2024ல் கூட்டணி மாற திட்டமா..? சப்பை கட்டு கட்டி நழுவிய பாமக : பென்னாகரத்தை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்கள்!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 2:00 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாமக அறிவித்திருப்பது அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழச் செய்துள்ளது.

2021ம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த வாரம் உயிரிழந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும், பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Admk - Updatenews360

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேவேளையில், கடந்த முறை தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று, தற்போது அதிமுக களமிறங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் வெளியிடவில்லை.

எனவே, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். ஜான் பாண்டியன் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். அதேவேளையில், அதிமுக சார்பில் தாங்கள் போட்டியிடப் போவதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இதனால், அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாமக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில்‌ ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத்‌ தொகுதிக்கு பிப்ரவரி மாதம்‌ 27-ஆம்‌ நாள்‌ இடைத்தேர்தல்‌ நடத்தப்படும்‌ என்று தேர்தல்‌ ஆணையம்‌ அறிவித்துள்ளது. இடைத்தேர்தல்கள்‌ தேவையற்றவை; மக்களின்‌ வரிப்‌ பணத்தையும்‌, நேரத்தையும்‌ வீணடிப்பவை. அதனால்‌ தான்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ காலமானதாலோ, கட்சித்‌ தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர்‌ பதவி காலியானால்‌ அங்கு இடைத் தேர்தல்‌ நடத்தத்‌ தேவையில்லை;

அங்கு பொதுத்தேர்தலில்‌ எந்தக்‌ கட்சி வெற்றி பெற்றதோ, அதே கட்சியைச்‌ சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கி விடலாம் என்பது தான்‌ பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு; இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்போவைத்‌ தொகுதி இடைத்தேர்தலிலும்‌ போட்டியிடுவதில்லை; எந்தக் கட்சிக்கும்‌ ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில்‌ ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமகவின் இந்த அறிவிப்பு அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவதே வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பதாகக் கூறும் பாமக, பென்னாகரம் இடைத்தேர்தலில் மட்டும் போட்டியிட்டது ஏன்..? என்றும், அங்கு வன்னியர் சமுதாய மக்கள் அதிகமாக இருப்பதாலும், ஈரோடு தொகுதியில் பாமகவுக்கு போதிய ஆதரவு இல்லை என்பதாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல், அண்மை காலமாக திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்களும், செயல்பாடுகளையும் வெளிக்காட்டி வரும் பாமக, அதிமுகவை நேரடியாக சீண்டி வருகிறது. இதனால், 2024ல் திமுக கூட்டணியில் இடம்பிடிக்க பாமக முயற்சி செய்து வருவதாக கருத்துக்கள் எழுந்தன.

தற்போது, 2021ல் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவிப்பதற்கான காரணம் என்ன..? என்ற கேள்வியும், பாமகவின் இந்த நிலைப்பாடு திமுகவை மறைமுகமாக ஆதரிப்பது போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!