திமுகவில் கோஷ்டி பூசல் உச்சம்! CM ஸ்டாலினுக்கு புதிய சவால்?…

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2023, 9:36 pm
CMMMM - Udpatenews360
Quick Share

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும், ஆளும் கட்சியான திமுகவுக்கு, அதன் கூட்டணி கட்சிகளை சமாளித்து விடுவது கூட எளிதான காரியமாக இருக்கலாம்.

ஆனால் பல மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மேயர்கள் உள்ளிட்டோர் பொதுவெளியில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை தடுப்பதற்குள் திமுக தலைமைக்கு போதும் போதுமென்று ஆகிவிடுகிறது.

குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்கள் அண்மைக் காலமாக திமுகவுக்கு ஒரு சோதனைக் களமாகவே உள்ளது.

திமுக எம்பி, அமைச்சர் இடையே மோதல்

கடந்த மார்ச் மாதம் திருச்சி நகரில் நடந்த அரசு விழா ஒன்றில் திருச்சி சிவா எம் பியின் பெயரை அழைப்பிதழில் அச்சிடாததை கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் கே என் நேருவின் காரை வழிமறித்து, கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். இதன் எதிரொலியாக நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்பியின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது.

அத்துடன் இந்த விவகாரம் ஓய்ந்துவிடவில்லை. இது தொடர்பாக இருதரப்பிலும் 15க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் அந்தக் காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதும் அதில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கை எலும்பு முறிந்த நிகழ்வும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு அமைச்சர் கே என் நேருவும் திருச்சி சிவாவும் கட்சி தலைமை உத்தரவின் பேரில் சமாதானம் ஆகிவிட்டார்கள் என்றாலும் கூட இன்றுவரை இருதரப்பினரும் தனித்தனி கோஷ்டிகளாகவே செயல்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

போதாக்குறைக்கு அமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பரான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் இன்னொரு கோஷ்டியும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திகைக்க வைத்த நெல்லை உட்கட்சி பூசல்

இதையடுத்து கடந்த மே மாதம் திருநெல்வேலி நகர திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனால் திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளரும்
பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏவுமான அப்துல் வஹாப், அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் மைதீன்கான் நியமிக்கப்பட்டார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வியை பொது மேடையில் மிரட்டிய விவகாரம் தொடர்பாக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் இடையே கோஷ்டி பூசல் இருப்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்த நிலையில் மிக அண்மையில் இதேபோல மேலும் மூன்று மாவட்டங்களில் நடந்துள்ள நிகழ்வுகள் முதலமைச்சரும்,
திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு மிகுந்த எரிச்சலை தருவதாக அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

மா.செ காலில் விழுந்த அமைச்சர்

புதுக்கோட்டை நகரில் கடந்த 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சரியான நேரத்திற்கு வந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியனுக்காக அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது அங்கு தாமதமாக வந்த செல்லப்பாண்டியனை பார்த்து
அமைச்சர் ரகுபதி கையெடுத்து கும்பிட்டு இதுபோல் நீங்கள் தாமதமாக வரும் நிகழ்ச்சிக்கு தயவு செய்து என்னை அழைக்காதீர்கள் என்று கூறி அவர் காலில் விழப் போனார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சர் பெரியவரா? மாவட்ட செயலாளர் பெரியவரா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்பிரச்சனைக்கு திமுக தலைமை தீர்வு கண்டதா? என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில்தான் கடந்த 17ம் தேதி மதுரையில் நடந்த முப்பெரும் விழாவில் மதுரை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்ச நிலையில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

திமுக அமைச்சர்கள் மோதல்

அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஏனென்றால் தளபதி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியின் தீவிர ஆதரவாளர். அமைச்சர் மூர்த்திக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் ஒரு போதும் ஒத்துப் போவதில்லை. எதிர் எதிர் துருவங்களாகவே உள்ளனர். இருவரும் நேருக்குநேர் பார்த்துக் கொள்வதையும் கூட தவிர்த்து வருகின்றனர்.

அண்மையில் மதுரை நகரில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் கூட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்ததும், மாவட்ட செயலாளர் தளபதி தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பிடிஆர், தன்னுடைய ஆதங்கத்தை விழா மேடையிலேயே வெளிப்படுத்தினார். அவர் பேசும்போது, “உண்மையில் நல்ல மனிதராக இருக்க விரும்புபவர் அடுத்தவரை நேசிக்க வேண்டும். பதவி, பொறுப்பு வரும் போகும். நாளை 10 சீட்டுகள்கூட கிடைக்காத கட்சியாக மாறலாம். ஆனால், மனிதனின் அன்பு, பாசத்துக்கு மரியாதை கொடுக்கவேண்டும். உலகில் எனக்கு எத்தனை பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதே பெருமை, என் அடையாளம். அதற்கு மேல் யாராலும் எனக்கு எந்தப் பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது” என கொந்தளித்தார். அவருடைய பேச்சின் கடைசி வரியை உற்றுநோக்கியவர்கள், பிடிஆர் பலத்த அதிருப்தியில் இருப்பதாலேயே இப்படி பேசியிருக்கிறார், என்கிறார்கள்.

தேனியில் பெரிய பஞ்சாயத்து

இதேபோல இரு தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட திமுகவிலும் ஒரு பஞ்சாயத்து வெடித்துள்ளது.தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ. அதேபோல் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பதவி வாகிப்பவர் தங்க தமிழ்ச்செல்வன்.

இவர்கள் இருவருமே தங்களுடைய மாவட்ட எல்லையை விட்டு அடுத்தவர் மாவட்ட எல்லைக்குள் மூக்கை நுழைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அறிவாலயத்தில் அமைச்சர் கே என் நேரு, ஆர் எஸ் பாரதி ஆகியோர் முன்னிலையில் சமீபத்தில் பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்பாகவே கம்பம் ராமகிருஷ்ணனும், தங்க தமிழ்ச்செல்வனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தடித்த வார்த்தைகளை பேசி அறிவாலயத்தையே அதிர்ச்சியடைய செய்து விட்டனர், என்று கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இருவரையும் ஸ்டாலினிடம் நேரடியாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவராலும் இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்கிறார்கள். “இப்படி மூத்த நிர்வாகிகளே மோதிக் கொள்வது கட்சிக்கு நல்லது அல்ல” என்று மட்டும் அறிவுரை கூறி இருவரையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.

திமுகவில் தலை தூக்கி இருக்கும் கோஷ்டி பூசல்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறுவது இதுதான்.

கட்சிக்கு அவப்பெயர்

“முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவில் ஏராளமான கோஷ்டிகள் உருவாகிவிட்டன. கருணாநிதி காலத்தில் கூட இந்த அளவிற்கு கோஷ்டிகள் இருந்ததில்லை.

கோவை, கடலூர், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், நெல்லை, தென்காசி, தர்மபுரி என்று 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், மேயர்கள், எம்எல்ஏக்கள் என எல்லோருமே தங்களுக்கென்று கோஷ்டிகளை வைத்துள்ளனர். எல்லா கட்சிகளிலுமே பல கோஷ்டிகள் இருப்பது உண்டு. அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் திமுகவை பொறுத்தவரை ஆளும் கட்சியாக இருப்பதால் இவர்களிடையே யார் பெரியவர்கள், அதிகாரம் மிக்கவர்கள் என்ற போட்டி எழும்போதுதான் சிக்கலே எழுகிறது.

இது பொதுமக்களை பாதிக்காத வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை. ஆனால் பொது இடங்களில் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும்போதும், அது ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக வெளியாகும் போதும்தான் விவகாரமே விஸ்வரூபம் எடுக்கிறது. பொதுமக்களை முகம் சுளிக்க வைப்பதுடன் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த காரணமாகவும்
அமைந்து விடுகிறது.

தேர்தல் பீதியில் திணறும் திமுக!

“ஒரு கட்சியில் பல கோஷ்டிகள் இருப்பது நல்லதுதான். தேர்தல் நேரத்தில் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரிப்பார்கள். அதனால் நாமும் நமது கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெறுவோம்” என்று திமுக தலைமை ஒரு கணக்கு போடலாம். அதனால் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொள்ளவும் செய்யலாம்.

தமிழகத்தில் காங்கிரசிலும் பத்துக்கும் மேற்பட்ட கோஷ்டிகள் உள்ளன. ஆனால் அந்த கோஷ்டிகளால் கட்சிக்கு பெரிய அளவில் எந்த நன்மையும் கிடைத்ததாக தெரியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

மேலும் தேர்தல் நேரத்தில் திமுகவில் ஒரு கோஷ்டியின் கை பலமாக ஓங்கி இன்னொரு தரப்பின் கை இறங்கிப் போனால் பாதிக்கப்பட்டதாக நினைப்பவர்கள் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்ட மாட்டார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

CM ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்

அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் கோஷ்டி பூசல்களால் அக்கட்சிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகளும் உண்டு என்பதை மறுக்க முடியாது. மேலும்
திமுகவின் இளைஞர் அணி செயலாளரான அமைச்சர் உதயநிதி மாநிலம் முழுவதும் கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனால் 50 வயதுக்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் கட்சிப் பணிகளிலும், தேர்தல் வேலைகளிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிக் கொள்ளும் நிலையும் உருவாகலாம்.

இதனால் திமுகவுக்கு தேர்தலில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும் கூட சிறிய அளவில் வெற்றி வாய்ப்பை தவறவிடும் நிலையை ஏற்படுத்தும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதும் ஏற்கக் கூடிய ஒன்றாகவே உள்ளது!

Views: - 101

0

0