குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை ; தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
22 August 2022, 1:22 pm
Quick Share

குடும்ப தலைவிகளுக்கு மாதாந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், கடந்த 10-ந் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் ரூ.10,700 கோடியிலான புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் அடங்கிய அறிக்கையை அவர் வாசித்ததாவது :- குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால் குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும். உர விற்பனை அதிகரிக்கக் காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும், கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு, இளைஞர் நலன் துறை தனியாகத் துவங்கப்படும்.

புதுச்சேரியில் தேசிய சட்டப்பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவங்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார். 12.5 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மரச்செக்கு என்னைத் தயாரித்து அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும், அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் பொலிவுறு வகுப்புகளாக மாற்றப்படும். தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும். புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும், காலியாக உள்ள 50 தீயணைப்பு வீரர்கள் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தீயணைப்புத் துறைக்கு 31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் நிரந்த தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் மீன் ஏலக்கூடம் உருவாக்கப்படும், காரைக்கால் முகத்துவாரம் ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரி மாநிலத்தில் சாகர்மால திட்டத்தின் கீழ் மிதக்கும் படகுத் துறைகள் அழைக்கப்படும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்டப்படும்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள ஆவணங்கள், சொத்துக்களை டிஜிட்டல் செய்து பாதுகாக்கப்படும், புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.1 கோடி வழங்கி வந்த நிலையில் அதை ரூ.2 கோடி வரை உயர்த்தப்படும், புதுச்சேரி காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்படும்.

இந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு உதவி தொகை 1,729 கோடி ரூபாய் வழங்க உள்ளது. மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாய், மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியில் கடன் திரட்ட 1,889 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கல்வி துறைக்கு ரூ. 802 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வி துறை மேம்படுத்தப்படும். புதுச்சேரி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் அரிய வகை ஆலீவ் ரெட்லி ஆமைகளை காக்க புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 முட்டை பொறிப்பகம் அமைக்கப்படும்.

காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியியல் மையம் அமைக்கப்படும். மாநிலத்தில் நடமாடும் கால்நடைமையம் அமைக்கப்படும். காரைக்காலில் ஒரு மருத்துவ கல்லூரி துவங்கப்படும், புதிதாக 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும். புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும். சென்னை- புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை தொடங்கப்படும் காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு துவங்கப்படும். அனைத்து காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையம் துவங்கப்படும். அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிக்கும் தலா 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Views: - 1230

0

0