மோடியை தொடர்ந்து அமித்ஷா… அடுத்தடுத்து பாஜக அதிரடி ‘அட்டாக்’ : அதிர்ச்சியில் உறைந்த திமுக!!

1 March 2021, 9:55 pm
Amit shah - modi - stalin - updatenews360
Quick Share


பிரதமர் மோடியின் மனசாட்சி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்பார்கள். மோடி என்ன நினைக்கிறாரோ, அதை செயல்படுத்துவதில் அமித்ஷா அதிவேகம் காட்டுவார். இவர்கள் இருவருமே பாஜகவின் இரட்டை குழல் துப்பாக்கி என்றும் சொல்லலாம். அமித்ஷா பாணியில் கூறவேண்டும் என்றால் பாஜக என்கிற மாபெரும் அரசியல் இயக்க ரயிலை இழுத்து செல்லும் இரட்டை என்ஜின்கள் என்று சொல்லவேண்டும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காள மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அதிரடி காட்ட தொடங்கி உள்ளனர்.

modi-amith-shah-updatenews360

தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி சேருவதை இரண்டு மாதங்களுக்கு முன்பே பாஜக உறுதி செய்துவிட்டது. என்றாலும் இரு கட்சிகளும் இணக்கம் காட்டாமல் தனித்தனியாக செயல்பட்டதால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் கடந்த மாதம் 14-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கே தனது ஆதரவு என்பதை நாசுக்காகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கடந்த 26ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தொகுதி பங்கீடு பேச்சுகளை முன்னெடுக்க அதிமுகவும், பாஜகவும் வேகம் காட்டின. அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக முடிந்தது.

அதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னையில், முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்து பாஜகவுடனான தொகுதி பங்கீட்டை கச்சிதமாக முடித்தனர். இதற்கிடையே அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில்தான் கடந்த 25-ம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு வந்தார்.

பொதுவாக, மோடி காங்கிரசை கடுமையாக தாக்கி பேசுவதுதான் வழக்கம். அவருடைய எந்தவொரு பேச்சிலும் இதை காண முடியும். ஆனால் கோவையில் பேசியபோது காங்கிரசுக்கு இணையாக தமிழ்நாட்டில் அதன் கூட்டணி கட்சியான திமுகவையும் மோடி வறுத்தெடுத்துவிட்டார்.

“திமுக ஆட்சிக்கு வந்தால் மாவட்டம்தோறும் ரவுடியிசம் வந்துவிடும். சமூக விரோதிகள் தலைதூக்கி விடுவார்கள்” என்று போட்டுத் தாக்கினார். அத்துடன், “திமுகவும் காங்கிரசும் ஊழலில் ஊறித் திளைத்த கட்சிகள். ஊழல் செய்வதற்காகவே
திமுக தன் மூளையை பயன்படுத்துகிறது. தங்களின் சட்டைப்பையை மட்டுமே நிரப்பிக் கொள்ளவே திமுகவும், காங்கிரசும் நினைக்கின்றன” என்றும் ஒரு வாரு வாரினார்.

மோடி திடீரென்று திமுகவை சமூக விரோத சக்திகள் கொண்ட கட்சி என்று ஆவேசமாக கூறியதை திமுக தலைவர் ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீண்டாரா என்பது தெரியாத நிலையில், விழுப்புரத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியை மோடியை விட இன்னும் கொஞ்சம் மேலே போய் அமித்ஷா ‘அட்டாக்’ செய்தார்.

அவர் பேசும்போது “திமுக காங்கிரஸ் கூட்டணி தங்களது குடும்பத்தை மட்டுமே நினைத்து செயல்படுகின்றன. அவர்கள் தமிழக மக்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. சோனியா தனது மகன் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும் என்று நினைத்து கவலைப்படுகிறார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கோ தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் கவலையாக உள்ளது.

Amit_Shah_UpdateNews360

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்க்க இன்று ராகுல் வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இருந்தபோதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அப்போது காங்கிரசின் கூட்டணி ஆட்சியில் திமுகவும் இருந்தது.
தமிழக மக்களின் வேண்டுகோளை ஏற்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தான் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது.

2ஜி 3ஜி 4ஜி என அனைத்துமே தமிழகத்தில் உள்ளது. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறை. 3ஜி என்றால் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று 3 தலைமுறை.
4 ஜி என்றால் நேரு, இந்திரா, சோனியா, ராகுல் என்று நான்கு தலைமுறை என்று ஒப்பிட்டு திமுகவிலும், காங்கிரசிலும் குடும்ப அரசியல், வாரிசு அரசியல்தான் நடக்கிறது” என்பதை நக்கலாக குறிப்பிட்டார்.

அதாவது, தமிழக மக்களிடையே திமுக, காங்கிரஸ் மீது எந்த குற்றச்சாட்டை முன்வைத்தால் அது எளிதில் மக்களை சென்றடையும், பரபரப்பாக பேசப்படும் என்கிற அரசியல் வித்தையை அமித் ஷா நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் மூன்று தலைமுறையாக திமுகவில் அப்பா, மகன், பேரன் மட்டுமே கட்சியில் அதிகாரம் செலுத்துகிறார்கள். கட்சியில் குடும்ப மற்றும் வாரிசு அரசியல் நடக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே அவர் இப்படி அதிரடியாக பேசியிருக்கிறார், என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி எளிதில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி விடுமென்று பாஜக அஞ்சுவதால்தான் இப்படி அமித்ஷா பேசுகிறார் என்று பலருக்கும் நினைக்கத்தோன்றும். ஆனால் மத்திய உளவுத்துறை அண்மையில் எடுத்த ஒரு ரகசிய சர்வேயில் தமிழக
தேர்தலில் போட்டி கடுமையாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த சர்வேயின் முடிவுகள் அமித் ஷாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் மயிரிழையில் கூட தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் அமித்ஷா மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார். அதனால்தான் இரு கட்சிகளின் தொண்டர்களையும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபடுத்த அவர் இவ்வாறு திமுக-காங்கிரஸ் கூட்டணியை கடுமையாகத் தாக்கிப் பேசி இருக்கிறார் என்று அரசியல் வட்டராத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.

Rahul-Gandhi-Udhayanidhi-Stalin - updatenews360

இன்னொருபுறம், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தல் செலவுக்காக திரைமறைவில் பல கோடி ரூபாய்களை நிதியாக கொடுத்த பிரபல தொழிலதிபர்கள் பற்றிய பட்டியல் அமித்ஷாவின் கைகளில் உள்ளது. இதனால் அந்த தொழிலதிபர்களின் நிறுவனங்கள் மீது எந்த நேரத்திலும் வருமான வரி இலாகா அதிரடி சோதனையில் இறங்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரிந்தே இருக்கிறது. தற்போது அவர் அதிர்ச்சியில் உறைந்து இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். மோடியும், அமித்ஷாவும் இப்படி திமுகவை கடுமையாக விமர்சிப்பது குறித்து தமிழக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, சட்டப்பேரவை தேர்தல் என்றாலும் சரி பிரதமர் மோடி மீது வெறுப்பை ஏற்படுத்தும் பிரச்சாரத்தைத்தான் திமுகவினர் மேற்கொள்கின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி உட்பட திமுகவில் உள்ள அனைவருமே மோடியை எதிர்த்தால் மட்டுமே இங்கு திமுக வெற்றி பெற முடியும் என்ற பரிதாப நிலைக்கு வந்துவிட்டனர்.

Stalin Condemned- Updatenews360

பிரதமர் எப்போது தமிழகத்திற்கும் வந்தாலும் அவரை ஒரு நாட்டின் பிரதமர் என்று கூட பார்க்காமல் ‘திரும்பிச் செல் மோடி’ ஒரு கூட்டத்தை ஏவிவிட்டு சமூக ஊடகங்களில் ‘ட்ரென்ட்’ செய்கிறார்கள்.

ஓட்டுவங்கி அரசியலுக்காக மோடியையும், அமித்ஷாவையும்
தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்கள். மேலும் தமிழகத்திற்கு நலன் பயக்கும் எந்த திட்டம் வந்தாலும் கண்களை மூடிக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொய் பிரச்சாரம் செய்து பிரதமருக்கும், மத்திய பாஜக அரசுக்கும் திட்டமிட்டே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்.

இதற்கு பதில் சொல்லாமல் போனால், இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்பது போலாகி விடும். எனவேதான் திமுக, காங்கிரஸ் மீது பிரதமரும், அமித்ஷாவும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மிகக் கடுமை காட்ட தொடங்கி இருக்கின்றனர்” என்று அவர் விளக்கம் அளித்தார்.

எது எப்படியோ, முன்பு எப்போதையும் விட மோடியும், அமித்ஷாவும் தேர்தல் களத்தில் திமுகவை அட்டாக் செய்ய ஆரம்பித்து இருப்பது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்!

Views: - 1

0

0