தேர்தல் தேதி அறிவிப்பிலேயே உங்க லட்சணம் தெரிஞ்சு போச்சு…திமுகவை தெறிக்கவிட்ட விஜயகாந்த்…!!

Author: Babu Lakshmanan
29 January 2022, 2:37 pm
Quick Share

சென்னை : தேர்தல் தேதி அறிவிப்பின் மூலம் உங்களின் அதிகார துஷ்பிரயோகம் தெரிய வந்துள்ளதாக திமுக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்., 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.,22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும், மார்ச் 4ம் தேதி மேயர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை என விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் 26-ம் தேதி அறிவித்தது. இடையில் ஒரு நாள் மட்டும் கால அவகாசம் வழங்கி, ஜனவரி 28-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

மேலும், மாநிலத் தேர்தல் அதிகாரிகளால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், எந்தவித கால அவகாசமும் வழங்காமல் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதில் ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் எனத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பிலேயே அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதிலிருந்து, தேர்வுகள் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசத்தைப் போல, இந்த தேர்தலிலும் வழங்கினால்தான் அனைத்து வேட்பாளர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும், என தெரிவித்துள்ளார்.

Views: - 567

0

0