சீமான் -திருமாவளவன் ரகசிய கூட்டணி…? திமுகவின் வெற்றிக்கு சிக்கல்..! திகைப்பில் திமுக!

Author: Babu Lakshmanan
27 September 2021, 5:14 pm
Quick Share

தமிழகத்தில் தற்போது 3-வது பெரிய கட்சியாக திகழும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பல விஷயங்களில் பொதுவான ஒற்றுமை உண்டு.

குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சனை, ராஜீவ் கொலை குற்றவாளிகள், 7 பேர் விடுதலை, மேகதாது அணை விவகாரம், ஆணவக்கொலை, சமூக நீதி போன்றவற்றில் இரு கட்சிகளும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பவை. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, இந்த இரு கட்சிகளும் இன்னும் நெருக்கமாக, இணைபிரியா தண்டவாளங்கள் போல ஒரே நேர்கோட்டில் பயணிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.‘

காவல்துறைக்கு கண்டனம்

அதுவும் கடந்த சில தினங்களாக சீமானும், திருமாவளவனும் வெளியிடும் அறிக்கைகளும், பதிவிடும் ட்விட்களும் அப்படியே ஒருவரையொருவர் காப்பி அடித்ததுபோல இருக்கிறது.

சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொடி கம்பத்தை ஊன்ற விடாமல் தடுக்கப்பட்ட சம்பவத்தையும் அப்போது நடந்த வன்முறையால் போலீசார் நடத்திய தடியடியையும் அக்கட்சியின் தலைவர் என்கிற முறையில் திருமாவளவன் சேலம் மாவட்ட காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

VCK - police - updatenews360

வேறு எந்தக் கட்சியின் தலைவர்களும், குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளின் தலைவர்கள் ஒருவர் கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ளது என்பதால் அக்கட்சிகளின் தலைவர்கள் நமக்கு எதற்கு வம்பு? என்று இதுபற்றி கருத்து தெரிவிக்காமல் போயிருக்கலாம்.

சீமான் கூவல்

ஆனால் இந்த விஷயத்தில் சீமான், பாதிப்புக்கு உள்ளான விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட ஒருபடி மேலே சென்று காவல்துறையை வன்மையாக கண்டித்து இருந்தார்.

இதுபற்றி அவர் காட்டமாக கூறுகையில், “சாதி, மத பூசல்களும் சமூக மோதல்களும் இல்லாது சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே சாதிவெறிப் போக்கை வெளிப்படையாக ஆதரித்து வன்முறைச் செயலை வேடிக்கை பார்த்து இருப்பது வெட்கக் கேடானது.

Seeman -Updatenews360

ஒரு அரசியல் இயக்கத்திற்கு தங்களது இயக்கத்தின் கொடியை ஏற்றவும், கிளையைத் திறக்கவும் ஜனநாயக உரிமையையே முற்றாக மறுத்து விடுதலை சிறுத்தைகளின் கொடியை ஏற்றியதற்காக அக் கட்சியை சேர்ந்தவர்கள் மீது வன்முறையை ஏவி விடும் சாதிவெறியர்களின் இக் கொடுங்கோல் போக்கை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது, தமிழக அரசின் தலையாய கடமையாகும். அதனை செய்யாது சாதி வெறிக்கும் சமூக பிளவிற்கும் துணை நிற்கும் மோரூர் பகுதி காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடும் அதனை கண்டிக்காத தமிழக அரசின் நிலைப்பாடும் இழிவாகும். இது தொடர்பான காணொளியும் கண்டு நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். காவல்துறையின் முன்னிலையிலேயே நிகழ்த்தப்பட்ட கொலை வெறிச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது” என்று சீமான் சாடியிருந்தார்.

ஒற்றுமை

இதற்கிடையே இருவரும், சொல்லி வைத்ததுபோல் இன்னொரு ட்வீட்டை பதிவிட்டனர். அது கடலூர் மாவட்டத்தில் நடந்த ஆணவ படுகொலைகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு பற்றியது.

சீமான் தனது பதிவில், “மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளரை தண்டித்து இருக்கும் இத்தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. கண்ணகி மதுரையை எரித்து நீதி கேட்டதுபோல முருகேசன்- கண்ணகி வழக்கின் மூலம் நிலைநாட்டப்பட்டு இருக்கும் நீதி, ஆணவப்படுகொலையை எரிக்கட்டும். இதனை முற்றாக ஒழித்திட தனிச்சட்டம் இயற்றவேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார்.

திருமாவளவனோ, “ஆணவ கொலைகள் நடந்த பின்னர் வழக்கை நடத்தி தண்டனை வழங்குவது என்ற அணுகு முறையை விட ஆணவ கொலைகள் நடக்காமல் இருக்க கூடிய வகையில் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

கண்ணகி-முருகேசன் ஆணவப்படுகொலையில் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். மேல்முறையீட்டில் குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது. தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்” என்று கூறியிருந்தார்.

திருமாவளவன் அதிர்ச்சி

இந்த இரு நிகழ்வுகளுமே ஊரக உள்ளாட்சி தேர்தலுடன் தொடர்புடையவை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கு சில காரணங்களும் உண்டு. திமுக கூட்டணியில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மாவட்டம் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் திமுக சொல்லிக் கொள்ளும்படி இடங்களை ஒதுக்கவில்லை. விழுப்புரத்திலும் கூட பாமக போட்டியிடும் பகுதிகளில்தான், விடுதலை சிறுத்தை கட்சிக்கு இடங்கள் பகிரப்பட்டுள்ளது.

இதனால் திருமாவளவன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திமுக வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி ஒரு பக்கம் நடந்து வருகிறது.

அதேநேரம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வேறொரு விதத்தில் பிரச்சினை உருவாகி இருக்கிறது. அவருடைய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். “வேட்புமனு செய்ததோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்வதெல்லாம் கூடாது” என்று எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

விசிகவுக்கு சீமான் ஆதரவு

இதுதொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்குமே திமுகவின் மாவட்ட செயலாளர்கள், போதிய இடங்களை பகிர்ந்து கொடுக்கவில்லை. தாங்கள் மட்டுமே இடங்களைக் கைப்பற்றவேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர்கள் செயல்பட்டு உள்ளனர். இதனால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக என்று அத்தனை கட்சிகளுமே கடும் அதிருப்தியில் இருக்கின்றன.

ஆனால் திமுகவை எதிர்த்து தனியாக நின்றால் தங்கள் வேட்பாளர்களால் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்றவை அதிகம் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டன. ஆனால் காங்கிரசும், விசிகவும் துணிந்து தங்களது வேட்பாளர்களை பல இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக நிறுத்தியுள்ளன.

நாம் தமிழர் கட்சி, தான் போட்டியிடாத இடங்களிலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களிலும் விடுதலை சிறுத்தைகளை ஆதரிக்க முடிவு செய்து இருக்கிறது.

ஏனென்றால் கொள்கை ரீதியாக இந்த இரு கட்சிகளுக்கும் நல்ல புரிதல் உண்டு. அதனால்தான் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் சில மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் ஒருவருக்கொருவர் வாக்குகளை பரிமாறிக் கொள்வது என்ற அடிப்படையில் ரகசிய கூட்டணியும் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்த திரை மறைவு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்திருக்கிறது.

இதைக் கேள்விப்பட்ட திமுக தலைமை அதிர்ந்து போயுள்ளது. இதன் காரணமாக
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில்100 சதவீத இடங்களையும் முழுமையாக கைப்பற்றி விடவேண்டும் என்கிற அதன் நம்பிக்கை கை கூடாமல் போவதற்கே அதிக வாய்ப்பு தென்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு 10 சதவீத இடங்களை திமுக மாவட்ட செயலாளர்கள் ஒதுக்கியிருந்தால் இப்பிரச்சனை எழுந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் கூட்டணிக் கட்சிகளிடம் மிகவும் கறாராக நடந்து கொண்டதால்தான், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுதேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்”என்று குறிப்பிட்டனர்.

கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம்

இந்த நிலையில் “ஆளும் கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம்” என்று அண்மையில், தான் பதிவிட்ட ட்விட் திமுக தலைமையை எரிச்சல் அடைய வைத்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டாரோ, என்னவோ தற்போது அதனை மிஞ்சும் விதமாக இன்னொரு ட்விட்டை திருமாவளவன் போட்டிருக்கிறார்.

அதில், “இன்று எமது இயக்கக் கொடி, நாளை நமது தேசியக் கொடி” என்ற முழக்கத்தை எழுப்பி அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

stalin - thirumavalavan - updatenews360

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விசிகவின் கொடி பறக்கவேண்டும் என்று சொன்ன திருமாவளவன் அடுத்த 2 நாட்களில் டெல்லி செங்கோட்டையில் தனது கட்சியின் கொடி பறக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, இப்படி பதிவிட்டாரா? என்பது தெரியவில்லை. அல்லது எதுகை மோனைக்காக சொன்னாரா? என்பதும் புரியவில்லை

ஆனால், தேசியக் கொடியை மாற்றுவோம் என்பதுபோல் உள்ள அவருடைய இந்தக் கருத்து பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அமைந்திருக்கிறது என்ற கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.

===

Views: - 148

0

0