‘அதுக்கு ஒன்னும் தெரியாது, பாவம்’… ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் குறித்து அமைச்சர் துரைமுருகன் கிண்டல்…!!
Author: Babu Lakshmanan13 ஜனவரி 2024, 9:57 காலை
எதிலும் ஏடாகூடமான காரியத்தை செய்பவர் நமது ஆளுநர் என்றும், கொஞ்ச பரபரப்போடு செயல்படுவர் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நக்கலாக தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுசெயலாளரும், தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் சேலம் இளைஞரணி மாநாடு சிறப்பாக நடைபெறும் மாவட்டத்திலிருந்து அதிகம் பேர் கலந்துகொள்வது எனவும், அண்மையில் தமிழ்நாட்டில் புயல் மற்றும் இயற்கை சீற்றத்தினால் 8 மாவட்டங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டது, அந்த மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கி அவர்களுக்கு உதவிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, தமிழகத்தில் தொழில்துறையில் முதன்மை மாநிலமாக திகழ உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு சந்தித்த போது, ஊழல் வழக்கில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்தித்தது குறித்து கேட்டதற்கு, எதிலும் ஏடாகூடமான காரியத்தை செய்பவர் நமது ஆளுநர். கொஞ்ச பரபரப்போடு செயல்படுவர் அவர். அதிலே ஒன்றுதான் இதுவும்.
வெள்ளம் காரணமாக 760க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்வதற்கான மதிப்பீடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். சேதமடைந்த கால்வாய்கள் மற்றும் மதங்கள் உள்ளிட்டவற்றை சரி செய்ய சுமார் 2000 கோடிக்கு மேல் ஆகும் என எங்கள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், எனக் கூறினார்.
பொன்முடிக்கு நீதிமன்றம் விலக்கு அளித்தது குறித்து கேட்டதற்கு, அது வரவேற்க்கத்தக்கது என கூறினார்.
நீட் எதிர்ப்பு தேசத்திற்கான எதிர்ப்பு என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறாரே என கேட்டதற்கு, “அய்யய்யோ அவங்க ரொம்ப பெரியவங்க, பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது,” என்றார்.
0
0