மேகதாது அணை விவகாரம்… ஒருபுறம் தீவிரம் காட்டும் கர்நாடகா…. மறுபுறம் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் மவுனம் ஏன்..? பிஆர் பாண்டியன்

Author: Babu Lakshmanan
12 March 2022, 4:23 pm
Quick Share

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இனியாவது மவுனம் கலைக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருகிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு புதிய கிணறுகள் தோண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 2016 ஆம் ஆண்டிற்கு முன் தமிழக அரசால் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி கச்சா எடுக்கும் பணிக்கு கிணறுகள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் போதுமான அளவிற்கு கச்சா கிடைக்காததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கச்சா எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில கிணறுகளில் எடுக்கப்பட்ட கச்சா நிறைவடைந்த நிலையில் அக்கிணறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக 9 கிணறுகள் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு ஒ.என். ஜி.சி அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக வந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய கிணறுகள் தமிழக அரசின் அனுமதியின்றி அமைக்க முடியாது என்பதை அறிந்துள்ள ஓஎன்ஜிசி நிர்வாகம், திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை சீர்குழைக்க முயற்சி செய்கிறதோ? என்ற அச்சம் எழுகிறது. 2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுடன் ஓஎன்ஜிசி தொகுப்பு ஒப்பந்த அடிப்படையில் கச்சா, பாறை எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட கனிம வளங்களையும் எடுப்பதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிணறுகளிலிருந்து மறைமுகமாக ஹைட்ரோகார்பன், பாறை எரிவாயு உள்ளிட்ட எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

எனவே, தமிழக அரசாங்கம் ஏற்கனவே முகமது இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி கிணறுகள் மற்றும் கச்சா முடிந்த நிலையில் மூடப்பட்டுள்ள கிணறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு அடையாளப்படுத்தி அதனை நிரந்தரமாக மூடுவதற்கு முன்வர வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ரூபாய் ஆயிரம் கோடி சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிலையில் 2022ம் ஆண்டு இறுதிக்குள் அணை கட்டுமானப் பணி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை சட்டவிரோதம் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்திட முன்வர வேண்டும்.
இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதில் அளிக்க முன்வர வேண்டும். முதலமைச்சர் பதிலுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும். இனி முதல்வரின் மவுனம் தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும்.

காவிரி, டெல்டா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. விற்பனை செய்த விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் பல இடங்களில் மாதக்கணக்கில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். தாளடி அறுவடைப் பணிகள் 50%ம் முடிவடைதற்குள் பல இடங்களில் கொள்முதல் நிலையங்களை மூடி வருவதை நிறுத்த வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் நெல் கொள்முதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தமிழக முதலமைச்சர் அறிவிக்க முன் வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 1311

0

0