சர்ச்சைகளை உருவாக்கும் மூத்த அமைச்சர்கள்…? கோர்த்துவிட்டாரா அமைச்சர் எ.வ. வேலு…? சிக்கி தவிக்கும் CM ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
1 September 2022, 4:57 pm
Quick Share

அமைச்சர் ராஜகண்ணப்பன்

திமுக ஆட்சியில் மூத்த அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சையை உருவாக்கும் விதமாக ஏதாவது ஒரு கருத்தை பேசுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. முதலில் கடந்த மார்ச் மாதம் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒரு சர்ச்சையில் சிக்கினார்.

அவர் மீது ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தன்னை அமைச்சர் பலமுறை சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார்.

அவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அதிகாரி என்பதால், இந்த விவகாரம் தற்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது. இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் ராஜகண்ணப்பனின் அமைச்சர் பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படும் இந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்வலையே இன்னும் ஓய்ந்த பாடில்லை.

டிஎஸ்பி குறித்து சர்ச்சை

அதற்குள் இன்னொரு மூத்த அமைச்சரான கே என் நேரு அதிமுக, பாஜக உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளிடம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் விதமாக ஒரு கருத்தை தெரிவித்தார்.

10 நாட்களுக்கு முன்பு, திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் போலீஸ் டிஎஸ்பி ஒருவரை அவர் பாராட்டிப் பேசும்போது, அனைவரும் அதிர்ச்சியடையும் விதமாக
“இந்த டிஎஸ்பி சப்-இன்ஸ்பெக்டராக இருந்தஇந்தபோது எனக்கு பாதுகாப்பு பணி செய்தார். அவருக்கு இருக்கக்கூடிய திறமை என்னவென்றால் என்னவேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். அவர் விரும்பினால், ஒருவரை குற்றவாளியாக்குவார் அல்லது ஒருவரை குற்றவாளி பட்டியலில் இருந்தும் நீக்குவார். அவர் எங்களுடன் வளர்ந்தவர். அதனால் நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று ஒரு குண்டைத் தூக்கிபோட்டார்.

இது தமிழக காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது போலவும், கிண்டல் செய்வது மாதிரியும் இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது.

“அதுமட்டுமில்லாமல் திமுக ஆட்சிக்கு வந்தாலே தனது சொல்படி கேட்கும் போலீஸ் அதிகாரிகள் மூலம் எதிர்க்கட்சிகள் மற்றும் வேண்டாதவர்கள் மீது வழக்கு போட வைத்து சிறைக்குள் தள்ளி விடுவது வழக்கம். இப்போது, அமைச்சர் நேரு அதை உறுதி செய்திருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

இதனால் மூத்த அமைச்சர் நேரு மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய கருத்து தனக்கு மட்டுமின்றி தனது ஆட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக ஸ்டாலின் நினைக்கவும் வாய்ப்பு உண்டு.

கேஎன் நேருவின் பேச்சு பூதாகரமாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் இப்போதெல்லாம் அவர் சற்று அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.

8 வழிச்சாலை திட்டம்

இந்த நிலையில்தான் மிக அண்மையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, செய்தியாளர்களிடம் பேசும்போது சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்து திமுக அரசின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.

அவர் கூறுகையில் “திமுக ஒன்றும் சாலை போடுவதற்கு எதிரி அல்ல, இத் திட்டத்தை கைவிடும்படி திமுக ஒருபோதும் கூறவே இல்லை. விவசாயிகளை அழைத்து பேசி அவர்களின் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு சாலை போடுங்கள். அல்லது மாற்று வழியை கண்டுபிடியுங்கள் என்றுதான் வலியுறுத்தியது. இதுதான் திமுகவின் கொள்கை” என்றார்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருத்தம் செய்து திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 43வது வாக்குறுதியாக விவசாயிகளுக்கு எதிரான சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது என்று கூறப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி, டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்தின் சார்பில் பல முக்கிய கோரிக்கைகளை வைத்தார். அதில் சென்னை சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை கைவிட கோரியதும் ஒன்றாகும்.

இதுதொடர்பாக அன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மாண்புமிகு இந்தியப் பிரதமரிடம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 17.06.2021 அன்று வழங்கிய மனுவின் சுருக்க உள்ளடக்கக் குறிப்பில் 15 e இல் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை – சேலம் பசுமை வழிச் சாலைத்திட்டத்தை கைவிடக்கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இத்திட்டத்தை எதிர்த்து 2018ம் ஆண்டு முதல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 2021 மார்ச் மாதம் வரை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும் வந்துள்ளார். எனவே தற்போது திமுக அரசு சென்னை சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்தில் தனது நிலைப்பாட்டை அப்படியே தலைகீழாக மாற்றிக் கொண்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

இது அத்தனை ஊடகங்களிலும் கேலியாக விமர்சிக்கப்பட்டது. திமுக ஆதரவு செய்தி சேனல்களோ இந்தத் திட்டம் தொடர்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக என்ன சொன்னது, இப்போது என்ன சொல்கிறது? என்ற செய்தியை மட்டும் மேலோட்டமாக கூறி ஒதுங்கிக் கொண்டுவிட்டன.

எ.வ. வேலு விளக்கம்

இந்நிலையில்தான் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, தான் பேசியதற்கு விளக்கமளித்து இருக்கிறார். அதில், “8 வழி சாலை திட்டத்தை நான் எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை, அத்திட்டம் வேண்டும் என்று எங்கும் நான் பேசவில்லை, இது மத்திய அரசின் திட்டம், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது 8 வழிச்சாலை அமைப்பதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்யத்தான் சொன்னார். போக்குவரத்து அதிகரிக்கும்போது சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்போதைய அதிமுக அரசு இதுகுறித்து விவசாயிகளை அழைத்து பேசவில்லை. அதை செய்யத்தான் நாங்கள் கூறினோம். ஆனால் நான் பேசியது தவறாக திரித்து கூறப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டார்.

Minister EV Velu - Updatenews360

அமைச்சர் இப்படி விளக்கம் அளித்திருப்பதற்கு கூட திமுக மேலிடத்தின் அறிவுறுத்தல் காரணமாக இருக்கலாமென்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

திமுகவுக்கு சிக்கல்

ஏனென்றால் இதில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்ற விஷயம் விவசாயிகளுக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 8 வழி சாலைச் திட்டத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் சுமார் 7000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதை வைத்துதான் முந்தைய அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக இப்பிரச்சனையை ஸ்டாலின் பூதாகரமாக்கினார்.

தான் ஆதாயம் அடைவதற்காகவே 8 வழிச் சாலை திட்டத்தை எடப்பாடி பழனிசாமி விவசாயிகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மக்களிடம் திணிக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

anna arivalayam- updatenews360

இது தொடர்பாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எந்த போராட்டம் நடத்தினாலும் அதற்கு ஆதரவும் தெரிவித்தார். சமூகப் போராளிகள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டத்தில் குதித்தவர்களும் இதில் குளிர்காய்ந்து கொண்டனர்.

ஆனால் தற்போது இதே திட்டத்தை திமுக அரசு நிறைவேற்ற விரும்பும் நேரத்தில் அந்த சமூகப் போராளிகள் எல்லாம் எங்கே போய் பதுங்கிக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் ஏன் வாயை மூடிக் கொண்டுள்ளன என்பதும் புரியவில்லை. நிலம் வைத்துள்ள விவசாயிகளும், பாமகவினரும் மட்டுமே தற்போது தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் திமுக வசமாக சிக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. அதேநேரம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக இத்திட்டம் கண்டிப்பாக தேவை என்று கூறி திமுக அரசு இதை நிறைவேற்றவே முயற்சிக்கும்.

அதனால் 8 வழிச் சாலை திட்டத்தில் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதை முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பெரிய விஷயமாகவே கருத மாட்டார்.

பச்சைத்துண்டால் சிக்கல்

அதேநேரம் அமைச்சர் வேலு, பரந்தூர் சர்வதேச விமான நிலையத்திற்கு, விவசாய நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, சாலைப் போக்குவரத்து அதிகரித்து இருக்கிறது. எனவே சாலையை விரிவாக்கம் செய்யலாம் என்றால், நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகள் என்று கூறிவருகின்றனர், என் நிலத்தை எடுக்காதீர் என்றும் சொல்கின்றனர்” என கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

இதுதான் அவருக்கு தற்போது பெரிய வினையாக உருவாகியிருக்கிறது. ஏனென்றால் தேர்தல் பிரச்சாரங்களின்போது திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி இருவரும் பச்சை துண்டு அணிந்துதான் விவசாயிகளிடம் ஆதரவு திரட்டினர். அதுபோல இந்த கருத்தை சொன்ன அமைச்சர் வேலுவும் கூட விவசாயிகள் போராட்டத்தின் போது கழுத்தில் பச்சை துண்டு அணிந்துள்ளது போன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இதைக் கடுமையாக கேலி செய்தும் வருகின்றனர். திமுகவின் ஐடி விங்கோ இதற்கு சரியான பதிலடி கொடுக்க முடியாமல் திணறுவது தெரிகிறது.

மேலும் இந்த பச்சைத் துண்டு விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, கமல், சீமான் உள்ளிட்ட தலைவர்களும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டனர்.
இது 8 வழிச் சாலை விவகாரத்தை விட திமுக தலைமைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அமைச்சர் வேலு, விவசாயிகள் அணியும் பச்சை துண்டு குறித்து ஏளனமாக பேசியிருக்கிறார். இது நமது கட்சியில் உள்ள விவசாயிகளை மட்டுமின்றி வேளாண் தொழிலில் ஈடுபட்டு வரும் அனைவரையும் கிண்டல் செய்வது போல் அமைந்திருக்கிறது. இது 2024 நாடாளுமன்ற தேர்தலில் நமது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று திமுக நிர்வாகிகள், கட்சித் தலைமையிடம் தங்களுடைய மனக்குமுறலை கொட்டித் தீர்த்து இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி மூத்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஏடாகூடமாக எதையாவது பேசி, கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக ஸ்டாலின் நினைப்பதால்தான் ராஜகண்ணப்பன். நேரு, வேலு மூவர் மீதும் கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அமைச்சர்கள் இனி பொதுவெளியில் பேசும்போது, மிகுந்த எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அறிவாலய வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 497

0

0