அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைதா..? திடீரென வைரலான செய்தி ; அமலாக்கத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்

Author: Babu Lakshmanan
14 August 2023, 4:24 pm
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்தத்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை நேற்று முன்தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

அதேவேளையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, கரூரில் கட்டப்பட்டு வரும் அவரது சொகுசு பங்களாவில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், அவரது மனைவி நிர்மலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், அந்த பங்களாவை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்ததாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்நிலையில், அசோக் குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. கொச்சியில் அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும்,4 முறை சம்மன் அனுப்பியும் அசோக் குமார் விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Views: - 327

0

0