முதலமைச்சர் புலம்பல் எல்லாம் வீண்…? தொண்டர்களை தாக்கும் அமைச்சர்கள்…. திண்டாட்டத்தில் திணறும் திமுக…?

Author: Babu Lakshmanan
28 January 2023, 6:02 pm
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 20 மாதங்களில் மூத்த அமைச்சர்களின் பலரது செயல்பாடுகள் அரசு மீது தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அடியோடு
தகர்க்கும் விதமாக அமைந்திருப்பதுடன் அவ்வப்போது கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி விடுகிறது.

குறிப்பாக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், ராஜ கண்ணப்பன் அனிதா ராதாகிருஷ்ணன், பிடிஆர் தியாகராஜன், சேகர்பாபு, அன்பில் மகேஷ், ஆவடி நாசர் போன்றோர் பொதுவெளியில் பேசும்போது எல்லை மீறுவது வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

சில நேரம் துடுக்குத்தனமாக பேசி வம்பிலும் அவர்கள் சிக்கிக் கொள்வதும் உண்டு. இது தொடர்பான செய்திகளும், வீடியோக்களும் ஊடகங்களில் வெளியாகும்போது அது பெரும் விவாத பொருளாக மாறிவிடுவதையும் காணமுடிகிறது.

இது திமுக அரசுக்கும், திமுகவுக்கும் மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துதான், கடந்த அக்டோபர் மாதம் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அமைச்சர்களையும் நிர்வாகிகளையும் எச்சரிக்கும் விதமாக ஒரு பிடிபிடித்தார்.

“ஒரு பக்கம் திமுக தலைவர். மறு பக்கம், முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இத்தகைய சூழலில் உள்ள என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் போய் சொல்வது. உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிகவும் முக்கியமானது. எனவே மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள்”என்று மனம் குமுறி அவர் அட்வைசும் செய்திருந்தார்.

அதன் பிறகு அமைச்சர்கள் அத்தனை பேரும் பொது இடங்களில் அடக்கி வாசிக்க தொடங்கினர். ஆனால் இது சில மாதங்களே நீடித்தது.

எங்களது இயல்பான சுபாவமே அதுதான், அதை நாங்கள் ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டோம் என்று சொல்வது போல சீனியர் அமைச்சர் கே என் நேருவும், பால்வளத் துறை அமைச்சர் நாசரும் பொது இடங்களில் தாங்கள் வரம்பு மீறுவதை வெளிப்படுத்தி திமுக தலைமைக்கு மீண்டும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் திருத்தணியில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நாசர், பேசிக்கொண்டிருந்தபோது அவரது பின்னால் சென்ற திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரனின் உதவியாளர் சதீஷ், மைக் வயரை தெரியாமல் காலில் மிதிக்க மைக் கீழே விழுந்து விட்டது. இதனால் கோபமடைந்த அமைச்சர் நாசர், தனது பேச்சுக்கு இடையூறு செய்யும் விதமாக நடந்துகொண்ட திமுக எம்எல்ஏவின் உதவியாளர் முதுகில் பின்னங்கையால் ஓங்கி ஒரு குத்தும் விட்டார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் அப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சருக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லையே? என்ற விமர்சனத்தையும் எழுப்ப வைத்தது.

இந்த நிலையில்தான், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, தான் ஒரு கோபக்காரர் என்று திமுகவினரும், பொது மக்களும் கருதும் வகையில் அமைச்சர் நாசர் நடந்து கொண்ட
ஒரு செயல் சமூக ஊடகங்களில் இன்று வரை வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்காக அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். ஆனால், கட்சி நிர்வாகியோ நாற்காலியை மெதுவாகவும், ஒரு நாற்காலியையும் மட்டுமே எடுத்து வந்ததை பார்த்து
ஆத்திரமடைந்த அமைச்சர் அவரை திட்டிக் கொண்டே அவர் மீது கல் வீசி தாக்குதலும் நடத்தினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து திமுகவினர் மீளாத நிலையில் ஜனவரி 26-ம் தேதி இரவு சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பளிக்கும் நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள் கூட்டத்தை ஆவேசத்துடன் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த அமைச்சர் கே என் நேரு, உதயநிதிக்கு சால்வை அணிவிக்க முயன்ற ஒரு தொண்டரை தலையில் பலமாக அடித்து வெளியேற்றினார். இதே போல அங்கு வரிசையாக வந்த தொண்டர்களை விரைந்து செல்லுமாறு அதட்டியும் கைகளால் வேகமாக இழுத்து தள்ளியும் விட்டார்.

தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனால் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.

ஏற்கனவே கடந்த ஆறாம் தேதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மிளகுப் பாறை பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியிலிருந்து எவர்சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து பெண்களுக்கு வழங்கியபோது மாநகராட்சியின் 54-வது வார்டு திமுக கவுன்சிலர் புஷ்பராஜ் குடங்களை வழங்குவதில் மந்தமாக செயல்படுவதாக கூறி அமைச்சர் கே என் நேரு திடீரென அவரை தலையில் ஓங்கி அடித்த
சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

அது ஏற்படுத்திய தாக்கமே தமிழகத்தில் இன்னும் தணியாத நிலையில் அமைச்சர் உதயநிதியின் முன்னிலையில் அவர் திமுக தொண்டரை அடித்த காட்சி தற்போது பெரும் பேசுபொருளாக மாறிவிட்டது.

“அமைச்சர்கள் கே என் நேரு ஆவடி நாசர் இருவருமே திமுக நிர்வாகிகள், தொண்டர்களைத்தான் தாக்கினார்கள், அடித்தார்கள். அதனால் மற்றவர்கள் அது பற்றி விமர்சிக்க தேவையில்லை என்று வாதிடப்பட்டாலும் கூட அடிக்கடி பொது இடங்களில் திமுக அமைச்சர்கள் இதுபோல் நடந்து கொள்ளும் போக்கு தமிழக மக்களிடம் திமுக அரசு மீது ஒருவித அச்ச உணர்வைத்தான் ஏற்படுத்தும்” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“இத்தனைக்கும் கட்சியினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்க விடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது? என்று முதலமைச்சர் ஸ்டாலின் நான்கு மாதங்களுக்கு முன்புதான் புலம்பியும் இருந்தார்.

அப்படி இருந்தும் இந்த அமைச்சர்கள் அவருடைய வேதனையை புரிந்து கொண்டதுபோல் தெரியவில்லை. எங்களுடைய குணாதிசயமே இதுதான் என்பதைப் போல இந்த இரு அமைச்சர்களும் நடந்து கொள்வது அவர்கள் மீது மட்டுமின்றி திமுக அரசின் மீதும் மக்களிடையே அவநம்பிக்கையைத்தான் ஏற்படுத்தும்.

பொதுவெளியில் இப்படி கட்சியின் இமேஜை டேமேஜ் செய்யும் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்? அவரால் இது போன்றவர்களை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? என்ற கேள்விகள்
தான் மக்கள் மனதில் எழும். திமுக தொண்டர்களுக்கு இன்று நடப்பது நாளை நமக்கும் நடக்கலாம் என்று அவர்கள் அஞ்சுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

நான் சர்வாதிகாரியாக மாறி சாட்டையை சுழற்றுவேன் என்று கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் நிர்வாகிகளுக்கு முன்பு விடுத்த எச்சரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தினால் மட்டுமே திமுக அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்க முடியும். இல்லையென்றால் கடினம்தான்.

இதில் ஒரு ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால் முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய மகனும் அமைச்சருமான உதயநிதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்றால் கே என் நேருவும், நாசரும் தொண்டர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்பதுதான்.

திமுக ஆதரவு ஊடகங்கள் இதுபற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை, அதன்
கூட்டணிக் கட்சிகள் இதைக் கண்டிப்பதும் இல்லை என்றாலும் கூட இது தொடர்பான வீடியோ காட்சிகள் ஒரு சில முன்னணி நாளிதழ்கள், டிவி செய்தி சேனல்கள், பெரும்பாலான இணையதளங்கள், யூ டியூப் வீடியோ வழியாக தமிழகம் முழுவதும் எளிதில் பரவி விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது. மாநிலத்தில் இன்று 85 சதவீதம் பேரிடம் ஸ்மார்ட்போன் இருப்பதால் அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோக்கள்
குறைந்தபட்சம் 5 கோடி பேரையாவது சென்று சேர்ந்து விடுகின்றன என்று கூறப்படும் தகவலும் உண்மைதான்.

எனவே இதன் தாக்கம் 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் நிச்சயமாக எதிரொலிக்கும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

Views: - 359

0

0