‘பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம்’… நெல்லையில் பாஜக பிரமுகர் கொலை… திமுகவுக்கு அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 1:14 pm

நெல்லையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகரை தப்பிக்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக மாநில அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர், சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள், சமூக விரோதிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளிக்கிறேன்.

சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்களின் அயராத மக்கள் பணியையும், அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் பெற்றுவரும் நன்மதிப்பையும் தாங்க முடியாத சமூக விரோதிகள், இந்த பாதகச் செயலில் ஈடுபட்டுள்ளனர். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கு நெருக்கமான மூளிகுளம் பிரபு என்ற திமுக நபரின் பெயர் காவல்துறையின் முதல் தகவலறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் காப்பாற்ற திமுக முயற்சி செய்வதாகவும் அறிகிறேன்.

குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற திமுக முயலுமேயானால், அது நடக்காது என்பதை திமுகவினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வன்முறை வெறியாட்டங்கள் மூலம் பாஜகவினரை முடக்க நினைக்கும் திமுகவினர் முயற்சி பலிக்காது.

காவல்துறை, உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆளுங்கட்சியினர் மிரட்டல்களுக்குப் பயந்து, குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகளை விடுவிக்க முயற்சி நடக்குமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு தமிழக பாஜக சும்மா இருக்காது என்றும் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!