உங்க நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சு.. இப்பவாது அதை செய்வீங்களா…? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கிண்டல்..!!

Author: Babu Lakshmanan
13 June 2023, 6:07 pm
Quick Share

சென்னை ; அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கரூரில் அண்மையில் மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 8 நாட்களாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி, பாதுகாப்புக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. தலைமைச்செயலத்தில் 2 வங்கி அதிகாரிகளுடன் 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை நடத்தியுள்ளனர். அங்கும், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலான பதிவு ஒன்றை டுவிட்டரில் போட்டுள்ளார். அதில்,செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்த காலத்தில், அவரை மோசடி மன்னன் என்று ஸ்டாலின் கூறிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதோடு, “தமிழக முதல்வர் ஸ்டாலினின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது. தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 283

0

0