‘மதுரையில வெங்கடேசன்னு ஒரு எம்.பி. இருக்கான்…அவன்கிட்ட கேளுங்க’: கூட்டணி கட்சி எம்.பி.யை ஒருமையில் பேசிய அமைச்சருக்கு கண்டனம்..!!

Author: Aarthi Sivakumar
27 November 2021, 11:55 am
Quick Share

மதுரை: மதுரை எய்ம்ஸ் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு மதுரை எம்.பி., வெங்கடேசனை ஒருமையில் குறிப்பிட்ட தி.மு.க., அமைச்சர் நேருவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை விமான நிலையத்திற்கு வந்த தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அமைச்சர் நேரு, ‘சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்குறீங்க..மதுரையில வெங்கடேசன்னு ஒரு எம்.பி., இருக்கான்..அவன்கிட்ட கேளுங்க’ என கூட்டணி கட்சி எம்.பி.யை ஒருமையில் பேசியுள்ளார்.

இதற்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலர் கணேசன், மாவட்ட செயலர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

மாறாக, ‘சம்பந்தப்பட்டவர்களை விட்டு என்னிடம் வந்து கேட்கிறீர்கள். மதுரையில் வெங்கடேசன் என்ற எம்.பி., ஒருவன் இருக்கிறான். அவனிடம் கேளுங்கள்’ என நேரு பதில் அளித்துள்ளார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட கூட்டணி கட்சியின் எம்.பி.யை ஆளுங்கட்சி அமைச்சர் பொது வெளியில் இவ்வாறு பேசியுள்ளது கண்டனத்திற்கு உரியது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 267

0

0