தமிழக நிறுவனங்களை திமுக அரசு கை விட்டதா…? இதுல இந்தி வேறயா..? பொங்கல் தொகுப்பில் வெடித்த சர்ச்சை..!

Author: Babu Lakshmanan
6 January 2022, 6:12 pm
Quick Share

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பண்டிகை பொங்கல். இதையொட்டி கடந்த 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம்
சுமார் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொங்கலும்.. ரொக்கமும்..

கடந்த பொங்கல் பண்டிகையின்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தது. இதனால் இயல்பாகவே தமிழக மக்கள் 2021-ம் ஆண்டுடன், 2022 பொங்கலை ஒப்பிட்டுப் பார்ப்பது இயல்பான ஒன்றுதான்.

கடந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2,500 ரூபாய் ரொக்கமும், பொங்கல் பரிசுத் தொகுப்பாக 125 ரூபாய் மதிப்புள்ள பச்சரிசி, சர்க்கரை, செங்கரும்பு உள்ளிட்ட
6 பொருட்களும் வழங்கப்பட்டது.

சுவையில்லா பொங்கல்

இந்த ஆண்டு திமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், நெய், செங்கரும்பு
உள்பட 625 ரூபாய் மதிப்பு கொண்ட 20 பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இப்படி இந்த இரண்டு பொங்கலையும் மக்கள் எடை போடுவது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்தாண்டு பொங்கலுக்கு பரிசுப் பணம் எதுவும் வழங்கப்படவில்லையே என்ற அதிருப்தி பரவலாக மக்களிடம் காணப்படுவதை உணரமுடிகிறது.

ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா பரவலால் மக்கள் வாழ்வாதாரம் இழந்ததால் அதை மனதில் கொண்டு அப்போதைய அதிமுக அரசு பொங்கலை கொண்டாட 2500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.

இப்போதும் நிலைமை ஒன்றும் அவ்வளவாக மாறிவிடவில்லை. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்கள், இக்கட்டான சூழலில்தான் இன்றும் அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். எனவே திமுக அரசு பொங்கலுக்கு பரிசுப் பணம் அறிவித்திருக்கவேண்டும் என்பது தமிழக மக்களின் ஆதங்கமாக உள்ளது.

தமிழக நிறுவனங்கள் புறக்கணிப்பா..?

அதேநேரம் இந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் தொடர்பாக, வேறு சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன.

பொங்கல் பரிசு தொகுப்புக்காக தமிழக அரசு கொள்முதல் செய்துள்ள பெரும்பாலான அத்தியாவசிய பொருட்கள் குஜராத், மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 20 பொருட்களில் தமிழகத்தில் செங்கரும்பும், உப்பும் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வீட்டு சமையலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் பல இருந்தும் இந்தப் பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோல் ஒரு நிறுவனத்திடமிருந்து பொருட்களை கொள்முதல் செய்யும்போது, அந்த நிறுவனம் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருக்கவேண்டும் என்பது ஜிஎஸ்டி விதிமுறை.

ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புனே நகரில் தொடங்கப்பட்ட ஒரு புதிய நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடனேயே சமையலுக்குத் தேவையான பொருட்களை தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனம் 1.10 கோடி ரூபாயும், இன்னொரு பிரபல நிறுவனம் 5 கோடி ரூபாயும் கொரோனா நிவாரண நிதியாக வழங்கின. அதனால் அந்த நிறுவனங்களிடம் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து இருக்கலாம். ஆனால் தமிழக நிறுவனங்கள் எதிலும் ஒரு பொருள் கூட வாங்கப்படவில்லை. அவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இப்படி தமிழக நிறுவனங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்பதால் பொருட்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல பொருட்களின் பாக்கெட்டுகள் மீதும் இந்தியில் வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. திமுக அரசு இந்தியை திணிக்கக்கூடாது என்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறது. ஆனால் இப்போது இரண்டே கால் கோடி வீடுகளில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எங்கு போனது தமிழ்ப்பற்று..?

இது தொடர்பாக தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தமிழக அரசுக்கு சில கிடுக்குப்பிடி கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்.

“தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகத்தில் தயாரிப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்த திமுக அரசு, பொங்கல் பையுடன் வழங்கப்படும் 20 பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் தயாரிக்கும் நிறுவனங்களிடத்தில் வாங்காமல் குஜராத் உள்ளிட்ட வெளிமாநில நிறுவனங்களிடத்தில் வாங்குவதன் மர்மம் என்ன?

உப்பை மட்டும் தமிழக நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதன் ரகசியம் என்ன? அவை அனைத்திலும் இந்தியில் எழுதப்பட்டிருக்கிறதே? ஒரு வேளை, திமுகவினர் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறார்களோ? அல்லது அங்கே தான் பேரம் படிந்ததா? ஏன்? தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? சென்ற வருடம் பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டிய திமுக, இந்த வருடம் அதே நிறுவனங்களிடம் கொள்முதல் செய்துள்ளதா?அப்படி செய்திருந்தால் எதிர்க்கட்சியாக இருந்தபோது சொன்ன குற்றச்சாட்டு தவறு என்று ஒப்பு கொள்கிறதா? அது சரியென்றால் இப்போது ஊழல் நடந்துள்ளதா?…

மேலும், வழங்கப்படும் 21பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன? கடந்த வருடம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது? கடந்த வருடம் எந்தெந்த நிறுவனங்கள் இந்த பொருட்களை அளித்தன? இந்த வருடம் எந்த நிறுவனங்களிடம் வாங்கப்பட்டது போன்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

பெண்களின் வருவாய் உயர்ந்திருக்கும்

சமூக ஆர்வலர்கள் கூறும் போது, “சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது தொழில் துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்திருந்தார். ஆனால் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் வரை வெளிமாநிலங்களில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தில் சமையலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பல இருக்கின்றன. இவற்றில் சில கிராமப்பகுதிகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்தும் வருகின்றன. குடிசைத் தொழில் போல மசாலா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. இதுபோன்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்காக பொருட்களை கொள்முதல் செய்து இருக்கலாம். அதன் மூலம் இந்த கொரோனா பரவல் காலத்தில் கிராமப்புற ஏழை பெண்களுக்கு இன்னும் வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கும். அவர்களின் வருவாய் ஆதாரமும் பெருகியிருக்கும்.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா பரவலை காரணம்காட்டி, பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இப்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு பொங்கலுக்காக ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. அதனால் இந்த பொங்கல் தமிழக மக்களுக்கு எல்லாவகையிலும் ஏமாற்றமளிக்கும் ஒன்றுதான்” என அந்த சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

Views: - 566

0

0