6 காங். எம்பிக்களுக்கு சீட் இல்லை…! காங்கிரஸில் வெடித்த கலாட்டா… அதிர்ச்சியில் திருநாவுக்கரசர், ஜோதிமணி!!!

Author: Babu Lakshmanan
14 February 2024, 7:38 pm
Quick Share

தமிழக காங்கிரசுக்கு திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கும் என்பதே இன்னும் உறுதியாக ஆகாத நிலையில் திமுகவிலும், மாநில காங்கிரசிலும், தற்போதைய எம்பிக்களில் ஆறு பேருக்கு போட்டியிட வாய்ப்பே வழங்கக் கூடாது என்ற கலகக் குரல் வெடித்து இருக்கிறது.

அதுவும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு இன்னும் முழுமை அடையாத நிலையில் இந்த கோஷம் எழுந்திருப்பதுதான் இதில் சுவாரஸ்யம்.

இதனால்தான் காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகளை திமுக ஒதுக்குமா? அல்லது 7 எம்பி சீட்டுகளை தருமா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கடந்த முறை 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி கண்டது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கு காரணம் திருநாவுக்கரசர், கே வி தங்கபாலு, கே எஸ் அழகிரி, ஈ வி கே எஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் போன்ற காங்கிரசின் சீனியர் தலைவர்கள் திமுகவின் முழு நேர அனுதாபிகளாகவே மாறிவிட்டனர் என்பதுதான். திமுக ஆட்சியில் மக்களை பாதிக்கக்கூடிய சம்பவங்கள் ஏதாவது நடந்தால் திமுக தலைவர்கள் கருத்து கூறுவதற்கு முன்பாகவே இவர்கள் முந்திக்கொண்டு முதல் ஆளாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதையும் வாடிக்கையாக்கி கொண்டனர்.

அதேநேரம் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் போன்ற எம்பிக்கள் நடுநிலையாக கருத்து தெரிவித்தால் கூட அதை ஒரு அட்வைஸ் என்கிற ரீதியில் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் மீது திமுகவினர் கடும் விமர்சனங்களை வாரி இறைத்தனர்.

இதைவிட கேலிக்கூத்து என்னவென்றால், தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்களே இந்த நால்வரைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களை சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மூவரிடம் போட்டுக் கொடுக்கவும் செய்ததுதான். நல்லவேளையாக, டெல்லி மேலிடம் இந்த குறைபாடுகளை பூதாகரமாக்கி பார்க்கவில்லை.

இந்த நிலையில்தான் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்ற கோரிக்கை தமிழக காங்கிரசில் எழுந்துள்ளது. இதில் ஆச்சரியமான இன்னொரு விஷயம் என்னவென்றால் திமுகவின் தீவிர விசுவாசி என்று கூறப்படும் திருச்சி தொகுதி எம்பி திருநாவுக்கரசர் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதுதான்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிவகங்கைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடக் கூடாது என்று அந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நிர்வாகிகளே போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இவர் மீது தொகுதிக்குள் எட்டிப் பார்க்கவில்லை, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இல்லையென்றாலும் கூட முன்னாள் எம்பி சுதர்சன நாச்சியப்பனின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இன்னொரு பக்கம் நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு, சிவகங்கையில் மட்டுமல்ல வேறு எந்த தொகுதியிலும் நிற்க முடியாதபடி திமுக தலைமை பார்த்துக்கொள்ள வேண்டும் என அந்த மாவட்ட திமுக நிர்வாகிகள் கொளுத்தி போட்டுள்ளனர்.

திமுகவினர் இப்படி கொதிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. மாநிலத்தில் தங்கள் தலைமையிலான ஆட்சி நடக்கும் நிலையில் கார்த்தி சிதம்பரம் தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன் இஷ்டத்திற்கு, செயல்படுகிறார் என்ற மனக்குமுறல் சிவகங்கை மாவட்ட திமுக நிர்வாகிகளிடம் பரவலாக காணப்படுவதுதான்.

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணியை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கிறார். தவிர தொகுதியில் பெரிதாக வேலை எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நிர்வாகிகளே முன் வைக்கின்றனர். குறிப்பாக, இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று காங்கிரஸ் டெல்லி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், ஜோதி மணிக்கும் இடையேயான நட்புறவு இப்போது வேப்பங்காய் போல் கசப்பாகி போனதால் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும் ஜோதிமணிக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றனர்.

‘செந்தில் பாலாஜி, அவருடைய தம்பி அசோக்குமார் வீடுகளில் நடத்தப்பட்ட IT மற்றும் ED ரெய்டுகளுக்கு பின்னணியில் இருந்தது ஜோதிமணிதான். டெல்லியில் தனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை சிறையில் கம்பி எண்ண வைத்து விட்டார். அதனால் எக் காரணம் கொண்டும் கரூரில் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்து விடக்கூடாது. திமுகதான் தொகுதியில் நிற்கவேண்டும்’ என்று அந்த நிர்வாகிகள் கடந்த ஆறு மாதங்களாகவே அறிவாலயத்தை வலியுறுத்தியும் வருகின்றனர்.

ஆரணி தொகுதி எம்பியாக இருக்கும் விஷ்ணு பிரசாத் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் என்றாலும் கூட தொகுதிக்காக அவர் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை, கட்சி நிர்வாகிகள் யாரையும் மதித்து நடந்து கொள்வதும் இல்லை, மக்களை சந்திப்பதும் கிடையாது என்ற முணுமுணுப்பு அத்தொகுதி காங்கிரசாரிடம் பரவலாகவே காணப்படுகிறது. அதேநேரம் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட திமுக நிர்வாகிகளிடம், இவருக்கு
நெருக்கமான நட்பு உண்டு. என்ற போதிலும் இம்முறை அவர்களும் கூட விஷ்ணு பிரசாத்தை கைவிட்டு விட்டதாகவே தெரிகிறது.

திருவள்ளூர் தனித் தொகுதி எம்பியான ஜெயக்குமார் கடந்த சில மாதங்களாக திமுக அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது கடுமையாக விமர்சித்து பொதுமேடைகளில் பேசி வருகிறார். 2021 தமிழக தேர்தலுக்கு முன்பு வரை தன்னை ஆதரித்த திருவள்ளூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே தலைகீழாக மாறிவிட்டதுதான் இதற்கு முக்கிய காரணம் என்பதால் ஜெயக்குமார் எம்பி தன் மனதில் பட்டதை பேசி வருகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதேநேரம் திருவள்ளூர் தொகுதியை, விசிக தலைவர் திருமாவளவனும் குறி வைக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட பிறகே ஜெயக்குமார் எம்பி இப்படி தாக்கி பேசுகிறார் என்பதுதான் எதார்த்த நிலை. ஆனால் திமுகவினரோ இதை ரசிக்கவில்லை. நமது ஆதரவால் வெற்றி பெற்றவர் நமது அரசையே குறை கூறுகிறாரே என்று கொந்தளிக்கின்றனர்.

விருதுநகர் தொகுதியை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட கேட்பதால் அதை காரணம் காட்டி தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூருக்கு கொடுக்கக் கூடாது என்ற வேண்டுகோளை விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளே அறிவாலயத்திடம் முன் வைத்துள்ளனர். இதற்குக் காரணம் திமுகவினருடன் மாணிக்கம் தாகூர் அவ்வளவாக நெருக்கம் காட்டுவதில்லை என்று கூறப்படுவதுதான். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேரடி தொடர்பில் இருப்பவர் மாணிக்கம் தாகூர் என்பதால் எப்படியும் அவர் தனக்காக விருதுநகர் தொகுதியை கேட்டு வாங்கி விடுவார் என்கிறார்கள்.

திமுகவின் அனுதாபியாக திகழும் திருநாவுக்கரசர் எம்பியின் பாடுதான் இதில் மிகுந்த திண்டாட்டமாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் மிகுந்த நட்பு பாராட்டும் திருநாவுக்கரசருக்கு எதிராக திருச்சி மாவட்ட திமுகவினரே திரும்பிவிட்டனர். எப்போதாவது அபூர்வமாகத்தான் தொகுதி பக்கமே திருநாவுக்கரசர் தலையை காட்டுகிறார், அவருக்கு மீண்டும் திருச்சி ஒதுக்கப்பட்டால் வெற்றி பெறுவது மிக மிக கடினமாக இருக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் தனிப்பட்ட முறையில் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கடிதங்களை எழுதி குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி மாநில காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் தற்போதைய காங்கிரஸ் எம்பிக்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதால்தான் அக்கட்சிக்கு 6 தொகுதிகளை
ஒதுக்கினாலே போதும் என்ற மனநிலையில் திமுக தலைமை இருப்பதாக தெரிகிறது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுவிட்டால்
திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர் போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா?என்பது உறுதியாக தெரிய வந்து விடும்.

Views: - 277

0

0