குளறுபடிகளின் உச்சம்… அண்ணா பல்கலை., பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்குக ; ராமதாஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
20 December 2023, 9:49 pm
Quick Share

சென்னை ; அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் காலியாகவுள்ள 232 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளின் விண்ணப்ப நடைமுறையில் விவரிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தகுதியும், அனுபவமும் கொண்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை தடுப்பதற்காகவே இத்தகைய குழப்பங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றனவோ என்ற ஐயமும், கவலையும் எழுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் அரியலூர், ஆரணி, திண்டுக்கல், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட 13 நகரங்களில் செயல்பட்டு வரும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளிலும், மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல வளாகங்களிலும் காலியாக உள்ள 205 உதவிப் பேராசிரியர்கள், 14 உதவி நூலகர்கள், 13 உடற்கல்வி உதவி இயக்குனர்கள் பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க நவம்பர் 29&ஆம் தேதி முதல் திசம்பர் 13&ஆம் நாள் வரை ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றின் காகித வடிவிலான விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் தாக்கல் செய்ய திசம்பர் 18&ஆம் நாள் கடைசி நாளாகும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பான்மையினரால் விண்ணப்ப நடைமுறையை நிறைவேற்ற முடியவில்லை.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கே ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும் நிலையில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க 14 நாட்கள் மட்டுமே காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. விண்ணப்பம் செய்வதற்கும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்குமான அண்ணா பல்கலைக்கழக இணையதளம் பல நேரங்களில் முடங்கி விட்டது. அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் காலத்தில் தான் சென்னை புறநகர் பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் கடுமையான மழை & வெள்ளம் ஏற்பட்டது. இயற்கை சீற்றங்களையும், தொழில்நுட்பக் கோளாறுகளையும் கருத்தில் கொண்டு, விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்திருக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் அதை செய்யவில்லை. அது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.

இவற்றை விட இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவது, உதவிப் பேராசிரியர் பணிக்கு அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வருவோரில் பெரும்பான்மையினரை விண்ணப்பிக்க விடாமல் சதித்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது தான். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 232 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையே சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி தான் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கில் தான் 232 உதவிப் பேராசிரியர்களை நியமிக்கலாம்; நேர்முகத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு தகுதி மதிப்பெண்களில் தற்காலிக பேராசிரியர்களுக்கு 5% சலுகை வழங்கப்படும், நேர்முகத் தேர்விலும் தற்காலிக பேராசிரியர்களுக்கு ஓர் ஆண்டு அனுபவத்திற்கு ஒரு மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 5 மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியதாகும்.

தற்காலிக ஆசிரியர்கள் இத்தகைய மதிப்பெண் சலுகையை பெற அவர்கள் பணியாற்றிய காலத்திற்கான அனுபவச் சான்றிதழையும், தடையின்மை சான்றிதழையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பான்மையான கல்லூரிகளில் பணியாற்றிய தற்காலிக பேராசிரியர்களுக்கு இந்த சான்றுகளை வழங்குவதில் தாமதம் செய்யப்பட்டது. பலருக்கு சான்றிதழ்களின் நகல்கள் மட்டுமே வழங்கப்பட்டன; உண்மைச் சான்றிதழ்கள் பலருக்கு நேற்று தான் கிடைத்திருக்கிறது, இன்னும் பலருக்கு இன்று தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது அவற்றை கடந்த 18&ஆம் தேதியே அண்ணா பல்கலைக்கழகத்திடம் அவர்கள் எவ்வாறு தாக்கல் செய்ய முடியும்?

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள், அங்கு நிரந்தரமான உதவிப் பேராசிரியர்களாக வந்து விடக் கூடாது என்பதற்காகவே சில புல முதல்வர்கள் இவ்வாறு செய்கிறார்களோ? என்று ஐயப்படுவதற்கு அனைத்து காரணங்களும் உள்ளன. இந்தக் குளறுபடிகளால் தகுதியும், அனுபவமும் உள்ள தற்காலிக பேராசிரியர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுதொடர்பான குளறுபடிகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு.

எனவே, இந்த சிக்கலில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் தலையிட்டு, அனைத்து குளறுபடிகளையும் சரி செய்வதுடன், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை திசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன், என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 238

0

0