அண்ணாமலை செய்வது சரியா?…கொந்தளிக்கும் அதிமுக!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 5:03 pm
Admk BJP - Updatenews360
Quick Share

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே திமுக அரசின் முறைகேடுகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலைக்கு இளைஞர்கள் வரவேற்பு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இனிப்புகளை வழங்கும் விதமாக டெண்டர் விட்டது, விதிமுறைகளை மீறி தனியார் மின் நிறுவனத்திற்கு மீண்டும் முன்னுரிமை கொடுத்தது போன்றவற்றை 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மக்களுக்கு வெளிச்சம் போட்டும் காட்டினார்.

அதற்கு முன்புவரை எந்தவொரு தமிழக பாஜக தலைவரும், இது போன்ற அதிரடி அரசியலில் ஈடுபட்டதில்லை என்பதால் அண்ணாமலைக்கு இளைஞர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

DMK FILES

அதுவும் கடந்த ஏப்ரல் மாதம் DMK FILES என்ற பெயரில் அவர் வெளியிட்ட திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் சொத்து பட்டியல் மற்றும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் கடந்த ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாயை சம்பாதித்துவிட்டு அதை எப்படி வெள்ளைப் பணமாக மாற்றுவது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள் என பேசியதாக கூறி வெளியிட்ட ஆடியோ ஆகிய இரண்டுமே திமுக அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.

டி ஆர் பாலு எம்பி மட்டும் தனது சொத்து பட்டியலை பல மடங்கு அண்ணாமலை மிகைப்படுத்தி வெளியிட்டு இருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

அதிமுக பாஜக மோதல்

இது ஒருபுறம் இருக்க, 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க மேலிட பாஜக தலைமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி டெல்லிக்கு அழைத்து கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாஜக தலைவர் ஜே பி நட்டா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் முன்னிலையில் இந்த பேச்சு நடந்ததால் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்றும் தகவல் வெளியானது.

ஆனால் அமித்ஷாவோ ஓபிஎஸ்சையும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனையும் அதிமுக பாஜக கூட்டணியில் சேர்க்கவேண்டும். அப்போதுதான்
39 தொகுதிகளையும் கைப்பற்ற முடியும் என்று அதிமுக தலைமைக்கு நேரடியாகவே அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமியும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இதனால்தான் அண்மையில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷா எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மூவரையும் தனித் தனியாக சந்தித்து பேசவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அமித்ஷாவை சந்தித்த 24 பேர்

அதேநேரம் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக முக்கிய பிரமுகர்கள் 24 பேர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பிக்கையுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் மிக அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஊழலில் தமிழகம் முதலிடம்

அவரிடம் செய்தியாளர் “ஊழலை பொறுத்தவரையில், கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்பு கொள்வீர்களா?…”
என்று கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த அண்ணாமலை “தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டும் உள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழகத்துக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்” என்று கூறி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏனென்றால் 1991 முதல் 1996 என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலமாகும். இதை வெளிப்படையாக அண்ணாமலை கூறவில்லை என்றாலும் கூட கேள்விக்கு அவர் அளித்த பதில் மறைந்த ஜெயலலிதாவை தாக்கி பேசுவது போலவே இருக்கிறது.

கூட்டணி தர்மத்தை மீறும் அண்ணாமலை

இது குறித்து ஜெயக்குமார் கூறும்போது, “ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்ததை எந்தக் காலத்திலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா ஆகியோர் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்து நடந்து வருகிறோம். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறும் போது, கூட்டணி தொடர்கிறதா? இல்லையா? என்ற கேள்வி நிச்சயமாக எழும். இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அமித்ஷாவும் ஜேபி நட்டாவும்தான்” என்று காட்டமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் தேசிய தலைமை ஒரு விதமாகவும் மாநில பாஜக தலைமை ஒரு விதமாகவும் செயல்படுவது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
மேலும் இந்த இரு கட்சிகளிடையே நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

“ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் விவகாரத்தை அண்ணாமலை கையில் எடுத்திருப்பது அதிமுகவை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியாக இருக்கலாம்” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் அண்ணாமலையின் நிலைப்பாடு மிகுந்த விசித்திரமாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஜெ., ஆட்சியில் ஊழல் செய்தது யார்?

“உண்மையில் ஜெயலலிதாவை ஊழல் பொறியில் சிக்க வைத்தது 32 பேர் கொண்ட மன்னார்குடி மாபியா குடும்பம்தான். ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் சசிகலாவும் டிடிவி தினகரனும் வைத்து கொள்ளையடித்தனர். இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சொத்து குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனும் முதலில் இணைக்கப்பட்டிருந்தார்.
லண்டனில் 1000 கோடி ரூபாய்க்கு ஓட்டல் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கிலிருந்து திமுகவின் மறைமுக ஆதரவுடன் பின்னர் டிடிவி தினகரன் விடுபட்டுவிட்டார்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல சசிகலாவுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு, சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தமிழகத்திற்கு கொடுக்கவேண்டும் என்கிற ஜெயலலிதாவின் நல்ல நோக்கத்தை சிதறடித்து விட்டது. அதனால்தான் 1996 தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோற்றுப் போனார்.

அண்ணாமலை எப்படி அப்படி பேசலாம்?

இது நடந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அப்போது அண்ணாமலை பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்போ அல்லது ஏழாம் வகுப்போ படிக்கும் சிறுவனாக இருந்திருப்பார் என்பது நிச்சயம். அந்தநேரத்தில் இது பற்றி எல்லாம் அவர் விரிவாக தெரிந்து கொண்டிருப்பார் என்று கூற முடியாது. அப்படிப்பட்டவர் அரசியலுக்கு வந்த பிறகாவது ஜெயலலிதாவின் முதல் ஆட்சி காலத்தில் எதனால், யாரால், என்ன தவறு நேர்ந்தது என்பது பற்றி மூத்த தலைவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது அன்றைய கால வார இதழ்களில் வெளியான கட்டுரைகளை படித்து விட்டு இதுபற்றி பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மறைமுகமாக ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் ஊழல் நிறைந்தது என்று சொல்கிறார். அதேநேரம் அந்த ஊழலில் ஜெயலலிதாவை சிக்கவைத்த டிடிவி தினகரனையும் சசிகலாவையும் ஒரே அணியில் சேர்த்து தேர்தலை சந்திப்போம் என்று இப்போது அண்ணாமலை கூறுகிறார்.

அன்று ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவித்த சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்று தேசிய பாஜக தலைவர்களும், அண்ணாமலையும் ஏன் அடம் பிடிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

அப்படியென்றால் 1977ம் ஆண்டு மதுரையில் இந்திராகாந்தியை தாக்கி மண்டையை உடைத்த திமுகவினர் தங்களது பழைய பகையை மறந்து விட்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற 1980-ல் அக் கட்சியுடன் மீண்டும் திமுக கூட்டணி அமைத்துக் கொண்டதை நியாயப்படுத்தி டிடிவி தினகரனுடன் பாஜகவும் கைகோர்க்க விரும்புவதாகவே தெரிகிறது.

ஓபிஎஸ் நியாயமானவரா?

அதேபோல ஓபிஎஸ்ஐ அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர அமித்ஷாவும் அண்ணாமலையும் ஏன் இவ்வளவு மல்லுக் கட்டுகிறார்கள் என்பதும் புரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஊழல் செய்ததாக பி டி ஆரின் ஆடியோவை வைத்து அரசியல் செய்யும் அண்ணாமலை, அதே சபரீசனை ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசிய ஓபிஎஸ்ஐ மட்டும் எப்படி நியாயவான் என்று கருதுகிறார்?… அப்படியென்றால் சபரீசன், குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததை அண்ணாமலை ஏற்றுக் கொள்கிறாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

சரி! இந்த சந்திப்பை மரியாதை நிமித்தமான ஒன்று என வைத்துக் கொண்டாலும் கூட, கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் கதவை உடைத்துக் கொண்டு புகுந்து, அங்கிருந்த பொருட்களை எல்லாம் சூறையாடி சொத்து ஆவணங்களை தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் கொள்ளையடித்து சென்றதை அண்ணாமலை சரியான செயல் என்று ஒப்புக் கொள்கிறாரா?…
அல்லது அவருடைய கட்சிதான் ஏற்றுக் கொள்ளுமா?…என்ற கேள்விகளும் எழுகின்றன.

அதிமுகவை கவிழ்ப்பதில் சந்தோஷமா?

அதேபோல் 2017-ல் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் திமுகவுடன் ரகசியமாக கைகோர்த்துக்கொண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயன்றதை அண்ணாமலை வரவேற்கிறாரா?…

பாஜக தமிழகத்தில் மிகுந்த வலிமை பெற்று விட்டது திமுகவை எதிர்த்துப் போராடக்கூடிய ஒரே சக்தியாக பாஜகதான் திகழ்கிறது என்று கருதினால் தங்களை ஆதரிக்கும் கட்சிகளை மட்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதுதான் சிறந்ததாக இருக்கும். 2017ல் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிட்டால் திமுக ஆட்சிக்கு வந்து விடுமே என்ற எண்ணத்தோடுதான் டெல்லி பாஜக அப்போது செயல்பட்டது. அதற்காக அதிமுக தலைமை காலமெல்லாம் நாம் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கவேண்டும் என்று டெல்லி பாஜக நினைப்பதும் தவறு.

டெல்லி பாஜக கையில்தான் எல்லாமே

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவேண்டும் என்றால் டெல்லி பாஜக ஒரு தெளிவான உறுதியான முடிவை எடுக்கவேண்டும்!

மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பது மிகவும் கடினமான செயல் என்பதை உணர்ந்துதான் அதிமுகவை தங்கள் வழிக்கு கொண்டு வரும் முயற்சியில் அமித்ஷாவும், அண்ணாமலையும் தொடர்ந்து ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

Views: - 246

0

0