இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு: வன்முறை பதற்றத்தை தணிக்க அரசு உத்தரவு..!!

Author: Rajesh
12 May 2022, 10:00 am
Quick Share

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருவதுடன், அந்த நாட்டு அரசியலையும் புரட்டிப்போட்டு உள்ளது.

பொருளாதார நெருக்கடியை முன்வைத்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அமைதியான போராட்டத்தில் கடந்த 9ம் தேதி வன்முறை வெடித்தது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதால் விரக்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், கொழும்புவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாய்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால், நாடு இதுவரை கண்டிராத வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டது.

இலங்கை முழுவதும் பரவிய இந்த வன்முறை சம்பவங்கள் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் உள்பட ராஜபக்சே ஆதரவாளர்கள் சுமார் 58 பேரின் வீடுகள் மற்றும் சொத்துகள் மீது தாக்குதலும், தீ வைப்பும் அரங்கேறின. ராஜபக்சே ஆதரவாளர்கள், அரசு எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் எம்.பி. மற்றும் போலீசாரும் அடங்கியது குறிப்பிடத்தக்கது.

தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால், கலவரக்காரர்களை கண்டதும் சுட முப்படையினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் குறையத்தொடங்கின.

இதற்கிடையில், இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு அளிக்கப்படும் என்றும் பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Views: - 1419

1

0