனே அந்தப் ‘பொறி’யில் சிக்கிக் கொண்டு பரிதவிப்பதுதான் இதன் உச்சம்” என்று வேடிக்கையாக குறிப்பிட்டனர்.

Views: - 205

1

0