தேர்தலை புறக்கணிக்கிறதா மதிமுக?… திமுக நிபந்தனையால் திண்டாட்டம்… பதை பதைப்பில் வைகோ…!!

Author: Babu Lakshmanan
26 February 2024, 9:08 pm
Quick Share

கடந்த ஏழு ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் வைகோவின் மதிமுகவுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏனென்றால் திமுக தலைமையிடம்
6 இடங்களில் போட்டியிடுவதற்கான விருப்பப்பட்டியலை கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ சமர்ப்பித்து இருந்தார்.

அதில் குறிப்பாக தங்களுக்கு திருச்சி, விருதுநகர் தொகுதிகளையும் 2019 தேர்தல் போல ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார். ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான ஆலோசனை கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்த போது முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆகியவற்றுடன் மதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

முஸ்லிம் லீக்கிற்கும், கொங்கு நாடு கட்சிக்கும் 2019 தேர்தலில் திமுக தலா ஒரு தொகுதியைத்தான் ஒதுக்கி இருந்தது. அதே கட்சிகளின் வரிசையில் தற்போதும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தபோதே ஒரேயொரு தொகுதியைத்தான் தங்களுக்கு திமுக கொடுக்க விரும்புகிறது என்பதை மதிமுக புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

டி ஆர் பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழு, மதிமுக சார்பில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் உங்களுக்கு விருதுநகர் தொகுதியை மட்டும் ஒதுக்குகிறோம், ஆனால் திமுகவின் சின்னத்தில்தான் நீங்கள் போட்டியிடவேண்டும் என்று கறாராக கூறிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் 2021 சட்டப்பேரவை தேர்தலில் 12 தொகுதிகளை மதிமுக கேட்டது.
ஆனால் திமுக கொடுத்ததோ, ஆறு தொகுதிகள் மட்டும்தான். அந்த தொகுதிகளிலும் கூட தங்களது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக நெருக்கடி அளித்ததை வைகோ பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்ட போதிலும் அக்கட்சியின் மூத்த தலைவரான கணேசமூர்த்தி திமுக சின்னத்தில் நின்றுதான் வெற்றி பெற்றார்.

இன்னொரு பக்கம் வைகோவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் கொடுத்தும் திமுக அப்போது அவரை சரிக்கட்டி விட்டது.

ஆனால் தொடர்ந்து சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக சின்னத்திலேயே போட்டியிட்டால் கட்சியின் அங்கீகாரம் பறிபோய் பம்பரம் சின்னமும் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் என்ற இக்கட்டான சூழலில்தான் இம்முறை குறைந்தபட்சம் இரண்டு எம்பி தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். அதில் எங்களது கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்பதை மதிமுக உறுதிப்பட தெரிவித்து இருந்தது.
ஆனால் இரு தினங்களுக்கு முன்பு நடந்த தொகுதி பங்கீட்டில் மதிமுகவின் இந்த கோரிக்கையை திமுக கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

அடுத்த சுற்று பேச்சின்போது பார்த்துக் கொள்ளலாம் என்று
சர்வ சாதரணமாக கூறிவிட்டது.

இதனால் வைகோ மட்டுமல்ல, அவருடைய மகன் துரை வைகோவும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டார். திமுக கொடுக்கும் ஒரு தொகுதியில் மகனை நிற்க வைத்தால் மகனுக்காகவே வைகோ கட்சியை நடத்துகிறார், அதுவும் திமுக சின்னத்தில் போட்டியிட வைக்கிறார் என்னும் முணுமுணுப்பு சத்தம் கேட்கும். இரண்டு தொகுதிகள் என்றால் நீண்ட காலமாக கட்சிக்கு உழைக்கும் ஒருவருக்கு ஒரு எம்பி சீட்டை கொடுத்து கலகக் குரலை அடக்கி விடலாம் என்பது வைகோவின் எண்ணமாக உள்ளது, என்று கூறப்படுகிறது.

இரண்டு தொகுதிகள் கொடுத்தாலும் கூட திமுக சின்னத்திலேயே மதிமுகவை போட்டியிடும்படி அறிவாலயம் கூறினால் என்ன செய்வது என்ற குழப்பத்திற்கும் வைகோ உள்ளாகி இருக்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக
திமுகவின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்ட போதிலும், நமக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்க மறுக்கிறார்களே, கட்சி சின்னத்திலும் போட்டியிட விட மாட்டோம் என்கிறார்களே?…என்ற மனக்குமுறல் வைகோவிடம் நிறையவே உள்ளது.

ஆனால் அவராலும், அவருடைய மகனாலும் இதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.

அடுத்த சுற்று பேச்சின்போது, இரண்டு தொகுதிகள் தேவை, மதிமுக சின்னத்தில்தான் போட்டி என்பதை மீண்டும் திமுகவிடம் வலியுறுத்துவோம். இதற்கு
ஒப்புக் கொள்ளாவிட்டால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறாமலேயே நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்ற முடிவுக்கு வைகோவும் அவருடைய மகன் துரை வைகோவும் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மதிமுக இப்படி தேர்தலை புறக்கணிக்க நினைப்பது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது ஜெயலலிதா தேமுதிகவுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து 41 தொகுதிகளை ஒதுக்கியதையும், மதிமுகவுக்கு ஒன்பது இடங்களை மட்டுமே கொடுக்க முன் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்தத் தேர்தலில் போட்டியிடாமல் வைகோ புறக்கணித்ததோடு யாருக்கும் ஆதரவில்லை என்றும் அறிவித்தார்
இப்போதும் அதே போன்ற முடிவை எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு இருக்கிறார் என்பதுதான் எதார்த்தம்.

இதே போல்தான் திமுகவிடம்
நான்கு தொகுதிகளை கேட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைமையும் உள்ளது. குறிப்பாக மதுரை, கோவை எம்பி சீட்டுகளை எங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் தலைவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் திமுகவோ மதுரையை மீண்டும் தருகிறோம். கோவையை எதிர்பார்க்காதீர்கள்.
கடலூர் அல்லது மயிலாடுதுறை ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் திமுக தலைமை கூறிவிட்டதாக தெரிகிறது.

நடிகர் கமலுக்கு கோவை தொகுதியை ஒதுக்குவதற்காக திமுக இப்படி கூறி இருக்கலாம். அதேநேரம் கடலூர், மயிலாடுதுறையை மார்க்சிஸ்ட் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
குறிப்பாக கடலூர் தொகுதியில் திமுக எம்பி ரமேஷுக்கு எதிரான மனநிலை மக்களிடம் நிலவுகிறது. அங்கு திமுக போட்டியிட்டாலே ஜெயிப்பது கடினம் என்று கூறப்படும் நிலையில் தங்களிடம் அந்தத் தொகுதியை திமுக தள்ளிவிடப் பார்க்கிறது என்று மார்க்சிஸ்ட் கருதுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மயிலாடுதுறையோ மார்க்சிஸ்ட்டுக்கு பெயரளவில் கூட செல்வாக்கு இல்லாத தொகுதி. அங்கு போட்டியிட்டால் முழுக்க முழுக்க திமுகவின் உழைப்பைத் தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கும்.

தவிர அந்தத் தொகுதியின் தற்போதைய திமுக எம்பியான ராமலிங்கம் மீது அவர் தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை என்கிற அதிருப்தி பொது மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. இதனால் அங்கு வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலை மார்க்சிஸ்ட்டுக்கு ஏற்படலாம்.

இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுவது இதுதான்.

“மதிமுகவுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் திமுக மிகவும் கண்டிப்புடன் இருப்பதற்கு காரணமே தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆளும் கட்சித் தரப்பில் உள்ள குறைபாடுகளை இந்த இரு கட்சிகளும் தட்டிக் கேட்காமல் ஆதரவு குரல் கொடுத்ததுதான்.
திமுக அரசுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அதைக் கண்டித்து முதலில் அறிக்கை வெளியிடுவது மதிமுகவும், காங்கிரசும்தான்.

இன்னும் சில நேரம் திமுக அமைச்சர்களை மிஞ்சும் அளவிற்கு கூட இந்த கட்சிகளின் நடவடிக்கைகள் இருக்கும். விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளாவது மக்களின் பிரச்சினைகளுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுப்பது உண்டு. ஆனால் வைகோ,கே எஸ் அழகிரி, செல்வப் பெருந்தகை போன்றோர் கண்களை மூடிக்கொண்டு திமுகவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள். இதனால் இயல்பாகவே இவர்களுக்கு நம்மை விட்டால் வேறு கதியே கிடையாது என்கிற எண்ணம் திமுக தலைமைக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற நிலையில் இண்டியா கூட்டணியில் பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு
12 தொகுதிகள் கொடுங்கள், இல்லையென்றால் சென்ற தேர்தல் போல ஒன்பது சீட்களை ஒதுக்கினாலேபோதும் என்று காங்கிரஸ் கெஞ்சுவதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
வைகோவோ திமுகவில் வாரிசு அரசியல் முன்னெடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்து தான் 1994ல் மதிமுகவையே தொடங்கினார். காலப்போக்கில் அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் பாடுகிறார். பிறகு எப்படி திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கி தரும் என்று வைகோ நம்புகிறார்
எனத் தெரியவில்லை.

இரு கம்யூனிஸ்டுகளும் ஒரு தொகுதி ஒதுக்கினாலும் கூட அதை மனதார ஏற்றுக்கொண்டு, தேர்தல் செலவுக்காக திமுகவிடம் கடந்த தேர்தல் போல 25 கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுக்கொண்டு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள். ஆனால் வைகோவோ தன்மான சிங்கம். அதனால் திமுகவிடம் அன்பளிப்பு எதையும் எதிர்பார்க்காமல் ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டால் தேர்தலை மதிமுக புறக்கணிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஏனென்றால் கட்சியின் அங்கீகாரமும், சின்னமும்தான் அவருடைய மகனின் எதிர்கால அரசியலுக்கு மிக முக்கியம். அதனால் சிறு சிறு கட்சிகளை திமுக விழுங்கப் பார்க்கிறது என்று பொதுவெளியில் வைக்கப்படுவது போன்ற குற்றச்சாட்டை வைகோ ஒருபோதும் வைக்காமல் தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவே செய்வார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு அது திமுக சின்னத்தில் போட்டியிடுகிறது. எதிர்காலத்தில் அக் கட்சியும் திமுகவுடன் மிகுந்த ஐக்கியமாகி வைகோவின் மதிமுக போல பரிதாப நிலைக்கு உள்ளாகிவிடக் கூடும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட வைகோவுக்கு ஏற்பட்டுள்ள சோதனையை என்னவென்று சொல்வது என்பதுதான் தெரியவில்லை!

Views: - 126

0

0