போலீஸை அறைந்த அமைச்சரின் PA… திமுக எம்எல்ஏவால் அசிங்கப்பட்ட அதிகாரி… அன்று சொன்ன உதயநிதி… இன்று செய்யும் நிர்வாகிகள்.!!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 11:41 am
anitha radhakrishanan - ezhilarasan - updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல்துறையினரை, ரவுடிகள் திருப்பித் தாக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே போலீசாரை தாக்கும் அவலங்களும் நடந்து வருகின்றன.

போலீசாருக்கு அறை

அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அங்கு வந்த தலைமை காவலர் முத்துக்குமார், அந்தக் காரை எடுக்குமாறு ஓட்டுநர் குமாரிடம் கூறியுள்ளார். அவரோ, இது அமைச்சரின் உதவியாளரின் கார்… எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். பின்னர், அருகில் இருந்தவர்கள் எல்லாம் காரை எடுக்குமாறு கூறியதை தொடர்ந்து, கார் தள்ளி நிறுத்தப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்து ஓட்டலில் இருந்து வெளியே வந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன், காவலர் முத்துக்குமாரை கடுமையாக திட்டினார். இருவர் பிடித்துக் கொள்ள, காவலர் முத்துக்குமாரை கண்ணத்தில் அறைந்து, கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் மீது கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட காவலர் முத்துக்குமார் கூறுகையில், ” காரை எடுக்குமாறு நான் பணிவோடுதான் சொன்னேன். ஆனால், அமைச்சரின் உதவியாளர் பொதுமக்களின் முன்னிலையில் கடுமையாக பேசி, தாக்கினார். பின்னர், அன்றிரவே, இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்,” என்றார்.

செருப்பு பிய்ந்துடும்

இதேபோல, திமுக எம்எல்ஏ ஒருவர் அரசு அதிகாரியை தகாத வார்த்தைகளால் கூறி அவமதித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தில் ரூ.20 கோடி செலவில் யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்ட வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த யாத்ரி நிவாஸ் கட்டிடங்களை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று முன்தினம் காஞ்சிபுரத்திற்கு சென்றார். அப்போது, அங்கு ஆய்வு செய்து கொண்டிருக்கையில், பழைய லாரிகள் வாகன நிறுத்தும் இடத்தில் நிற்பதை கண்டு, அமைச்சருடன் சென்ற எம்எல்ஏ எழிலரசன் ஆவேசமடைந்தார். ‘யாருய்யா கோவில் இடத்தில் வண்டிகள நிறுத்தி இருக்கறது’, என்று கேட்டு விட்டு, கோவில் அதிகாரி தியாகராஜனை பார்த்து, செருப்பு பிய்ந்து விடும் என்று ஆக்ரோஷமாக வார்த்தைகளை விட்டெறிந்தார். இதனைக் கேட்ட அமைச்சரும், அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

எம்எல்ஏவின் இந்தப் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசு ஊழியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, திமுகவினர் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உரிய முறையில் நடத்தப்படுவதில்லை என்றும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சொன்னதை செய்யும் திமுக

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, திமுக இளைஞரணி செயலாளரும், தற்போதைய சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி, போலீசாருக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். சில காவலர்களின் பெயர்களை குறிப்பிட்ட அவர், இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு, எங்களுக்கு தெரியாத காவல்துறையா…? நாங்கள் பார்க்காத காவல்துறையா.? என்று போலீசாரை மிரட்டும் தொனியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

udhayanidhi - updatenews360

தற்போது, அவர் பேசியது போன்ற நிகழ்வுகளே தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. காவலர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளும் ஆளும் கட்சியினரால் ஒடுக்கப்படுகின்றனர். இதுபோன்ற நிலை நீடித்தால், காவலர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதேவேளையில், அதிகாரம் கையில் இருப்பதை தவறாகப் பயன்படுத்தி, திமுகவினர் கட்டப்பஞ்சாயத்துக்களையும், ரவுடிஷத்தையும் வெளிப்படையாக, தைரியமாக செய்து வருகின்றனர்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர வேண்டுமென்றால், முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, இதுபோன்ற அரசு அதிகாரிகளுக்கு தொந்தரவாக இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Views: - 366

1

0