CM ஸ்டாலினே நினைச்சாலும் கேரளாவில் மட்டும் வாய்ப்பே இல்ல.. ஆனால், தமிழகத்தில் அப்படி இல்ல ; பிரேமலதா விஜயகாந்த் பாய்ச்சல்

Author: Babu Lakshmanan
15 September 2023, 8:45 am
Quick Share

இரு வருடங்கள் கழித்து நாளை மகளிருக்கு 1000ரூபாய் வழங்குவது நாடாளுமன்ற தேர்தலுக்காகதான் என்று தேமுதிக முப்பெரும் விழா பொதுகூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக மதுரை செல்லூர் பகுதியில் 19ஆம் ஆண்டு கட்சி துவக்க விழா மற்றும் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு முப்பெரும் விழா கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, துவரம்பருப்பு, பாசிபருப்பு, கடலைபருப்பு, நாட்டுசக்கரை, உப்பு, 8 வகை பொருட்களும், 50 பேருக்கு தையல் மெஷின் ஆகியவை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

பின்னர், தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது :- 2005 ஆம் ஆண்டு கேப்டன் அவர்களால் மதுரையில் மாபெரும் மாநாட்டை கூட்டி தேமுதிக என்ற கட்சியை துவங்கினார். அதை விட பிரமாண்டமாக விரைவில் மதுரையில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும். முப்பெரும் விழாவாக நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, மதுரை என்றாலே 24 மணி நேரமும் தூங்காத நகரம், மதுரையில் நான் செல்லாத வீதி இல்லை, சந்திக்காத மக்கள் இல்லை என்கிற அளவில் மதுரையின் மருமகளாக என்றும் மக்கள் பணியாற்ற உங்களோடு பயணிப்பேன்.

கேப்டன் நலமுடன் உள்ளார். அவருடன் தான் தொலைபேசியில் தற்போது பேசினேன். மதுரையின் மீது என்றும் பற்றோடு உள்ளார். குறிப்பாக தன்னலமற்ற தொண்டர்கள் கிடைத்தது தேமுதிகவிற்கு பாக்கியம், இன்றும் வீரநடை போட்டு கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மீம்ஸ்கள், சாமானிய மக்கள் என பலரும் கேப்டன் நல்லா இருந்தால் அவர்தான் முதல்வர் என்கிறார்கள். 40 ஆண்டுகால உழைப்பிற்கும், உதவிக்கும் அவருக்கு ஏன் ஆதரவு தராமல் விட்டீர்கள் என கேள்வி எழுப்பினார். கேப்டன் மீண்டும் வருவார். இன்றைக்கு ஓய்வில் இருக்கும் போது கேப்டனுக்கு ஆதரவு தருகிறோம் என் மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.

இன்றைக்கு யார் யாரோ சனாதன பற்றி பேசி வருகிறார்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், மக்களை பாகுபாடு இன்றி தங்கதட்டில் தாங்க வேண்டும் என்று கேப்டன் என்றும் கூறுவார். சினிமாவில் நடிகர் தான் கேப்டன் விஜயகாந்த். சினிமாவில் மட்டும் தான் நடிப்பார், மக்கள் முன் தர்மனாக, கர்ணனாக இருந்து வருகிறார்.

கண்ணின் இமை போல கேப்டன் விஜயகாந்த்-ஐ தொண்டர்களுக்காக காப்பாற்றி வந்து கொண்டு வருகிறேன். எந்த சலசலப்பும் நம்மையும் நம் கட்சியையும் ஒன்று செய்ய முடியாது. இரண்டு வருடங்களுக்கு மேலாக வழங்காமல் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நாளைக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்க உள்ளனர், மக்களுடைய வரி பணத்தில் 1000 ரூபாய்யை வழங்கி, டாஸ்மாக் கடைகள் மூலம் 5000, 4000 ரூபாயை பிடுங்கி கொள்கின்றனர். பெண்களுக்காக ஆட்சி நடத்தாமல் தேர்தலுக்காக அரசியல் நடத்துகின்றனர்.

சொத்து வரி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டோல்கேட் விலை உயர்வு போன்ற பல பிரச்சனைகளை அன்றாடம் மக்கள் சந்தித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் ரவுடிசம் அதிகரிக்கும் என்பதற்கு உதாரணமாக இன்று பட்ட பகலில் கொலை, கொள்ளை போன்ற பலவும் நடைபெற்று வருகிறது. கர்நாடக அரசு நிச்சயமாக தண்ணீர் தரமாட்டோம் என்றும், மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என கூறுகின்றனர். முதல்வர் நேரில் சென்று முறையாக கர்நாடக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று வர வேண்டும்.

மக்கள் வரிப்பணத்தை சுரண்டியவர்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வரும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தேமுதிக சார்பில் ராயல் சல்லுட் வழங்குகிறேன். தமிழக முதல்வர் நினைத்தாலும் கேரளாவில் இருந்து ஒரு லாரி மணலை தமிழகத்திற்கு கொண்டு வர முடியாது. அப்படியாக அம்மாநிலம் கனிம வளங்களை பாதுகாத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் கனிமவளம் கொள்ளை அதிகரித்து வருகிறது.

அமலாக்கத்துறை முதலில் நீங்கள் ரெய்டு போக வேண்டிய இன்றைய அமைச்சர் துறைமுருகன் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். ரமணா பாணியில் ஆட்சி நடத்த தயாராக இருந்த கேப்டனுக்கு வாய்ப்பு குடுக்காமல் விட்டுடீங்க.

பாரத் என்ற பெயர் மாற்றம் தற்போது பெரும் சர்ச்சையை கிளம்பி உள்ளது. இந்தியா என்ற நாட்டின் பெயரை ஒரு கூட்டணிக்கு வைக்கக் கூடாது, அதனை தேர்தல் ஆணையமும் அனுமதிக்கக் கூடாது. அதேபோல், இந்தியாவை பாரத் என்ற பெயர் மாற்றம் செய்யாமல் இந்தியா என்றே இருக்க வேண்டும். சனாதனத்தை வைத்து மற்ற கட்சிகள் அரசியல் செய்கின்றது என்று உதயநிதி ஸ்டாலின் தற்போது கூறி வருகிறார். இந்த பிரச்சினையை முதலில் துவங்கியதே உதயநிதி தான்.

எந்த மதத்தில் தான் மூட நம்பிக்கை இல்லை, இந்து, இஸ்லாம், கிருத்துவ மதம் என அனைத்து மதத்திலும் மூட நம்பிக்கை , தனித்தனி உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பலவும் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உதயநிதி யோசித்து பேசுங்கள், இளைஞராக உள்ள உதயநிதி இன்னும் பழைய கால அரசியலை கடைப்பிடிக்க வேண்டியது இல்லை.

கொசு, டெங்கு ஒழித்து விட்டோம் என்று தெரிவிக்கும் உதயநிதி சொல்லுவது யாரோ எழுதி கொடுப்பதாக தெரிகிறது. டெங்கு மரணங்கள் தமிழகத்தில் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. காவல்துறை மக்கள் நண்பர்கள் தான், காவல்துறை நியாயத்தின் பக்கம் நின்று பணியாற்றுங்கள். நானே IPS படிக்க வேண்டி இருந்தேன், எனக்கும் போலீசார் பணிகள் நன்றாக தெரியும்.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டு தனமாக பேசுவதை விடுத்து, மாணவர்கள் வசதிக்கு தேவையான விளையாட்டு மைதானங்களை அமைத்து வீரர்களை உருவாக்குங்கள். தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் கேப்டன் அறிவிப்பார், என தெரிவித்தார்.

Views: - 205

0

0