தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் நடத்த திட்டமிட்டது அம்பலம்… சிக்கியது முக்கிய ஆவணங்கள் ; என்ஐஏ வெளியிட்ட பகீர் தகவல்

Author: Babu Lakshmanan
2 February 2024, 6:34 pm
Quick Share

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை நிறைவடைந்த நிலையில், 4 பென் டிரைவ், 8 சிம்கார்டுடன் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளின் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த ரெய்டு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நெருங்கிய நண்பரும், பிரபல யூடியூப்பருமான சாட்டை துரைமுருகனின் திருச்சி சண்முகா நகரில் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள நாம் தமிழர் கட்சியின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேவேளையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கிற்கு நேரில் ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் நடந்த சோதனை குறித்து என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது. அதாவது, சேலம் – புளியம்பட்டியில் கடந்த 2022ம் ஆண்டு துப்பாக்கிகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டதாகவும், தமிழகத்தில் ஆயுதப் போராட்டத்திற்கு திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விடுதலைப் புலிகள் போல ஆயுதக்குழுவை தமிழகத்தில் உருவாக்க 2 பேரும் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் நடந்த சோதனையில் செல்போன், லேப்டாப், பென்டிரைவ், சிம் கார்டுகள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 237

0

0