விவசாயிகளை அகதிகள் ஆக்குவதா?…CM ஸ்டாலினை அதிர வைத்த மார்க்சிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 8:03 pm
Dmk vs Alliance - Updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சமீப காலமாக
ஆளும் அரசின் மீது அதிருப்தியை காட்டும் விதமாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதை காண முடிகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி தருவது போல பேசுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.

திருமா திடீர் பேச்சு : அதிர்ச்சியில் திமுக

சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் விசிக தலைவர் திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “பாஜகவை விமர்சித்தால் இந்து மதத்தை விமர்சிப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். விசிகவில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்தான். சமூகத்தில் பெரும்பான்மை மக்களும் இந்துக்கள்தான் பாஜகவினர் பேசும் வெறுப்பு அரசியலைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை கைவிட்டு பாஜகவினர் சமத்துவத்தை பேசினால், விசிக அவர்களோடு கைகோர்க்க தயங்காது. எங்களுக்கும் அவர்களுக்கும் அரசியலிலும், கொள்கைகளிலும்தான் முரண்பாடு” என்று அதிரடியாக கூறியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சு பாஜகவை நோக்கி அவர் செல்கிறாரோ என்கிற சந்தேகத்தையும் எழுப்பியது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்தது, திமுகவும், காங்கிரசும்தான். அவற்றின் கோபப் பார்வைக்கும் உள்ளானார்.

U Turn அடித்த திருமாவளவன்!!

இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. அதனால் மறுநாளே திருமாவளவன் ஒரு யூ டேர்ன் அடித்தார்.

“சங் பரிவார் அமைப்புகள் தங்களின் கொள்கைகளை மாற்றிக் கொண்டு சமூகநீதி, சகோதரத்துவம், மதச் சார்பின்மை போன்ற கொள்கைகளுக்கு ஆதரவாக பேசினால் விமர்சிக்கப் போவதில்லை. ஒருவேளை கொள்கைகளை மாற்றிக் கொண்டால், பாஜகவோடு நட்பு பாராட்டுவதிலும் , கூட்டணி வைப்பதிலும் சிக்கல் இல்லை என்றுதான் சொன்னேன்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய எந்த அவசரமும் இல்லை. தற்போது திமுகவுடான கூட்டணியிலேயே விசிக பயணித்து வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. அனைவரும் கட்டுக்கோப்புடன், ஒற்றுமையாக இருக்கிறோம். சனாதன சக்திகளை வீழ்த்த ஒன்றுபட்டு செயல் படுகிறோம்” என்று அவர் அப்படியே ஜகா வாங்கினார்.

திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்

இருந்தபோதிலும் எதற்காக அவர் திடீரென பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் என்று சொன்னார் என்பதற்கான உண்மையான காரணம் இதுவரை யாருக்கும் பிடிபடவில்லை.

அடுத்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திமுக அரசுக்கு அவ்வப்போது தலைவலியையும், குடைச்சலையும் கொடுத்து வருவது கண்கூடு.

கம்யூனிஸ்ட் நெருக்கடி

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் மாதம்தோறும் மின் கணக்கீடு செய்வதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியபோது அவர் இப்படி சொன்னதால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, பாலகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தது.

இந்த நிலையில் “பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கம் 1000 ரூபாயுடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருட்களுடன், செங்கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் கொள்முதல் செய்து வழங்கி விவசாயிகள் பயனடையச் செய்ய வேண்டும். எந்த விதத்திலும் விவசாயிகள் பாதிக்க கூடாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இரு நாட்களுக்கு முன் திமுக அரசுக்கு கோரிக்கை வைத்து மறைமுக நெருக்கடியும் அளித்தார்.

அடுத்ததாக முதலமைச்சருக்கு ஆலோசனை என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மிக அண்மையில் மீண்டும் ஒரு அழுத்தத்தை கொடுத்திருக்கிறார்.

பாலகிருஷ்ணன் கிடுக்குப்பிடி கேள்வி

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று நெய்வேலியில் நடந்த பிரமாண்டப் பேரணியில் ஒரு 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். என்எல்சி நிர்வாகம் நிலத்துக்கு உரிய நஷ்டஈடு வழங்கவேண்டும். உரிய இழப்பீடு கொடுத்த பின்னர்தான் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதேபோல், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கின்றபோது, அங்கிருக்கும் விவசாயிகள், கிராம மக்கள் நிலத்தை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் தொழிற்சாலை, தொழில் வசதிகள் தேவையா? என்றால் தேவைதான். ஆனால், அதற்காக விவசாயிகளை மொத்தமாக அழித்து, நிர்க்கதியாக்கி, அவர்களை ஊரைவிட்டு விரட்டி, அவர்களை அகதிகளாக்கிவிட்டு தொழிற் வளர்ச்சி என்றால், யாருக்காக இந்த தொழில் வளர்ச்சி? என்ற கேள்விதான் வருகிறது. எனவே, தமிழக முதலமைச்சர் இதில் நிதானமான அணுகுமுறையை கையாள வேண்டும்.

சேலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கோவிலில் வழிபாடு மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் சாதி ரீதியான பிரச்சினை தமிழகத்தில் இன்னும் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. எனவே சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி இது பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் விவாதிக்கவேண்டும்.

ஆதிதிராவிட பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு நிதி முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். அதில் நிறைய ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே தவறு செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக தலைமையிலான இந்த கூட்டணி கண்டிப்பாக தொடரும்” என்று குறிப்பிட்டடார்.

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியா?

“இப்படி அடுத்தடுத்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கருத்து தெரிவிப்பது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கூறப்பட்டதாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் இந்த முறை தங்கள் கூட்டணிக்குள் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளை கொண்டு வருவதற்கு திமுக தலைமை இப்போதே தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்பது இந்த மூன்று கட்சிகளுக்கும் நன்றாகவே தெரியும். இதனால் தங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளின் எண்ணிக்கை சரிபாதியாக குறையலாம் என்று மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு சந்தேகம் வந்து இருப்பதுபோல் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு : செக் வைக்கும் கூட்டணி கட்சிகள்?

அதுமாதிரி எதுவும் நடந்து விடக்கூடாது என்று இந்த மூன்று கட்சிகளும் நினைக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோரிக்கைகளை வைத்து விட்டு முடிவில்2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்த கூட்டணி கண்டிப்பாக தொடரும் என்று பாலகிருஷ்ணன் கூறுகிறார். அவர் இந்திய கம்யூனிஸ்டுக்காகவும் இப்படி சொல்கிறார் என்று யூகிக்கவும் தோன்றுகிறது. ஏனென்றால் கடந்த ஐந்தாண்டுகளாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் தமிழகத்தை பொறுத்தவரை ஒரே மாதிரியான முடிவைத்தான் எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவனும் முதலில் தேர்தல் கூட்டணி வைக்க பாஜகவுக்கு நிபந்தனை விதித்து விட்டு, பின்னர் அதை அப்படியே பூசி மெழுகியதும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிடம் தனது கட்சிக்கான தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து போய் விடக்கூடாது, முன்பை விட ஓரிரு தொகுதிகள் அதிகமாக தர வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதற்காக காட்டிய பரபரப்பு பேச்சு என்றே கருதத் தோன்றுகிறது” என அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதிலும் உண்மை இருப்பது போலவே தெரிகிறது!

Views: - 265

0

0