தமிழகத்தின் ‘அடுத்த முதலமைச்சர் திருமாவளவன் தான்’…. திமுகவை பதற வைத்த விசிகவின் அடுத்த குண்டு…!
Author: Babu Lakshmanan18 February 2022, 4:15 pm
கர்நாடக மாநில பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது, தொடர்பாக அண்மையில் வெடித்த சர்ச்சை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், மத, பெண்ணிய அமைப்புகள் வைத்த விமர்சனங்களும் கூட பெரும் விவாதப் பொருளாக மாறிப்போனது.
ஹிஜாப்புக்கு தடை
இந்த நிலையில்தான் நான்கு நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த பின்பு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்படும்.
பொதுவெளியில் வேண்டுமானால் ஹிஜாப் அணியலாம். ஆனால் பள்ளி, கல்லூரிகளில் எந்த மதமாக இருந்தாலும் கட்டாயம் அந்த சீருடை மட்டுமே அணிய வேண்டும். மதத்தை வைத்து பாஜக ஒருபோதும் அரசியல் செய்யாது. இஸ்லாமியர்களாகட்டும் கிறிஸ்தவர்களாட்டும் யாராக இருந்தாலும் அருகில் வைத்து கொள்வோம்” என்று கூறியிருந்தார்.
தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்து அவர் தெள்ளத்தெளிவாக கூறியதற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகள் பாஜக தமிழகத்தில் ஆட்சியமைப்பது நடக்காத கதை என்று கேலியாக விமர்சனமும் செய்தன.
பொதுவாக இதுபோன்ற மாறுபட்ட எதிர் கருத்துகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கொந்தளித்து உடனடியாக கண்டன அறிக்கை வெளியிடும். ஆனால் நாடாளுமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தனது கட்சியின் நிலைப்பாட்டை ஆவேசமாகப் பேசி பதிவு செய்து விட்டதால் அக்கட்சியினர் இதுபற்றி பொதுவெளியில் அதிகமாக பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.
திருமா அடுத்த முதலமைச்சர்
ஆனால் பாஜகவை எந்த நேரமும் நக்கல் செய்யும் விசிகவின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, அண்ணாமலையின் இந்த பேட்டி குறித்து மூன்று நாட்களுக்குப் பின்பு சுறுசுறுப்புடன் சீறிப்பாய்ந்துள்ளார்.
அண்ணாமலையின் ஹிஜாப் பேட்டி தொடர்பாக ஒரு நாளிதழில் வெளியான அவருடைய செய்தியின் கட்டிங்கை இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில், பூணூலுக்கு தடை?? பதிலடி!! என்ற தலைப்பில் ஒரு பதிவை வன்னியரசு போட்டிருக்கிறார்.
— வன்னி அரசு (@VanniArasu_VCK) February 17, 2022
அதில், “விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்நாட்டை ஆளும் காலம் விரைவில் வருகிறது. எழுச்சித்தமிழர் திருமாவளவன் முதலமைச்சர் ஆகும் காலத்தை தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அப்போது தமிழ்நாட்டில் பூணூல் அணிய தடை விதிக்கப்படும். சனாதன
ஒழிப்பின் முதல் பணி அதுவே-
வன்னியரசு துணைப் பொதுச் செயலாளர் விசிக”
என்று மிக உற்சாகமாக
குறிப்பிட்டும் இருக்கிறார்.
திமுக அப்செட்
பொதுவாக இதுபோல மிகத் தைரியமாக வன்னியரசு தனது கருத்தை தெரிவிப்பதில்லை. ஆனால் அண்ணாமலை தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்று நம்பிக்கையுடன் கூறும்போது, அதற்கு எதிர்வினையாற்றுகிறேன் என்று விமர்சிப்பதாக நினைத்து தனது ட்விட்டர் பதிவில் திமுகவை பதற வைத்திருக்கிறார் என்பது வெளிப்படை.
‘திமுக கூட்டணியில் மாநிலம் முழுவதும் பரவலான செல்வாக்கை கொண்டது, தமிழக காங்கிரசை விட தங்களுக்கு அதிகமான செல்வாக்கு உள்ளது,
தங்களது ஆதரவின்றி திமுகவால் எதுவும் சாதிக்க இயலாது’ என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருதுவதன் எதிரொலிதான் இதுபோல திமுகவை அடிக்கடி சீண்டிப் பார்க்கத் தூண்டுகிறது என்கிறார்கள்.
வன்னியரசு பதிவிட்டுள்ள கருத்து அண்ணா அறிவாலய நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியும் இருக்கிறது. அண்ணாமலையை ஏளனம் செய்வதாக நினைத்து தங்கள் கட்சியை அவர் கடுமையாக விமர்சித்து இருப்பதாகவும் திமுக தலைவர்கள், நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
பூச்சாண்டி காட்டும் விசிக
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “தங்களுக்கு இருக்கும் தனி செல்வாக்கு, தன்னம்பிக்கை காரணமாக விரைவில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆட்சி மலரும். திருமாவளவன் முதலமைச்சர் ஆவார் என்று வன்னியரசு கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் அவர் இப்படி கருத்து தெரிவித்து இருக்க வேண்டியதில்லை. அது நிச்சயம் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் 2024-ம் ஆண்டில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கும். அப்போது அதிமுக ஆட்சியை கைப்பற்றும்
என்று ஒவ்வொரு பிரச்சார மேடையிலும் கூறி திமுகவுக்கு கிலியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் வன்னியரசும் ஏன் சேர்ந்து கொண்டார்? என்று தெரியவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. தேசிய கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. அதனால் அண்ணாமலை அப்படி கூறி இருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. ஆனால் 2017 முதல் திமுக கூட்டணியில் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கு திமுகவை விட்டால் போக்கிடம் கிடையாது.
அப்படி இருக்கும்போது விசிக துணைப் பொதுச்செயலாளர் திமுகவை மறைமுகமாக எச்சரிக்கும் விதத்தில் அடுத்து தமிழகத்தில் விசிக ஆட்சிதான். முதலமைச்சர் திருமாவளவன் தானென்று கூறுவதும் எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை. ஒருவேளை அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் அதிகமான தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்பதற்காக இப்படி வன்னியரசு பூச்சாண்டி காட்டி இருக்கிறாரா? என்பதும் புரியவில்லை.
2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படும். அப்போது தமிழகத்தில் உதயநிதி முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற பரபரப்பு பேச்சும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. அதனால் வன்னியரசின் பதிவை திமுக தங்களுக்கு எதிரான கருத்தாகவே பார்க்கும் வாய்ப்பு உள்ளது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
விரைவில் ஒரு முடிவு
தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது,” எங்களுக்கு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்பதை உறுதி செய்வது போல வன்னியரசின் பதிவு உள்ளது. எப்படியோ ஒரு வகையில் எங்களைக் கண்டு விசிக நன்றாக பயப்படுவது தெரிகிறது.
அதனால்தான், விரைவில் தங்களது ஆட்சி தமிழகத்தில் அமையும். திருமாவளவன் முதலமைச்சர் ஆவார் என்று அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் திமுக கூட்டணியில் விசிக போர்க்கொடி உயர்த்தி இருப்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது. அது விரைவில் ஒரு முடிவை எட்டும். நல்லதே நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் “என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.