கூண்டோடு பாஜகவுக்கு தாவும் மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள்…? மகனால்அதிர்ச்சியில் உறைந்த வைகோ!

Author: Babu Lakshmanan
8 October 2022, 6:20 pm
Quick Share

மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை. வையாபுரி தேர்வு செய்யப்பட்டு 7 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனாலும் கட்சியை வளர்க்க சிறு துரும்பு அளவிற்கு கூட அவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று மதிமுகவின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து மனக் குமுறல்களுடன் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

மேலும் அவருடைய வருகையை முக்கிய நிர்வாகிகள் பலர் ஏற்றுக்கொள்ளாத சூழலில், அவர்களை அனுசரித்துச் செல்லாமல், ஆக்ரோஷம் காட்டியும் வருகிறார், துரை. வையாபுரி. இதுதான் மதிமுகவினரை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதுமட்டுமல்ல, கட்சியை வளர்க்கிறேன் என்று கூறி வைகோவின் பெயரை பயன்படுத்தி துரை வையாபுரி செய்யும் அலப்பறைகளுக்கும் அளவே இல்லை. ஒரு சர்வாதிகாரி போலவே செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டையும் அவர் மீது வைக்கிறார்கள்.

அதுவும் கடந்த வாரம் கோவில்பட்டியில் நடந்த கட்சி பொதுக் கூட்டத்தில், தான் பேசியதை துரை வையாபுரி ட்விட்டரிலும் பதிவிட்டு மதிமுகவில் பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கினார்.

அதில்,”எந்த உழைப்பையும் கொடுக்காமல் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்துகொண்டு இருப்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. தாராளமாக வெளியே போகலாம் என்று கோவில்பட்டியில் பேசினேன். இது தவறு என்றால், இந்தத் தவறை ஆயிரம் முறை செய்வேன். என் பேச்சை திரித்து பத்திரிகைகளிலும், சமூக வலைதளங்களிலும் எழுதுவதற்கு காரணமாக இருந்து வரும் துரோகிகளுக்கு, என் கழகப் பணிகளையே பதிலாகத் தருகிறேன்” என்று
பொங்கி இருந்தார்.

அவர் இப்படி எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கட்சியின் பொது செயலாளர் வைகோவுக்கு கடும் அதிர்ச்சி அளித்தனர்.

ஏற்கனவே வைகோவின் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு துரை வையாபுரிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கவேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியபோது, அதற்கு 15க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“திமுகவில் கருணாநிதி தனது மகன் ஸ்டாலின் மூலம் வாரிசு அரசியலை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் நாம் கட்சியே தொடங்கினோம். இப்போது திமுகவில் மூன்றாம் தலைமுறை வாரிசாக உதயநிதியும் வந்துவிட்டார். இந்த நிலையில் மீண்டும் அதே தவறை நாம் செய்கிறோம். இது சரியல்ல. திமுகவிலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டபோது உங்களுக்கு ஆதரவாக 7 பேர் தீக்குளித்து தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டனர். அந்தப் பாவம் நம்மை சும்மா விடாது” என்று ஆவேசப்பட்டனர்.

தவிர 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல் என இரண்டிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மதிமுகவின் தனித்தன்மையை வைகோ அடியோடு தொலைத்து விட்டார் என்றும் அவர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில்தான் துரை வையாபுரி பங்கேற்கும் மதிமுக பொதுக் கூட்டங்களில் கட்சியினரோ, பொதுமக்களோ ஆர்வமாக கலந்து கொள்வதில்லை. 200, 250 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

இப்படியே போனால் கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ என்று கதிகலங்கும் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் கவலைப்பட தொடங்கியிருக்கின்றனர்.

வைகோவின் பக்கம் செல்லாமல் திமுகவிலேயே இருந்திருந்தால், இந்நேரம் ஒரு அமைச்சராகவோ, எம்பி, எம்எல்ஏவாகவோ மாநகராட்சி மேயராகவோ கூட ஆகியிருக்கலாம். ஆனால் 28 ஆண்டுகள் வைகோ பக்கமிருந்து நாம் பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்று அவர்கள் புலம்பவும் செய்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம், கட்சியை விட்டு விலகியுள்ள மதிமுக நிர்வாகிகள் திமுகவில் சேர நினைப்பதாகவும், ஆனால், மதிமுகவினரை சேர்த்து வைகோவுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த ஸ்டாலின் விரும்பமாட்டார் என்பதால், அடுத்து என்ன செய்வது என அவர்கள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

விசிக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக பக்கம் போனால் நிலைமை இப்போது இருப்பதை விட இன்னும் மோசமாகிவிடும் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

தற்போது அவர்களின் பார்வை பாஜக பக்கம், மெல்லத் திரும்பி இருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாஜகவில் இணைய தங்களின் விருப்பத்தை அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும் பாஜகவில் எந்தவொரு முக்கிய பொறுப்பும் வேண்டாம் என்கிற கோரிக்கையுடன் மதிமுக மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் அவரை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அண்ணாமலை தனது இரண்டு வார அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 12-ம் தேதி சென்னை திரும்பிய பிறகுதான் இதுபற்றிய விவரம் முழுமையாக தெரியவரும்.

எனினும் முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர், சிவகங்கை, கரூர், சேலம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக செயலாளர்கள், நிர்வாகிகள் தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.

இது குறித்து பெயர்களை வெளியிட விரும்பாத மதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது,”திமுகவிலிருந்து வைகோவுடன் வெளியேறியவர்கள் அனைவருமே தற்போது 60 வயதை கடந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் வைகோவுக்காக தோள் கொடுத்திருப்பார்கள் என்று துரை வையாபுரிக்கு தெரியாது.

ஏனென்றால் அப்போது 22 வயது இளைஞராக இருந்த துரை. வையாபுரி அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் அவர் கட்சிக்காக பிரச்சாரத்தையே ஆரம்பித்தார்.

வைகோவின் உடல்நிலை கருதித்தான், துரை. வையாபுரிக்கு கட்சியின் தலைமைச் செயலாளர் பதவி கொடுக்கவே ஒப்புக்கொண்டோம். அவரும் முதலில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுக் கூட்டங்கள் என அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார். ஆனால், சமீபகாலமாக, அவரது நடவடிக்கைகள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, உழைப்பவர்கள் மட்டும் கட்சியில் இருக்கலாம், மற்றவர்களுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன, வெளியேறலாம் என அவர் சர்வாதிகாரி பாணியில் மிரட்டியது எங்களை அதிர்ச்சியடைய வைத்தது.

கட்சியில் பெரும்பாலானோரின் எதிர்ப்பை மீறி தலைமையில் ஒரு பெரிய மாற்றம் வரும்போது எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம்தான். அதை தலைமைப் பொறுப்பில் உள்ளவர் சிக்கல் இன்றி தீர்த்து வைப்பதில் தான் அவரது தலைமைப் பண்பு வெளிப்படும். ஆனால், அந்த எண்ணமே துரை வையாபுரியிடம் துளியும் இல்லை, நிர்வாகிகளை எடுத்தெறிந்து பேசுகிறார். எனவேதான் காஞ்சிபுரம் மாவட்ட மதிமுகவினர் சமீபத்தில் கூண்டோடு தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் மதிமுக ஓரளவுக்கு வலுவாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சியே காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி வைகோவிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்றால் அவரை சந்திப்பதற்கு துரை வையாபுரி தரப்பில் முட்டுக்கட்டை போடப் படுகிறது. மதிமுக சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிலர் மூலம் முயற்சித்த போதும் வைகோவை சந்திக்க வழி பிறக்கவில்லை.

முன்பெல்லாம் எளிதில் அணுகக் கூடிய தலைவராக இருந்த வைகோ, துரை வையாபுரியின் அரசியல் வருகைக்குப் பிறகு சந்திக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி பல மாவட்டங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி கட்சியைவிட்டு விலக முடிவு எடுத்து இருக்கின்றனர்.

கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் மிகுந்த மதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவும் நிலை என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் மதிமுகவில் துரை வையாபுரியால்
நாங்கள்படும் வேதனைக்கு பாஜகவில் இணைவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்” என்று அந்த நிர்வாகிகள் கூறினர்.

“ஏற்கனவே திமுகவுடன், மதிமுக ஐக்கியமாகி விட்டது என்று பொதுவெளியில் அனைத்து தரப்பினரிடமும் ஒரு தோற்றம் உருவாகிவிட்ட நிலையில் வைகோ இனி என்ன செய்வார்?…கட்சியை கலைத்து விடுவாரா?…என்ற கேள்விதான் மிஞ்சுகிறது” என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“மதிமுகவில் இப்படியொரு நெருக்கடியான நிலை ஏற்பட்டதே வைகோவால்தான். கட்சியில் வாரிசு அரசியல் கூடாது என்று உரக்க குரல் எழுப்பியதற்காக திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் 1994-ல் தனிக்கட்சியை தொடங்கினார்.
ஆனால் தனது கொள்கையில் அவர் உறுதியாக இல்லை. 2017ம் ஆண்டு கருணாநிதி பக்கமே மீண்டும் சாய்ந்து விட்டார். அதுவும் 2019, 2021 தேர்தல்களில் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டு தனது மதிப்பை மதிமுக அடியோடு கெடுத்துக்கொண்டது.

இதுதான் மதிமுக மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. வைகோவுடன் செல்லாமல், திமுகவிலேயே இருந்திருந்தால் நன்றாக முன்னேறி இருப்போம். ஆனால் அதை வைகோ தடுத்துவிட்டாரே என்ற கோபம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எழுவது இயல்பான ஒன்றுதான்.

எனவேதான் இனியும் கட்சியில் நீடித்து எல்லாவற்றையும் இழப்பதைவிட பாஜகவில் சேருவது புத்திசாலித்தனம் என்று மதிமுக நிர்வாகிகள் நினைத்திருக்கலாம். கட்சிக்கு எந்த செல்வாக்கும் இல்லாத நிலையில், தொடர்ந்து மதிமுகவை நடத்துவதா?அல்லது திமுகவுடன் இணைப்பதா?…என்பதை வைகோ தான் முடிவு செய்யவேண்டும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுவும் நல்ல யோசனையாகவே தோன்றுகிறது!

Views: - 489

0

0