கண்டுகொள்ளாத டெல்லி பாஜக…?ரஜினியிடம் தஞ்சம் புகுந்த OPS!… அரசியல் களத்தில் திடீர் ட்விஸ்ட்!

Author: Babu Lakshmanan
25 October 2023, 9:11 pm

நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் நடந்த நவராத்திரி விழா ஆன்மிகம் தொடர்பான ஒரு நிகழ்வு என்றாலும் கூட அதையும் தாண்டி அரசியல் வட்டாரத்தில் அது ஒரு பேசு பொருளாகவும் மாறி இருக்கிறது.

இந்த விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் லதா ரஜினிகாந்த்தான் செய்திருப்பார் என்றாலும் கூட சிறப்பு விருந்தினர்களாக யார் யாரையெல்லாம் அழைப்பது என்பதை ரஜினியிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர், தானாகவே முடிவு செய்திருக்கமாட்டார் என்பது நிச்சயம்.

ஏனென்றால் அழைக்கப்பட்ட பிரபலங்களில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஸ்டாலின் சகோதரி செல்வி, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்ததுதான், இதற்கு முக்கிய காரணம்.

அதேநேரம் நடிகர் ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், ஓபிஎஸ் மூவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினி, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதனால் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,
ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை ரஜினியின் விருப்பத்தின் பேரில் லதா ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து இருக்க வாய்ப்புண்டு.

அதேநேரம் முதலமைச்சர் ஸ்டாலின் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் கூட தீவிர கடவுள் பக்தையான அவருடைய மனைவி துர்காவை இருவருமே ஒரு மனதாக அழைத்து இருப்பார்கள் என்பதும் நிஜம்!

வீட்டில் நடக்கும் நவராத்திரி விழா என்பதால் அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய
வி வி ஐ பிக்களை அழைப்பதுதான் மரபு என்ற அடிப்படையில் இவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருக்கவும் செய்யலாம்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் பிரபல பெண்களே கலந்துகொண்ட இந்த நவராத்திரி விழாவில் அரசியல்வாதி என்ற முறையில் பங்கேற்ற ஒரே ஆண் ஓ பன்னீர்செல்வம் மட்டுமே. இது மிகவும் பாராட்டுக்குரியதொரு விஷயம் என்றாலும் கூட அரசியல் ரீதியான கோணத்திலும் பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் மாநிலம் முழுவதும் தனது புரட்சி பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி காஞ்சிபுரம் மாநாட்டின் மூலம் தொடங்க திட்டமிட்டு இருந்த ஓபிஎஸ்,
அதற்கு முதல் நாள் போயஸ் தோட்டத்திற்கு சென்று ரஜினியை அவருடைய வீட்டில் சுமார் ஒரு மணி நேரம் தனியாக சந்தித்து தீவிர ஆலோசனையும் நடத்தினார். எனினும் பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது, இது ஒரு மரியாதை நிமிர்த்தமான சந்திப்புதான் என்று கூறி இது தொடர்பாக எழுந்த அத்தனை யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

என்னதான் மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்றாலும் இருவரும் ஒரு மணி நேரம் பேசியதில் அரசியல் இல்லாமலா இருந்திருக்கும்? என்ற கேள்விகளும் அப்போது எழவே செய்தன.

அதேநேரம் செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் ஓபிஎஸ்ஸால் தனது மாநாட்டை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ரத்து செய்ய வேண்டியதாயிற்று என்பது வேறு விஷயம்.

உண்மையில், தான் நடத்தும் மாநாட்டுக்கு வெளிப்படையாக வாழ்த்து தெரிவிக்கும்படி ரஜினியை அப்போது ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அது போல் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று அவர் மறுத்து விட்டதாகவும் அந்த நேரத்தில் ஒரு தகவல் கசிந்தது.

அதனால்தான் விரைவில் கொங்கு மண்டலத்தில், தான் தொடங்கவிருக்கும் புரட்சி பயணத்திற்கும் இனி நடத்தும் மாநாடுகளுக்கும் ஆசி பெறுவதற்காகவே ரஜினி வீட்டில் நடந்த நவராத்திரி விழாவை நல்லதொரு வாய்ப்பாக ஓபிஎஸ் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நவராத்திரி விழா ஆன்மிகம் தொடர்புடையது என்பதால் நடிகர் ரஜினியுடன் ஓபிஎஸ் அரசியல் பேசுவதற்கான வாய்ப்பே அமைந்திருக்காது என்பதுதான் எதார்த்தம்.

ரஜினி வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அங்குள்ள சூழ்நிலை காரணமாக ஓ பன்னீர்செல்வத்தால் அரசியல் பேசியிருக்க முடியாது என்றாலும் கூட, “நான் எப்போதும் உங்கள் ஆதரவாளன் நீங்கள் சொல்வது போலவே நடப்பேன்” என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாகவே அவர் அங்கு சென்றுள்ளார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சமீபகாலமாகவே “டெல்லி பாஜக மேலிடம் என்னைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கி வருகிறது, அது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை. அமித்ஷா,
ஜே பி நட்டா போன்ற தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள நீங்களாவது இதை எடுத்துச் சொல்லக் கூடாதா?” என்று ரஜினியிடம் போன் மூலம் ஓபிஎஸ் அவ்வப்போது மனம் குமுறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ஓபிஎஸ்க்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அவருடைய பேச்சை முழுமையாக நம்பியதால்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற நேரிட்டது என்ற எண்ணம் டெல்லி பாஜக மேலிடத்திடம் வலுவாக உருவாகிவிட்டது. அதை நீக்குவது மிகவும் கடினம்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“முன்பு பிரபல சென்னை ஆடிட்டர் ஒருவர் ஓபிஎஸ்ஐ டெல்லி பாஜக தலைவர்களிடம் நன்கு அறிமுகம் செய்து வைத்தார். 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதும் அந்த ஆடிட்டரின் பேச்சை கேட்டுத்தான்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு ஏராளமான சட்டப் போராட்டங்களையும் அவருடைய ஆலோசனையின் பேரில்தான், ஓபிஎஸ் முன்னெடுத்தார். ஆனால் எதிலுமே வெற்றி கிடைக்கவில்லை. அதேபோல் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் மூவரையும் ஒன்றாக சந்திக்க வைத்து அவர்கள் மூலம் 2024 தேர்தலை எதிர்கொள்ள டெல்லி பாஜக தலைவர்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் இதுவரை எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.

தவிர அந்த ஆடிட்டர் ஓபிஎஸ்சும், சசிகலாவும் தங்களுக்கென்று தனிப்பட்ட வாக்கு வங்கியை வைத்திருப்பார்கள் என்று நம்பவில்லை. டிடிவி தினகரனாவது 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5.4 சதவீத ஓட்டுகளையும், 2021 தமிழக தேர்தலில் 2.47 சதவீத வாக்குகளையும் பெற்று தனக்கு ஓரளவு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டிவிட்டார்.

அதேநேரம் சசிகலாவும், ஓபிஎஸ்சும் டிடிவி தினகரனுடன் சேர்ந்தாலும் கூட ஏற்கனவே அமமுகவுக்கு மொத்தமாக எவ்வளவு ஓட்டுகள் கிடைத்ததோ அதே சதவீத அளவு வாக்குகள்தான் வரும் தேர்தலில் கிடைக்கும். ஓரிரு சதவீதம் கூட அதிகரிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதை அந்த ஆடிட்டர் நன்கு புரிந்து கொண்டதால்தான் தற்போது ஓபிஎஸ்-க்கு அவர் எந்த வகையிலும் உதவுவதில்லை என்கின்றனர்.

இதனால் அதிர்ந்து போய் இருக்கும் ஓபிஎஸ்க்கு 2024 தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் வந்துவிட்டது.

அதனால் இனி ஆடிட்டரை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ள அவர், அண்மைக்காலமாக நடிகர் ரஜினியின் உதவியை நாடி வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. தனது மகனை பாஜக சார்பில் தேனியில் போட்டியிட வைப்பதற்கும் ரஜினி மூலமே ஓபிஎஸ் இப்போது காய்களை நகர்த்தி வருகிறார்.

ஏனென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பே, டெல்லி பாஜக தலைவர்கள் என்னிடம் கடந்த மூன்று மாதமாக போன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் கூறுகிறார். ஆனால் இன்று வரை அப்படி யாரும் அவரை தொடர்பு கொண்டு பேசியதாக தெரியவில்லை.

அதனால்தான் ரஜினிக்கு டெல்லி பாஜக மேலிடத்திடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து விடவேண்டும் என்று ஓபிஎஸ் துடியாய் துடிக்கிறார். ரஜினியின் கருணைப் பார்வை எப்போது தனக்கு கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்த ஓபிஎஸ்க்கு, அவருடைய வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு வந்ததும் ஓடோடி சென்று விட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

இதிலிருந்து தெரியவரும் இன்னொரு முக்கிய விஷயம், அதிமுகவில் ஓபிஎஸ் முன்பு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தபோதும் சரி, மூன்று முறை தற்காலிக முதலமைச்சராக இருந்த போதும் சரி தனக்குப் பதவி மட்டுமே போதும், வேறு எதுவும் தேவையில்லை என்று அலட்சியமாக இருந்ததால்தான் இன்று தனது சமுதாய வாக்குகளை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்க வேண்டிய பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்பட்டு விட்டார்.

அதேபோல்தான் டிடிவி தினகரனும் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை மட்டுமே நம்பி இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளாக வேட்பாளர்களின் சாதி பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை என்பது தமிழகத்தில் நடந்த பல தேர்தல்களில் நிரூபணம் ஆகி உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுவும் ஏற்கக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!