திமுக கூட்டணியில் இணையும் பாமக?… திருமாவை சமாளிக்க புது வியூகம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2023, 9:45 pm
Dmk Pmk - Udpatenews360
Quick Share

2024 தேர்தலை சந்திப்பதற்காக தமிழகத்தில் திமுக தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காக பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளையும் வளைத்துப் போடும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் எப்படியும் தங்களது கூட்டணிக்குதான் வந்து சேருவார் என்று திமுக தலைமை கருதினாலும் கூட கடந்த சில நாட்களாக அவருடைய கட்சி நிர்வாகிகள் திடீரென தங்களுக்கு குறைந்த பட்சம் இரண்டு தொகுதிகளாவது ஒதுக்கவேண்டும் என முரண்டு பிடிப்பதால் இதுவரை நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை.

“2021 தேர்தலில் விசிக, சிபிஎம், சிபிஐ மூன்று கட்சிகளுமே தலா ஒரு சதவீத வாக்குகளைத்தான் பெற்றன. ஆனால் நாங்களோ 2.6 சதவீதம் பெற்று இருக்கிறோம். நியாயப்படி பார்த்தால் இந்தக் கட்சிகளுக்கு கொடுப்பதை விட எங்களுக்கு ஒரு தொகுதியாவது கூடுதலாக கொடுக்கவேண்டும். ஆனாலும் நாங்கள் மூன்று எம்பி சீட்டுகளை கேட்கவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி அதிக ஓட்டுகள் வாங்கிய கோவை மற்றும் தென் சென்னை என இரண்டு தொகுதிகளை கொடுத்தாலே போதும்” என்று மக்கள் நீதி மய்யம் அறிவாலயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இப்படி இரண்டு தொகுதிகள் கேட்பது பற்றி கமல் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “எங்கள் கட்சியின் தலைவர் நாடு முழுவதும் அறிந்த பிரபல திரைப்பட நட்சத்திரம் என்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இண்டியா கூட்டணிக்காக எல்லா மாநிலங்களிலும் பிரச்சாரம் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கட்சியின் தலைவருக்கு அவருடைய மாநிலத்தில் இரண்டு தொகுதிகளை கூட கொடுக்கவில்லை என்றால் அது கவுரவமாக இருக்காது. அதுவும் ஜனவரியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல், இண்டியா கூட்டணியை ஆதரித்து முழு வீச்சில் பிரச்சாரம் செய்யத் தொடங்கி விடுவார். எனவேதான் இரண்டு தொகுதிகளை கேட்கிறோம்” என்று காரணங்களை அடுக்குகின்றனர்.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினோ, கமலுக்கு மட்டும் ஒரு எம்பி சீட்டை ஒதுக்கினாலே போதும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம் பாமகவை எப்படியும் திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளின் பலத்தை வைத்தே வெற்றி பெற்று விடலாம் என்று திமுக தலைமை கணக்கு போடுவது தான். என்னதான் திமுக ஆட்சி மீதான அதிருப்தி தமிழக மக்களிடம் காணப்பட்டாலும் கூட அதைக் கூட்டணி பலத்தை வலுப்படுத்துவதன் மூலம் தகர்த்து விடலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார், என்கிறார்கள்.

குறிப்பாக ஐந்து சதவீத ஓட்டுகளை வைத்துள்ள டாக்டர் அன்புமணி தலைமையிலான பாமகவை இண்டியா கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால், அக் கட்சி அதிமுகவுடனோ, பாஜகவுடனோ சேர முடியாமல் தடுத்துவிடலாம். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்தியது போலாகிவிடும் என்றும் திமுக தலைமை நினைக்கிறது.

ஆனால் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் விசிக இருக்காது என்று திருமாவளவன் தொடர்ந்து கூறி வருவதால் அவரையும் சமாளித்து திமுக கூட்டணியில் நீடிக்க வைக்க வேண்டிய நெருக்கடியான நிலையும் ஸ்டாலினுக்கு உள்ளது.

2001 தமிழக தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜகவும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்ததை சுட்டிக்காட்டும் அறிவாலயம் இப்போது மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்காக பாமகவுடன் நீங்கள் கைகோர்க்க தயங்குவது ஏன்?…இரு கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பெற்று பாஜகவை தோற்கடிக்கலாமே என்று திருமாவளவனுக்கு யோசனை கூறி வருகிறது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் வழக்கம் போல உங்களுக்கு இரண்டு தொகுதிகள் உண்டு. அத்துடன் உங்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி பதவி ஒன்றையும் தருகிறோம்.
அதேபோல பாமகவுக்கும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்பி வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். இப்போதைக்கு நமது பொது எதிரி பாஜகதான். அதை வீழ்த்துவதுதான் நமது ஒரே இலக்காக இருக்கவேண்டும். அதற்காக உங்களைப் போலவே திமுக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது.

நமது கூட்டணி தமிழகத்தில் மிக வலுவாக இருந்தால்தான் 39 தொகுதிகளிலும் அதிமுகவையும், பாஜகவையும் எளிதில் வீழ்த்த முடியும் என்று திமுக தரப்பில் திருமாவளவனிடம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறதாம்.

ஆனால் திமுகவின் இந்த யோசனையை அவர் இதுவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரட்டும் என்று அவர் அமைதி காப்பது போல் தெரிகிறது. ஆனால் மௌனம் சம்மதம் என்பதுபோல திமுக தலைமை இதை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

அதேநேரம், டிசம்பர் 23ம் தேதி திருச்சி நகரில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் விசிக நடத்தும் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா மாநாட்டில் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் தலைவர்களையும் ஒரே மேடையில் ஏற்றி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவும் திருமாவளவன் திட்டமிட்டு இருக்கிறார், அதற்கான வேலைகளில் இப்போதே அவர் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார் என்பதும் வெளிப்படை.

அன்றைய தினம் பாமக தலைவர் டாக்டர் அன்புமணியும் திமுக கூட்டணி தலைவர்களுடன் தானும் ஒருவராக இந்த மாநாட்டில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

“இன்னும் எத்தனை கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்தாலும், திமுகவால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றுவது கடினமாகவே இருக்கும்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு சட்டம் ஒழுங்கு நிலைமை தமிழகத்தில் மிகவும் மோசமாகிவிட்டது. அதேபோல அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு அதிகரித்து விட்டது.இந்த இரண்டையும் திமுக அரசு தடுக்க தவறிவிட்டதாக 12 முதல் 15 சதவீத நடுநிலை வாக்காளர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. இந்த வாக்குகள் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் அதிக அளவில் செல்லக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அதேநேரம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விட்டதால் நான்கு முதல் ஐந்து சதவீத சிறுபான்மை இன மக்களின் ஓட்டுகளும் அதிமுகவிற்கு கிடைக்கும் நிலை உருவாகிவிட்டது.

முதல் முறை வாக்காளர்களிடமும், 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறை வாக்காளர்களிடமும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிரடி அரசியலால் புதிய எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது.

அதனால் கடுமையான மும்முனைப் போட்டி ஏற்பட்டு ஓட்டுகள் பிரிவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. திமுக தனது கூட்டணி பலத்தால் அதிகபட்சமாக 29 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும். அதிமுகவிற்கு 7, பாஜகவுக்கு 3 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு உருவாகும்.

அதேநேரம் அதிக கூட்டணி கட்சிகளுடன் இருப்பதால் திமுக 24 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவதும் கடினமாக இருக்கும். இதனால் திமுக போட்டியிடாத தொகுதிகளில் அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் மற்ற கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து, அது அதிமுகவுக்கு சாதகமாகவும் அமையலாம்.

பாமக, மக்கள் நீதி மய்யம் இரண்டும் தங்கள் கூட்டணிக்குள் வந்துவிட்டால் திமுக 24, காங்கிரஸ் 5, சிபிஎம், சிபிஐ, விசிக, பாமக, ஆகியவற்றுக்கு தலா 2 , கமல் கட்சி, முஸ்லிம் லீக் தலா 1 என தொகுதி பங்கீடு அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துவிட்டால் அவருடைய இரு மகன்களும் திமுக சின்னத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்பதால் அதனால் பெரிய அளவில் சிக்கல் எதுவும் ஏற்படாது. ஆனால் மதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாது. வேண்டுமென்றால் அக்கட்சிக்கு திமுக சின்னத்தில் போட்டியிட ஒரு எம்பி சீட் வழங்கப்படலாம்.

திமுக தலைமை இப்படி வலுவான கூட்டணி அமைக்க விரும்புவதற்கு முக்கிய காரணமே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அக் கூட்டணிக்கு கிடைத்த 57 சதவீதம் வாக்குகள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதுதான். அது இப்போது 42 சதவீதமாக குறைந்திருக்கிறது என சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. அதேநேரம் அதிமுகவுக்கு 31, பாஜக கூட்டணிக்கு 17 சதவீத ஓட்டுகளும் கிடைக்கலாம் என்றும் அந்த கணிப்பு கூறுகிறது.

இதனால்தான் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளை தனது கூட்டணிக்குள் எப்படியாவது கொண்டு வந்து விடவேண்டும், ஓபிஎஸ்சையும் திமுகவில் இணைத்து விடவேண்டும் என்று திட்டமிட்டு அறிவாலயம் காய்களை நகர்த்தி வருகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுக கூட்டணியில் என்னென்ன கட்சிகள் எல்லாம் சேரப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 100

0

0