பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது..!!

Author: Rajesh
12 May 2022, 8:52 am

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் , கடலுார், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம்பெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், அங்கு துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை உள்ளிட்ட ஆலைகள் துவங்க முடியாது என்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டது .

மேலும், இச்சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 24 பேர் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இதில், முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பிற்கான உட்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள், வேளாண் பாதுகாப்பிற்கான கொள்கைகள், பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண்மை மற்றும் அதை சார்ந்த தொழிலகங்கள் மேம்பாடு ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?