அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னதெல்லாம் பொய்யா…? விஸ்வரூபம் எடுக்கும் விஷ சாராய விவகாரம்…!

Author: Babu Lakshmanan
22 May 2023, 4:59 pm
Quick Share

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு துறை போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கி கள்ளச்சாராய வியாபாரிகள் 17 பேரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.

இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் 50-க்கும் மேற்பட்டோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதுமட்டுமல்ல சிகிச்சை பெறுபவர்களை மருத்துவமனைகளுக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் கூறவும் செய்தார்.

நியாயப்படி பார்த்தால் முதலமைச்சருக்கு முன்பாக மதுவிலக்கு துறையை தன் கைவசம் வைத்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் சென்று ஆறுதல் கூறியிருக்கவேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனினும் காவல்துறை எடுத்த மின்னல் வேக நடவடிக்கையால் தமிழகத்தில் கள்ளச் சாராயம், போலி மது, விஷ சாராய விற்பனையில் இனி யாரும் தைரியமாக ஈடுபட மாட்டார்கள். ஒரு சொட்டு விஷ மதுகூட வெளியே கிடைக்காது என்று மதுப் பிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆனால் நீங்கள் அப்படியெல்லாம் சந்தோஷம் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதுபோல இன்னொரு சம்பவம் கடந்த 21ம் தேதி அரங்கேறி தமிழகத்தையே மீண்டும் பதற வைத்துள்ளது. அன்று தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் பகுதியில் இருக்கும் ஒரு டாஸ்மாக் பாரில் காலை 11 மணி அளவில் மது வாங்கி குடித்த குப்புசாமி என்கிற 60 வயது முதியவரும், விவேக் என்கிற 36 வயது இளைஞரும் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அருந்தியது விஷம் கலந்த மதுபானம் என்று கூறப்படுவதுதான்.

இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் அரசு அனுமதியுடன் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபார்களில்
இதற்கு முன்பும் சிலர் இறந்தது உண்டு. என்றாலும் கூட அது அளவுக்கு அதிகமாக மது குடித்ததன் விளைவால் ஏற்பட்டதாவே இருக்கும்.

அதேநேரம் இதைவிட மிகக் கொடுமையானதொரு சம்பவம் கோவை நகரில் நடந்துள்ளது.

கோவை கரடிமடை பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு, அதிமுகவை சேர்ந்த 55 வயது செல்வராஜுக்கும், சிலருக்கும் இடையே டாஸ்மாக்கில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் செல்வராஜ் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவரைக் கொன்றவர்கள் அதே பகுதியில் வசிக்கும் திமுக பிரமுகர்கள் ராகுல், கோகுல் மற்றும் அவருடைய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்பட்டதாகவும், அதை தட்டி கேட்டதால்தான் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருப்பதுதான்.
இத்தனைக்கும் கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவருடைய எல்லைக்குள்ளேயே இந்தப் படுகொலை நடந்துள்ளது.

ஆனால் தனது துறையில் அடுத்தடுத்து நடக்கும் துயர சம்பவங்கள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறிதும் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. ஏனென்றால் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராய சாவு துயரம் நடந்து
4 நாட்கள் கழித்து, அதுவும் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தபோதுதான், அவர் இது குறித்து செய்தியாளர்களிடமே பேசினார். அப்போதும் கூட அவர் தனது அதிர்ச்சியை வெளி காட்டியதாக தெரியவில்லை.

Senthil Balaji - Updatenews360

“செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து சிலர் இறந்துள்ள
விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளார். அது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தி மீதமுள்ள விசாரணையை விரைந்து முடிக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்” என்றுதான் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், டாஸ்மாக் கடைகளில் கரூர் கம்பெனிகாரர்கள் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாயை தங்களுக்கு கட்டாயம் வசூலித்துக் கொடுக்கவேண்டும் என்று கூறப்படுகிறதே? என ஒரு செய்தியாளர் கேட்டபோது அவர் மீது அமைச்சர் ஆவேசமாக சீறினார்.

நீங்கள் வாங்கிய கடையில் அதுபோல் கூடுதல் பணம் எதுவும் கேட்டார்களா? என்று செந்தில் பாலாஜி எதிர்கேள்வி எழுப்ப அதற்கு அந்த செய்தியாளர், ஆமாம் அப்படித்தான் எல்லா கடைகளிலும் கேட்கிறார்கள் என்று பதில் அளித்தார்.

உடனே அமைச்சர் தமிழகத்தில் உள்ள ஐந்தாயிரம் டாஸ்மாக் கடையிலும் போய் நீங்கள் மது வாங்கினீர்களா?… என்ற எதிர் கேள்வியை கேட்டார். பின்னர்
எந்த கடையில் இது போன்ற தவறுகள் நடந்தாலும் அந்தக் கடை எண்ணை குறிப்பிட்டு புகார் செய்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

உண்மையிலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுவதால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்த வேண்டிய பொறுப்பு அமைச்சருக்குத்தான் உள்ளது. இதற்காக அவர் மாறுவேடத்தில் கூட செல்லலாம். ஆனால் அதை தட்டிக் கழிப்பதுபோல் அவருடைய கருத்து இருக்கிறது.

என்ற போதிலும், இதில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, தற்போது கோவை டாஸ்மாக் ஒன்றில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதை தட்டிக்கேட்ட செல்வராஜ் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்.

இத்தனைக்கும் கொலை செய்யப்பட்டவர் போலீசில் இதுபற்றி புகார் அளித்த பிறகுதான் அவருடைய உயிரே பறிக்கப்பட்டுள்ளது, என்கிறார்கள். அப்படி இருக்கும்போது மதுப் பிரியர்கள் துணிச்சலாக யாரிடம் போய் புகார் செய்வார்கள்?
என்ற கேள்வியும் எழுகிறது.

“தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் உயிரிழந்தது தமிழக மதுவிலக்கு துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய களங்கம். அது டாஸ்மாக் மீதான நம்பகத் தன்மையை வெகுவாக குறைத்தும் விட்டது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

“இங்கே இரண்டு முக்கிய கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபார்கள் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் திறந்து வைத்து மது விற்பனை நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒரு வருடமாகவே குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கு இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி திருப்திகரமான எந்த பதிலையும் அளித்ததாக தெரியவில்லை. ஆனால் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே அரசு அனுமதி பெற்ற பாரில் மது விற்பனை நடந்து இருப்பது உறுதியாகிறது. இது முற்றிலும் சட்டவிரோதமான செயல்.

அதை விட அதிர்ச்சி தருவதாக அந்த பாரில் விஷம் கலந்த மது விற்பனை செய்யப்பட்டு இருவரின் உயிர் காவு வாங்கப்பட்டு இருப்பதுதான்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போலி மது, விஷ சாராயம் தயாரித்து விற்பனை செய்வோர், சாராயம் கடத்துவோர் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசு மதுபாருக்குள் எப்படி விஷம் வந்தது?… அவர்கள் யாரிடம் இருந்து இந்த விஷ மதுவை வாங்கினார்கள்? என்ற எதார்த்தமான கேள்விகளும் எழுகின்றன.

இதேபோல் டாஸ்மாக் கடைகளில் கரூர் கம்பெனிக்காரர்களுக்காக, விற்பனையாளர்கள் யாரும் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பது பற்றியும் கேள்வி எழுகிறது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் கூறியதெல்லாம் பொய்தானே அமைச்சரே?…என்று கேட்கவும் தோன்றுகிறது. அதே நேரம் இவர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி அபார நம்பிக்கை வைத்துள்ளார் என்பதுதான் புரியவில்லை.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 23 பேர் பலியாகி இருப்பதால் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றன. தஞ்சாவூர் துயர சம்பவத்தின் மூலம் அந்தக் கோரிக்கை தற்போது மேலும் வலுவடைந்து இருக்கிறது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி இன்னும் அதிகரித்து உள்ளது என்றே சொல்ல வேண்டும்” எனவும் அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஒரே வாரத்தில் நடந்துள்ள இந்த மூன்று துயர நிகழ்வுகளுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 263

0

0