நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நாளை தெரியும்…. பிரதமர் கிட்ட அவரே சொல்லட்டும்.. அமைச்சர் உதயநிதி COOL பதில்…!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 4:50 pm
Quick Share

நாங்கள் களத்தில் இறங்கி பார்வையிட்டு கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாயும், வீடு இடிந்த 16 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் நிவாரண தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18 ஆகிய இரு தினங்களில் பெய்த கன மழை காரணமாக மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் மாநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர் வீடுகள் இடிந்து சேதமடைந்தனர்.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மழை வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்திற்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவியும் மழையினால் இடிந்த வீடுகளுக்கு 16 பேருக்கு தலா பத்தாயிரம் நிவாரண உதவி தொகை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :- கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 31 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார இணைப்பு மாவட்டத்தில் 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று நாட்களில் முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்பும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் ஆடு, மாடு, கன்று, கோழி, பன்றி போன்ற உயிரிழப்புகளுக்கு இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணகெடுப்புபடி 188 கோடி தேவை. 200 ஆண்டுகள் இல்லாத அளவு மழை மாவட்டத்தில் பெய்துள்ளது.

நாங்கள் களத்தில் இறங்கி பார்வையிட்டு கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். மற்றவர்களை போல் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை. நாளை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார் அவர்களே பார்த்து மத்திய அரசிடம் சொல்லட்டும், என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் காந்தி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 220

0

0