“நிதிஷ்குமார் முயற்சி தேறாது” – PK கொளுத்தி போட்ட சரவெடி… திடுக்கிட்ட CM ஸ்டாலின், மம்தா…!!

Author: Babu Lakshmanan
23 June 2023, 5:04 pm
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட16 எதிர்க்கட்சிகள் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரின் அழைப்பை ஏற்று பாட்னா நகரில் ஒன்று திரண்டன.

எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், நடப்பதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக ஆகிய கட்சிகளுக்கு அப்படியே பலத்த ‘ஷாக்’ தருவதுபோல அமைந்துவிட்டது.

கடந்த ஏப்ரல் மாதமே பிரசாந்த் கிஷோர், இது போன்ற சில கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்தும் இருந்தார். ஏனென்றால் அந்த நேரத்திலேயே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் தீவிர முயற்சியில் இறங்கி விட்டிருந்தார். என்றபோதிலும் அப்போது பிரசாந்த் கிஷோர் சொன்னது ஒரு பெரிய விஷயமாக எதிர்க்கட்சிகளால் பார்க்கப்படவும் இல்லை. பரபரப்பாக பேசப்படவும் இல்லை.

அவருடைய எச்சரிக்கையை ஆந்திர முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மட்டும் புரிந்துகொண்டு அப்படியே ‘சைலன்ட்’ ஆகி விட்டார்.

சரி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், மிக அண்மையில் அப்படி என்னதான் சொன்னார்?…

“எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க நிதிஷ்குமார் எடுக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடையும். அது மட்டுமல்ல பீகாரில் அவருடைய ஐக்கிய தளம் கட்சி ஆட்சியையும் இழந்து விட நேரும். ஏனென்றால் தனது செல்வாக்கு சரிந்து வரும் நிலையில்தான் இதுபோல எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் இணைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இது 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அப்போதைய ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டதை நினைவுபடுத்துகிறது.

இதற்காக அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று பாஜகவுக்கு எதிராக செயல்படும் பிரதான கட்சிகளை ஒன்றாக இணையுமாறு வேண்டுகோளும் விடுத்தார்.

ஆந்திராவில் தனது கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதையும் சந்திரபாபு நாயுடு
சுட்டிக் காட்டினார்.

ஆனாலும் அவரால் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வர முடியவில்லை. அவருடைய முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. அது மட்டுமல்லாமல் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி மூன்று எம்பி தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் 23 எம்எல்ஏக்கள்தான் கிடைத்தனர்.
மாநிலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தான் அவரால் உட்கார முடிந்தது.

அதேபோல, இப்போது நிதிஷ்குமார் 16 பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் பாஜகவை வீழ்த்தவேண்டும் என்கிற ஒரேயொரு சிந்தனை மட்டுமே நமக்குள் இருக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் களம் இறங்கி இருக்கிறார். அவருடைய இந்த முயற்சியும் தோல்வியில்தான் முடியும். தவிர 2019ல், சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழந்தது போல தனது சொந்த மாநிலத்தில் நிதிஷ் குமாரும் தனது ஆட்சியை பறி கொடுப்பார்.

அதனால் முழு நாட்டைப் பற்றியும் கவலைப்படாமல் நிதிஷ்குமார் பீகாரில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தவேண்டும். கவலைப்பட வேண்டும். ஏனென்றால் அவருக்கு பாதுகாப்பான ஒரு இடம் கூட எங்கும் இல்லை.

மேலும் பீகாரில் ஒரு எம்பி கூட வைத்திருக்காத ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிதான் நாட்டின் பிரதமரை தீர்மானிக்கிறது.மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, காங்கிரசுடன் இணைந்து பணியாற்றத் தயாரா? என்பதை முதலில் நிதிஷ் குமாரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு மற்றவற்றைப் பற்றி பேசலாம்” என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக பெரும்பாலான ஊடகங்களில் பிரசாந்த் கிஷோரின் பேட்டி வெளியாகியும் இருந்தது. இதனால் ஒரு நல்ல நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே தேர்தல் வியூக நிபுணர் ஒருவர் இப்படி அதிரடியாக கூறியது ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

“மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பிரசாந்த் கிஷோரின் கருத்து பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும் கூட மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், ஸ்டாலின் மூவருக்கும் இது உண்மையிலேயே தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தி விட்டது
என்றே சொல்லவேண்டும்” என டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“இதற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்று. ஏனென்றால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஸ்டாலினின் திமுக ஆகியவற்றுக்கும், கடந்த ஆண்டு பஞ்சாபில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து
அதை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் பிரசாந்த் கிஷோர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இல்லையென்றால் இந்த மூன்று மாநிலங்களிலும் இழுபறி நிலைமைதான் ஏற்பட்டிருக்கும்.

தற்போது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் எந்தக் கட்சிக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில்லை என்றாலும் கூட அவருடன் மம்தா பானர்ஜி, ஸ்டாலின், கெஜ்ரிவால் மூவருமே அவ்வப்போது அரசியல் தொடர்பான ஆலோசனைகளை கேட்டுப் பெற்று வருகின்றனர்.

இதனால் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு எப்போதுமே மிகத் துல்லியமாக இருக்கும் என்பதை இந்தத் தலைவர்கள் நன்றாக அறிவார்கள். அதனால்தான் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னா நகரில் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக நிதிஷ் குமாருக்கு அட்வைஸ் செய்வதுபோல திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கும் மறைமுகமாக பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஏனென்றால் தமிழகம், உத்தரப்பிரதேசம்,கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி, பீகார், போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக உள்ள பிரதான கட்சிகள் காங்கிரசுக்கு அதிக அளவில் எம்பி சீட்டுகளை ஒதுக்குமா என்பது சந்தேகம்தான். இந்தக் கேள்விக்கு விடை கிடைத்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சாத்தியம் என்பது பிரசாந்த் கிஷோருக்கு நன்றாகவே தெரியும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தால் அதுவும் மோடி தலைமையிலான பாஜகவுக்கு சாதகமாக முடியும் வாய்ப்புகளே அதிகம். இதையெல்லாம் துல்லியமாக கணக்கு போட்டுத்தான், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சி தோல்வியில் முடியும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.

2024 தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையவில்லை என்றால் அக்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்த நிதிஷ் குமாருக்கு கிடைத்த பெரும் தோல்வியாகவே கருதப்படும். அதனால் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தற்போது பீகார் துணை முதலமைச்சர் ஆக உள்ள தேஜஸ்வி யாதவுக்கு வழிவிட நேரும் என்பதைத்தான் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சூசகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

முக்கிய தலைவர்களான சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி, ஓவைசி போன்றவர்களும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டு விட்டனர்.

பிரசாந்த் கிஷோர் 2019 தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து அவர் முதலமைச்சராக அதற்கு வழி வகுத்தவர். அதனால்தான் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி அவர் நிதிஷ் குமார் உருவாக்கும் எதிர்க்கட்சியில் அணியில் இணையவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்” என்று அந்த டெல்லி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதிலும் உண்மை இருப்பதை உணர முடிகிறது.

Views: - 516

0

1