தமிழ்நாட்டுக்கு நிதியைக் குறைத்த பாஜக அரசு: கூட்டணியில் இருந்தாலும் போட்டுடைத்த அதிமுக…!!

23 February 2021, 5:30 pm
ops at assembly
Quick Share

சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியைப் பெருமளவு குறைந்துள்ளதால் மாநில அரசு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று இடைக்கால பட்ஜெட்டில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் மாநிலத்தின் நிதி உரிமைகளுக்காக அதிமுக அரசு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதை வெளிக்காட்டுவதாக நிதி அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது என்று அதிமுகவினர் பெருமிதத்துடன் கூறுயுள்ளனர். பாஜக அரசின் அடிமை அரசாக அதிமுக அரசு இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்யும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கூட்டணியில் இருந்தாலும் குறைகளை சுட்டிக்காட்டுவோம் என்ற தொனியில் நிதி அமைச்சரின் உரை இருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று இரு கட்சித் தலைவர்களும் அறிவித்துள்ளார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்திருந்தபோது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். தமிழ் நாடு அரசின் பின்னால் பாறைபோல் தாங்கி நிற்போம் என்று அமித்ஷாவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி, நட்டாவும் அதிமுகவுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். பிப்ரவரி 14ம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளையும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் கைகளையும் மேடையிலேயே உயர்த்திப்பிடித்தார், எடப்பாடி பழனிசாமியைத் தனியாக சந்தித்துப் பேசினார். பிரதமரின் வருகையும் பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்வதாக அமைந்தது.

இந்நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததை மையமாக வைத்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்யத்தொடங்கினார். மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டுகளைப் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் இந்தத் தவறுகளுக்கு அதிமுக அரசே காரணம் என்றும் மத்திய அரசின் தவறுகளை அதிமுக சுட்டிக்காட்டுவதோ தட்டிக்கேட்பதோ இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார். இந்தப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு தமிழத்துக்கு தர வேண்டிய நிதியாக குறைத்துவிட்டது என்பதை வெளிப்படையாக பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய வரி வருவாயை வலியுறுத்திக் கேட்போம் என்றும் உறுதியாகக் குரல் கொடுத்துள்ளார். நிதி வருவாயில் செஸ் என்றும் சர்சார்ஜ் என்றும் வகைப்படுத்தப்படும் நிதியை மாநிலங்களுக்குத் தரவேண்டியதில்லை. வழக்கமாக பத்து சதவீதமாக இருந்த இந்த வரிகளை 20 சதவீதமாக உயர்த்தியதால் மாநில அரசுகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் தமிழத்துக்கு வர வேண்டிய ரூ. 32, 840 கோடி வருமானம் ரூ. 23 ஆயிரம் கோடியாக குறைந்துவிட்டது. தமிழ்நாடு பெருமளவு நகரமயமாகிவிட்ட காரணத்தால் நிதி கமிஷன் அதற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை வெகுவாகக் குறைத்துவிட்டது என்பதையும் அதிமுக அரசு போட்டு உடைத்துள்ளது.

நகரமயமாவது என்பது வளர்ச்சியின் குறியீடு. ஒரு மாநிலம் வளர்ச்சி அடைந்துவிட்டது என்ற காரணத்தால் அதற்கு உரிய நிதி குறைக்கப்படுவது வளர்ச்சிக்கு தண்டனையாகும். மேலும் வளர்ச்சி அடையாமல் தொடர்ந்து பின்தங்கி மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தருவது வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதியாகும் என்று பொருளாதார விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தியாவின் வரி வருவாயில் மராட்டியதுக்கு அடுத்தபடியாக பெருமளவு தருவது தமிழ்நாடு. ஆனால், மத்திய அரசு இந்த வருவாயை அதற்கு வேண்டிய மாநிலங்களுக்குத் தருகிறது. தமிழ் நாட்டின் வளத்தை வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு தருகிறது என்பதும் தமிழ் நாட்டை வட மாநிலங்கள் சுரண்டுகிறது குற்றச்சாட்டாகும். இது, பேரறிஞர் அண்ணா முன் வைத்த குற்றச்சாட்டாகும். இதை ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று அவர் குறிப்பிடுவார்.


அண்ணாவின் பெயரைத் தாங்கிய அரசும் தனது இடைக்கால பட்ஜெட்டில் இன்றைய நிலையிலும் அதுதான் நடக்கிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும்,தொடர்ந்து பேட்டியளித்த நிதித்துறை அதிகாரியும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு காரணமல்ல என்பதையும் மத்திய அரசின் அதிக வரி விதிப்பால்தான் பெட்ரோல், டீசல் விலை கூடியுள்ளது என்றும் தெளிவுபடுத்தினார். மத்திய பாஜக அரசுக்கு முழுவதும் தலையாட்டும் அரசாக மாநில அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு இல்லை என்பதை முதல்வரும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலமும், யாருடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுகவின் கொள்கைகள் மாறாது என்ற உறுதியான பேச்சாலும் தெளிவுபடுத்தியுள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராடிய வழக்குகளை ரத்து செய்த்துள்ளார். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லும் எண்ணிக்கையையும் அதிமுக அரசு அதிகரித்துள்ளது. பாஜக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு ஆதரிக்கவில்லை என்பதை இடைக்கால பட்ஜெட்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

Views: - 0

0

0