நெல்லை மேயருடன் முற்றிய மோதல்… திமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் ; கட்சி தலைமை எடுத்த அதிரடி முடிவு…!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 9:19 am
Quick Share

நெல்லையில் மாநகராட்சி மேயர் ஆணையரை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ள நிலையில், தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் சரவணன் நிறைவேற்றி தருவதில்லை என ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, மாநகராட்சி மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது, ஊழல் குற்றச்சாட்டை முன் வைப்பது என தொடர்ச்சியாக மேயர் கவுன்சிலர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாநகராட்சியில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

குடிநீர் பிரச்சினை சாலை பிரச்சனை உட்பட மக்களின் பிரச்சினைக்கு மேயர் குரல் கொடுப்பதில்லை என்றும், மேயர் கவுன்சிலர்களை மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பல வார்டுகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் தானு மூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ஆணையர் உடனே இங்கு வரவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர், உதவியாளர் அழைப்பை ஏற்று கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு உள்ளே பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.

போராட்டம் குறித்து கவன்சிலர்கள் கூறுகையில், “மக்கள் பிரச்சினை குறித்து கவுன்சிலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஆணையர் மேயர் நிறைவேற்றி தருவதில்லை. இதனால், மக்களிடம் நாங்கள் பதில் கூற முடியவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில், எங்கள் வாடுகளில் எந்த பணிகளும் நடைபெறாததால் மக்கள் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர். மேயர் கவுன்சிலர்களை மதிப்பதில்லை. மழைக்காலம் என்பதால் அவசரக்கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி மேயர் ஆணையர் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்த மாமன்ற உறுப்பினர்களான 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் மன்சூர், 24வது மாமன்ற உறுப்பினர் ரவீந்தர் மற்றும் 7வது வார்டை சேர்ந்த சுண்ணாம்பு மணி ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என திமுக தலைமை கழக பொதுசெயலாளர் துரை முருகன் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இதனால், நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் இடையே கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

Views: - 237

0

0