மக்கள் நலனில் அக்கறையில்லை… காங்கிரஸ் மீது அதிருப்தி : கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி..!!

Author: Babu Lakshmanan
24 August 2022, 5:21 pm

காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளினால் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாதததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க சரியான தலைமையை தேர்வு செய்தாக வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு சிலர் அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்த ஜெய்வீர் ஷெர்கில் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சோனியாவுக்கு எழுதி கடிதத்தில் கூறியிருப்பதாவது ;- இந்திய தேசிய காங்கிரசில் தற்போது முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்களின் கொள்கை மற்றும் பார்வையானது, இளைஞர்கள் மற்றும் நவீன இந்தியாவின் நோக்கங்களுடன் நீண்ட நாட்களாக ஒத்து போகாத தன்மையுடன் காணப்படுகிறது.

இதுதவிர, நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக முடிவு எடுப்பது இல்லை என்பதும் எனக்கு வலியை ஏற்படுத்தி உள்ளது. சுய நலன்களில் ஆர்வமுள்ள தனிநபர்கள் செல்வாக்கோடு இருப்பதுடன், முகஸ்துதி பாடுவதும், அடிப்படை உண்மை தன்மையை தொடர்ச்சியாக தவிர்ப்பவர்களாகவும் உள்ளனர். இதனை ஒழுக்கநெறி சார்ந்து என்னால் ஏற்கவோ அல்லது தொடர்ச்சியாக பணியாற்றவோ முடியாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முக்கிய நிர்வாகி விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • sachin's daughter went on a date with a Bollywood actor கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!